கிரிக்கெட்

தொடரை வெல்லப்போவது யார்? - கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா-வங்காளதேசம் இன்று மோதல் + "||" + Last T20 at the India-Bangladesh cricket clash today

தொடரை வெல்லப்போவது யார்? - கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா-வங்காளதேசம் இன்று மோதல்

தொடரை வெல்லப்போவது யார்? - கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா-வங்காளதேசம் இன்று மோதல்
இந்தியா-வங்காளதேசம் அணிகள் இடையிலான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
நாக்பூர்,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் டெல்லியில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசமும், ராஜ்கோட்டில் நடந்த 2-வது ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் இந்த தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.


இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையே தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் இன்றிரவு நடக்கிறது. 


 தொடக்க ஆட்டத்தில் பேட்டிங்கிலும், கடைசிகட்ட பந்து வீச்சிலும் கோட்டை விட்ட இந்திய அணி 2-வது ஆட்டத்தில் சுதாரிப்போடு விளையாடி வெற்றிக்கனியை பறித்தது. கேப்டன் ரோகித் சர்மா 6 சிக்சருடன் 85 ரன்கள் குவித்து அசத்தினார். யுஸ்வேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர் சுழலில் மிரட்டினர். இன்றைய ஆட்டத்திலும் அதே உத்வேகத்துடன் ஆடி தொடரை வசப்படுத்தும் ஆர்வத்தில் உள்ளனர். இரண்டு ஆட்டங்களிலும் வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது ரன்களை வாரி வழங்கியுள்ளார். அனேகமாக இந்த ஆட்டத்தில் அவர் மாற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய இளம் வீரர் ரிஷாப் பண்ட் விக்கெட் கீப்பிங்கிலும், பேட்டிங்கிலும் அவ்வப்போது தடுமாறுகிறார். இது குறித்து இந்திய பொறுப்பு கேப்டன் ரோகித் சர்மாவிடம் நிருபர்கள் நேற்று கேள்வி எழுப்பிய போது, ‘ரிஷாப் பண்ட் 22 வயதான ஒரு இளம் வீரர். இப்போது தான் சர்வதேச கிரிக்கெட்டில் முத்திரை பதிக்க முயற்சிக்கிறார். அதற்குள் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் அவர் குறித்து நிறைய விமர்சனம் செய்கிறார்கள். இது நியாயமல்ல. களத்தில் அவர் என்ன செய்ய விரும்புகிறாரோ? அதை சுதந்திரமாக செய்ய அனுமதிக்க வேண்டும். ரிஷாப் பண்ட் மீது அதிக கவனம் செலுத்துவதை தவிர்க்கும்படி உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். அவர் அச்சமின்றி விளையாடக்கூடிய ஒரு வீரர். அவர் களத்தில் எந்தவித நெருக்கடியும் இன்றி விளையாட வேண்டும் என்று நாங்கள் (அணி நிர்வாகம்) விரும்புகிறோம். நீங்கள் அவரை சிறிது காலம் கண்டு கொள்ளாமல்விட்டு விட்டால் போதும். அது அவர் இன்னும் சிறப்பாக செயல்பட வழிவகுக்கும்.

ரிஷாப் பண்ட், ஸ்ரேயாஸ் அய்யர் உள்ளிட்டோரிடம் அபாரமான திறமை இருக்கிறது. இந்திய கிரிக்கெட்டில் அவர்களுக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது’ என்றார்.

மேலும் ரோகித் சர்மா கூறுகையில், ‘சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அருமையாக பந்து வீசினார். அதன் பிறகு இந்திய அணிக்குள் நுழைந்து ஒரு நாள் போட்டியில் கடந்த 2 ஆண்டுகளாக சீரான ஆட்டத்தை வெளிப்படுத்துவதுடன் அணியில் முக்கியமான வீரர்களில் ஒருவராக இருக்கிறார்.

தற்போது இந்த 20 ஓவர் தொடரில், மிடில் ஓவர்களில் எப்படி திறம்பட பந்து வீச முடியும் என்பதை நிரூபித்து காட்டியிருக்கிறார். பேட்ஸ்மேன் எந்த மாதிரி விளையாட முயற்சிக்கிறார் என்பதை துல்லியமாக கண்டறிந்து அதற்கு ஏற்ப பந்து வீசுகிறார். அதனால் தான் அவரது பந்து வீச்சு பேட்ஸ்மேன்களுக்கு அதிக சவால் அளிக்கிறது. மிடில் ஓவர்களிலும் ஏன் ‘பவர்-பிளே’யில் கூட சிறப்பாக பந்து வீசுகிறார். கடைசி கட்டத்தில் பந்து வீசுவதற்கு கூட தயங்குவது கிடையாது.’ என்றார்.

