பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணி அபார வெற்றி


பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணி அபார வெற்றி
x
தினத்தந்தி 12 Nov 2019 12:16 AM GMT (Updated: 12 Nov 2019 12:16 AM GMT)

வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய பெண்கள் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

செயின்ட்லூசியா,

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, வெஸ்ட்இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி செயின்ட்லூசியாவில் நேற்று முன்தினம் நடந்தது. காயம் காரணமாக வெஸ்ட்இண்டீஸ் அணியின் கேப்டன் ஸ்டெபானி டெய்லர் விளையாடாததால் அனிசா முகமது அணியை வழிநடத்தினார்.

‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட்இண்டீஸ் அணி, இந்திய வீராங்கனைகளின் சிறப்பான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியதுடன், விக்கெட்டுகளையும் இழந்தது. 20 ஓவர்களில் வெஸ்ட்இண்டீஸ் அணி 7 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக செடின் நேஷன் 32 ரன்னும், ஹெய்லி மேத்யூஸ் 23 ரன்னும், நாதஷா மெக்லின் 17 ரன்னும் எடுத்தனர். மற்ற வீராங்கனைகள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டம் இழந்தனர். இந்திய அணி தரப்பில் தீப்தி ஷர்மா 4 விக்கெட்டும், ஷிகா பாண்டே, ராதா யாதவ், பூஜா வஸ்த்ராகர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் 104 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளாக 15 வயதான ஷபாலி வர்மா, மந்தனா ஆகியோர் களம் இறங்கினார்கள். முந்தைய போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் குறைந்த வயதில் அரைசதம் அடித்த இந்தியர் என்ற சாதனையை படைத்த ஷபாலி வர்மா இந்த போட்டியிலும் அபாரமாக அடித்து ஆடி அசத்தினார். மந்தனா அவருக்கு பக்கபலமாக தோள் கொடுத்தார். இருவரும் நிலைத்து நின்று விளையாடி அணியை எளிதாக வெற்றிக்கு அழைத்து சென்றனர்.

10.3 ஓவர்களில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 104 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஷபாலி வர்மா 35 பந்துகளில் 10 பவுண்டரி, 2 சிக்சருடன் 69 ரன்னும், மந்தனா 28 பந்துகளில் 4 பவுண்டரியுடன் 30 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். ஷபாலி வர்மா தொடர்ச்சியாக 2-வது அரைசதம் அடித்தார். இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா ஆட்டநாயகி விருது பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. முதலாவது ஆட்டத்தில் 84 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இருந்தது. இவ்விரு அணிகள் இடையிலான 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கயானாவில் நாளை மறுநாள் நடக்கிறது.


Next Story