நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: டேவிட் மலான் சதத்தால் இங்கிலாந்து அபார வெற்றி


நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: டேவிட் மலான் சதத்தால் இங்கிலாந்து அபார வெற்றி
x
தினத்தந்தி 8 Nov 2019 11:22 PM GMT (Updated: 8 Nov 2019 11:22 PM GMT)

நியூசிலாந்துக்கு எதிரான 4-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் டேவிட் மலான் சதத்தால் இங்கிலாந்து அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

நேப்பியர்,

இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் இடையிலான 4-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நேப்பியரில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் குவித்து மலைக்க வைத்தது. 20 ஓவர் போட்டியில் இங்கிலாந்து அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

தனது முதலாவது சதத்தை அடித்த டேவிட் மலான் 51 பந்துகளில் 9 பவுண்டரி, 6 சிக்சருடன் 103 ரன்களும் (நாட்-அவுட்), கேப்டன் இயான் மோர்கன் 91 ரன்களும் (41 பந்து, 7 பவுண்டரி, 7 சிக்சர்) விளாசினர். சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் சதம் அடித்த 2-வது இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை மலான் பெற்றார். 3-வது விக்கெட்டுக்கு மலான்-மோர்கன் ஜோடி 182 ரன்கள் சேர்த்து அசத்தியது. 20 ஓவர் போட்டியில் ஒரு விக்கெட்டுக்கு இங்கிலாந்து இணை சேர்த்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

பின்னர் இமாலய இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்து 16.5 ஓவர்களில் 165 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. இதனால் இங்கிலாந்து அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக டிம் சவுதி 39 ரன்னும், காலின் முன்ரோ 30 ரன்னும் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் மேட் பார்கின்சன் 4 விக்கெட்டும், வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் ஜோர்டான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டித் தொடரில் 2-2 என்ற கணக்கில் சமநிலையை எட்டியது. கடைசி ஆட்டம் ஆக்லாந்தில் நாளை நடக்கிறது.


Next Story