சையத் முஸ்தாக் அலி கோப்பை கிரிக்கெட்: தமிழக அணி 2-வது வெற்றி


சையத் முஸ்தாக் அலி கோப்பை கிரிக்கெட்: தமிழக அணி 2-வது வெற்றி
x
தினத்தந்தி 10 Nov 2019 12:00 AM GMT (Updated: 10 Nov 2019 12:00 AM GMT)

சையத் முஸ்தாக் அகமது அலி கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை தோற்கடித்து 2-வது வெற்றியை பெற்றது.

தும்பா,

11-வது சையத் முஸ்தாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 37 அணிகள் 5 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.

கேரள மாநிலம் தும்பாவில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் தமிழக அணி, ராஜஸ்தானை (பி பிரிவு) சந்தித்தது. ‘டாஸ்’ ஜெயித்த ராஜஸ்தான் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த தமிழக அணி 5 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் சேர்த்தது. கேப்டன் தினேஷ் கார்த்திக் 48 ரன்னும் (30 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்), முரளி விஜய் 35 ரன்னும், ஜெகதீசன் 34 ரன்னும் விளாசினர்.

தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 116 ரன்களே எடுத்தது. இதனால் தமிழக அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தமிழக அணி தரப்பில் சாய் கிஷோர் 3 விக்கெட்டும், ஜி.பெரியசாமி, நடராஜன், முருகன் அஸ்வின், விஜய் சங்கர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். தமிழக அணி தொடர்ந்து பெற்ற 2-வது வெற்றி இதுவாகும். தனது முதலாவது ஆட்டத்தில் கேரளாவை வீழ்த்தி இருந்தது.

விசாகப்பட்டினத்தில் நடந்த ‘ஏ’ பிரிவு ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனான கர்நாடக அணி, பரோடாவை எதிர்கொண்டது. முதலில் ஆடிய பரோடா அணி 4 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது. 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆடிய கர்நாடக அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 182 ரன்களே எடுத்தது. இதனால் பரோடா அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் கர்நாடகாவை வீழ்த்தியது. வேகப்பந்து வீச்சாளர் லுக்மன் மெரிவாலா 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இந்த தோல்வியின் மூலம் 20 ஓவர் போட்டியில் தொடர்ச்சியாக 15 ஆட்டங்களில் வெற்றி பெற்ற கர்நாடக அணியின் வீறுநடை முடிவுக்கு வந்தது.


Next Story