மக்முதுல்லா தலைமையிலான வங்காளதேச அணி முதல் ஆட்டத்தை போன்று மீண்டும் ஒரு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கும் வேட்கையுடன் காத்திருக்கிறது. முஷ்பிகுர் ரஹிம், மக்முதுல்லா, சவுமியா சர்கார் ஆகியோரின் பேட்டிங்கை தான் அந்த அணி நிர்வாகம் அதிகமாக சார்ந்து இருக்கிறது. 

 வங்காளதேச பயிற்சியாளர் ரஸ்செல் டொமிங்கோ கூறுகையில், ‘இந்த தொடருக்கு 2 வாரங்களுக்கு முன்பு எங்களுக்கு கடினமான காலக்கட்டமாக இருந்தது. அதை கடந்து களத்தில் எங்களது வீரர்கள் காட்டிய ஆர்வமும், செயல்பாடும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. 2 வாரத்திற்கு முன்பு, நாக்பூருக்கு செல்லும் போது 1-1 என்று சமநிலையில் இருப்போம் என்று சொல்லியிருந்தால் யாரும் நம்பி இருக்கமாட்டார்கள். எனவே தற்போதைய நிலையே எங்களுக்கு மகிழ்ச்சி தான். இப்போது தொடரை வெல்ல நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. வீரர்களும் சாதிக்கும் துடிப்பில் உள்ளனர். எது எப்படியோ, இந்தியா உலகின் சிறந்த அணிகளில் ஒன்று என்பதை மறுக்க முடியாது. நாங்கள் எங்களது திறமைக்கு தக்கபடி விளையாடினால் வெற்றி வாய்ப்பு உள்ளது. யாராவது ஒரு பேட்ஸ்மேன் 70 அல்லது 80 ரன்கள் எடுக்க வேண்டியது அவசியமாகும்.

இந்திய அணியில் கணிசமான இடக்கை பேட்ஸ்மேன்கள் உள்ளனர். அதனால் ‘ஆப்ஸ்பின்’ பந்து வீச்சாளர்கள் மூலம் நெருக்கடி அளிக்கும் வியூகத்துக்கு முதலாவது ஆட்டத்தில் பலன் கிடைத்தது. 2-வது ஆட்டத்தில் அது கைகூடவில்லை. அதற்காக எல்லாவற்றையும் மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. இந்த அணி நீண்ட தூரம் பயணிக்க வேண்டி உள்ளது. போதிய அனுபவம் இல்லாத இந்திய பந்து வீச்சுக்கு எதிராக நன்றாக பேட்டிங் செய்தால், அவர்களை நெருக்கடிக்குள்ளாக்க முடியும்’ என்றார்.

நாக்பூரில் இதுவரை 11 இருபது ஓவர் ஆட்டங்கள் நடந்துள்ளன. இதில் முதலில் பேட்டிங் செய்த அணிகளே 8 முறை வெற்றி பெற்றுள்ளன. இதில் இந்திய அணி ஆடிய 3 ஆட்டங்களில் ஒன்றில் வெற்றியும் (இங்கிலாந்துக்கு எதிராக), 2-ல் தோல்வியும் (இலங்கை, நியூசிலாந்துக்கு எதிராக) கண்டுள்ளது.

2009-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக இலங்கை அணி 215 ரன்கள் குவித்தது இந்த மைதானத்தில் ஒரு அணியின் அதிகபட்சமாகும். 2016-ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா 79 ரன்னில் சுருண்டது மோசமான ஸ்கோராகும். பேட்டிங், பந்து வீச்சு இரண்டுக்கும் சவால் அளிக்கக்கூடிய ஒரு ஆடுகளமாக இது இருக்கும் என்பது இந்திய பொறுப்பு கேப்டன் ரோகித் சர்மாவின் கணிப்பாகும். இந்த ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சாளர்களின் தாக்கம் பெரிய அளவில் இருக்கும் என்று வங்காளதேச பயிற்சியாளர் கூறியிருக்கிறார்.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷாப் பண்ட், ஷிவம் துபே, குருணல் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், தீபக் சாஹர், கலீல் அகமது அல்லது ஷர்துல் தாகூர்.

வங்காளதேசம்: லிட்டான்தாஸ், முகமது நைம், சவுமியா சர்கார், முஷ்பிகுர் ரஹிம், மக்முதுல்லா (கேப்டன்), அபிப் ஹூசைன், மொசாடெக் ஹூசைன், அமினுல் இஸ்லாம், ஷபியுல் இஸ்லாம் அல்லது தைஜூல் இஸ்லாம், முஸ்தாபிஜூர் ரகுமான், அல்-அமின் ஹூசைன்.

இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.