கிரிக்கெட்

“ஒரே ஓவரில் 6 சிக்சர் அடிக்க திட்டமிட்டேன்” - இந்திய பொறுப்பு கேப்டன் ரோகித் சர்மா பேட்டி + "||" + "I plan to hit 6 sixes in one over" - Interview with Rohit Sharma, Indian Responsibility Captain

“ஒரே ஓவரில் 6 சிக்சர் அடிக்க திட்டமிட்டேன்” - இந்திய பொறுப்பு கேப்டன் ரோகித் சர்மா பேட்டி

“ஒரே ஓவரில் 6 சிக்சர் அடிக்க திட்டமிட்டேன்” - இந்திய பொறுப்பு கேப்டன் ரோகித் சர்மா பேட்டி
வங்காளதேசத்துக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஒரே ஓவரில் தொடர்ச்சியாக 6 சிக்சர்கள் அடிக்க திட்டமிட்டதாக இந்திய அணியின் பொறுப்பு கேப்டன் ரோகித் சர்மா கூறினார்.
ராஜ்கோட்,

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நேற்று முன்தினம் இரவு நடந்த 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தியது. இதில் வங்காளதேசம் நிர்ணயித்த 154 ரன்கள் இலக்கை இந்திய அணி 15.4 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. இந்திய பொறுப்பு கேப்டன் ரோகித் சர்மா 43 பந்துகளில் 6 பவுண்டரி, 6 சிக்சருடன் 85 ரன்கள் நொறுக்கி ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.


இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையை அடைந்துள்ளது. 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி நாக்பூரில் நாளை இரவு 7 மணிக்கு நடக்கிறது.

ஆட்டம் முடிந்ததும் ரோகித் சர்மாவிடம், சக வீரர் யுஸ்வேந்திர சாஹல் பேட்டி கண்டார். அப்போது சர்வ சாதாரணமாக சிக்சர் அடிப்பதன் ரகசியம் என்ன? என்ற கேள்விக்கு ரோகித் சர்மா பதில் அளித்து கூறியதாவது:-

சிக்சர் அடிப்பதற்கு மிகவும் பலசாலியாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. நீங்கள் கூட (யுஸ்வேந்திர சாஹல்) சிக்சர் அடிக்க முடியும். பந்தை சிக்சருக்கு விரட்டுவதற்கு பலம் மட்டும் போதாது. பந்தின் வேகத்தையும், அது வரும் கோணத்தையும் சரியான நேரத்தில் கணித்து ஆட வேண்டும். தலையும், உடலும் சரியான நிலையில் இருக்க வேண்டும். பந்து பேட்டின் நடுபகுதியில் பட வேண்டும். இவை எல்லாம் கச்சிதமாக அமைந்தால் நீங்களும் சிக்சர் அடிக்கலாம்.

சுழற்பந்து வீச்சாளர் மொசாடெக் ஹூசைனின் பந்து வீச்சில் தொடர்ச்சியாக 3 சிக்சர் அடித்த போது, எஞ்சிய 3 பந்துகளையும் சிக்சராக்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் உதித்தது. பந்து ஈரமாகி விட்டது, அதனால் அதிகமாக சுழன்று திரும்பாது என்பதை அறிந்து கிரீசை விட்டு வெளியே வராமல் அதே இடத்தில் நின்றபடி விளாச முயற்சித்தேன். ஆனால் 4-வது பந்தை தவற விட்டதும், ஒன்று, இரண்டு வீதம் ரன் எடுக்க முடிவு செய்தேன்.

இலக்கை விரட்டும் போது யாராவது ஒரு பேட்ஸ்மேன் நீண்ட நேரம் நிலைத்து நின்று ஆட வேண்டியது முக்கியமாகும். அந்த பணியை நான் நிறைவு செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. முதலாவது ஆட்டத்தில் தோற்றதால் எங்களுக்கு கொஞ்சம் நெருக்கடி ஏற்பட்டது. ஆனால் இந்த ஆட்டத்தில் அணிக்கு தேவையான எல்லாவற்றையும் சரியாக செய்தோம். இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. ‘எனது மகனின் கிரிக்கெட் வாழ்க்கையை முடித்து விட்டாயே’ - ஸ்டூவர்ட் பிராட்டின் தந்தை தன்னிடம் புலம்பியதாக யுவராஜ் தகவல்
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து பவுலர் ஸ்டூவர்ட் பிராட்டின் ஒரே ஓவரில் 6 சிக்சர் விளாசிய போது அவரது தந்தை, எனது மகனின் கிரிக்கெட் வாழ்க்கையை முடித்து விட்டாயே என்று தன்னிடம் புலம்பியதாக யுவராஜ்சிங் கூறியுள்ளார்.