ஐ.சி.சி.யின் முடிவுக்கு இங்கிலாந்து எதிர்ப்பு


ஐ.சி.சி.யின் முடிவுக்கு இங்கிலாந்து எதிர்ப்பு
x
தினத்தந்தி 9 Nov 2019 11:38 PM GMT (Updated: 9 Nov 2019 11:38 PM GMT)

ஐ.சி.சி.யின் முடிவுக்கு இங்கிலாந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) 2023-ம் ஆண்டு முதல் 2031-ம் ஆண்டு வரைக் கான வருங்கால போட்டி அட்டவணைக்கான பரிந்துரையை அண்மையில் வெளியிட்டது. இதில் ஒவ்வொரு ஆண்டும் உலக அளவிலான போட்டி இருக்கும் வகையில் கூடுதலாக இரண்டு ஐ.சி.சி. தொடர்கள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஐ.சி.சி.யின் இந்த முடிவுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் தங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதுடன், ஏற்கனவே ஒப்பந்தம் செய்து கொண்ட இரு நாட்டு தொடர்களை நடத்துவதிலும் சிக்கல் உருவாகும் என்றும் ஆட்சேபித்தது. ஆஸ்திரேலியாவும் அதிருப்தி தெரிவித்தது.

இந்த நிலையில் ஐ.சி.சி.யின் முடிவுக்கு நஆதரவு அளிக்கமாட்டோம் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமும் போர்க்கொடி தூக்கியுள்ளது. இந்த ஐ.சி.சி. தொடர்களால் இரு நாட்டு போட்டிகள் பெரிய அளவில் பாதிக்கப்படும் என்றும், அதிக போட்டிகளில் விளையாடும் போது வீரர்களின் நலனும் பாதிக்கப்படும் என்றும் ஐ.சி.சி.க்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய சேர்மன் காலின் கிரேவ் அனுப்பிய இ-மெயிலில் குறிப்பிட்டுள்ளார்.

மூன்று முன்னணி கிரிக்கெட் வாரியங்களின் எதிர்ப்பு ஐ.சி.சி.க்கு பலத்த பின்னடைவாக கருதப்படுகிறது. இதனால் தங்களது திட்டத்தை ஐ.சி.சி. மாற்றலாம் என்று தெரிகிறது.


Next Story