பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீசை ஊதித்தள்ளியது இந்தியா


பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீசை ஊதித்தள்ளியது இந்தியா
x
தினத்தந்தி 11 Nov 2019 12:05 AM GMT (Updated: 11 Nov 2019 12:05 AM GMT)

செயின்ட்லூசியாவில் நடந்த முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, வெஸ்ட்இண்டீசை ஊதித்தள்ளியது. இளம் வீராங்கனை ஷபாலி குறைந்த வயதில் அரைசதம் அடித்த இந்தியரான சச்சின் தெண்டுல்கரின் சாதனையை தகர்த்தார்.

செயின்ட் லூசியா,

வெஸ்ட் இண்டீசுக்கு சென்றுள்ள இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடுகிறது. இதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது சர்வதேச 20 ஓவர் போட்டி செயின்ட்லூசியாவில் நேற்று முன்தினம் நடந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் கேப்டன் ஸ்டெபானி டெய்லர் காயம் காரணமாக விலகினார். அவருக்கு பதிலாக அனிசா முகமது அணியை வழிநடத்தினார்.

‘டாஸ்’ ஜெயித்த வெஸ்ட் இண்டீஸ் பொறுப்பு கேப்டன் அனிசா, முதலில் இந்தியாவை பேட்டிங் செய்ய அழைத்தார். இதையடுத்து இந்தியாவின் இன்னிங்சை ஷபாலி வர்மாவும், ஸ்மிர்தி மந்தனாவும் தொடங்கினர். இருவரும் வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். சினெலி ஹென்றியின் ஒரே ஓவரில் ஷபாலி 4 பவுண்டரியும், ஒரு சிக்சரும் பதம் பார்த்தார். முதல் 5 ஓவர்களில் இந்தியா 72 ரன்களை திரட்டி வியப்பூட்டியது. இதில் ஆக்ரோஷமாக ஆடிய ஷபாலியின் பங்களிப்பு மட்டும் 15 பந்தில் 40 ரன்கள் ஆகும்.

அதைத் தொடர்ந்து ஷபாலி தனது முதலாவது அரைசதத்தை பூர்த்தி செய்தார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் போட்டி ஒன்றில் குறைந்த வயதில் அரைசதம் அடித்த இந்தியர் என்ற சாதனையை படைத்தார். அவருக்கு இப்போது வயது 15 ஆண்டு 285 நாட்கள். இதற்கு முன்பு ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் தான் இந்திய தரப்பில் குறைந்த வயதில் (16 ஆண்டு 214 நாட்களில்) சர்வதேச போட்டியில் அரைசதம் அடித்தவராக (1989-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் 59 ரன்) வலம் வந்தார். அவரது 30 ஆண்டு கால சாதனையை ஹரியானாவைச் சேர்ந்த ஷபாலி முறியடித்துள்ளார். 5-வது ஓவருக்கு பிறகு இந்தியாவின் ரன்வேகம் கொஞ்சம் தளர்ந்தது. அதாவது 6-வது ஓவரில் இருந்து 15-வது ஓவர் வரை 64 ரன்கள் மட்டுமே எடுத்தனர். மந்தனாவும் தனது பங்குக்கு அரைசதத்தை கடந்தார்.

அணியின் ஸ்கோர் 143 ரன்களை (15.3 ஓவர்) எட்டிய போது இந்த ஜோடி பிரிந்தது. ஷபாலி 73 ரன்களில் (49 பந்து, 6 பவுண்டரி, 4 சிக்சர்) கேட்ச் ஆனார். ஷபாலி-மந்தனா கூட்டணி தொடக்க விக்கெட்டுக்கு சேர்த்த 143 ரன்களே, பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட்டில் விக்கெட் ஒன்றுக்கு இந்தியாவின் அதிகபட்சமாகும். மந்தனா 67 ரன்களில் (46 பந்து, 11 பவுண்டரி) வெளியேறினார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் குவித்தது.

அடுத்து களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு வெறும் 101 ரன்களில் அடங்கியது. இதன் மூலம் இந்தியா 84 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய தரப்பில் ஷிகா பாண்டே, ராதா யாதவ், பூனம் யாதவ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஷபாலி ஆட்டநாயகி விருதை பெற்றார். இந்த வெற்றியின் மூலம் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.


Next Story