கிரிக்கெட்

‘பனியை சமாளித்து பந்து வீசுவதை சென்னை அணியில் கற்றுக்கொண்டேன்’ - தீபக் சாஹர் சொல்கிறார் + "||" + I learned in Chennai team how to deal with snow and bowling - Says Deepak Sahar

‘பனியை சமாளித்து பந்து வீசுவதை சென்னை அணியில் கற்றுக்கொண்டேன்’ - தீபக் சாஹர் சொல்கிறார்

‘பனியை சமாளித்து பந்து வீசுவதை சென்னை அணியில் கற்றுக்கொண்டேன்’ - தீபக் சாஹர் சொல்கிறார்
பனியை சமாளித்து பந்து வீசுவது எப்படி என்பதை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுகையில் கற்றுக்கொண்டேன் என்று தீபக் சாஹர் தெரிவித்தார்.
நாக்பூர்,

வங்காளதேசத்துக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் 3.2 ஓவர்கள் பந்து வீசி 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். இதில் ஹாட்ரிக் விக்கெட்டுகள் வீழ்த்திய சாதனையும் அடங்கும். சாதனை படைத்த தீபக் சாஹர், இந்திய கிரிக்கெட் வாரிய இணையதளத்துக்காக யுஸ்வேந்திர சாஹலின் கேள்விக்கு பதிலளித்து கூறியதாவது:-


இரவு நேரத்தில் பனிப்பொழிவில் பந்து வீசுவது எப்படி என்பதை எனக்கு கற்றுக்கொடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், அதன் கேப்டன் டோனியும் தான். ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுகையில் பனிப்பொழிவையும், வியர்வையையும் எவ்வாறு எதிர்கொண்டு விளையாடுவது என்பதை கற்றுக்கொண்டேன். எப்பொழுதும் கையை சுத்தமாக வைத்து இருப்பேன். உலர்ந்த மண்ணை அடிக்கடி கையில் தேய்த்து கொண்டு தான் பந்து வீசுவேன். இதனால் பந்து கையில் இருந்து நழுவாது. இறுக்கமாக பிடித்து பந்து வீச முடியும். நாக்பூர் மைதானத்தில் சைடு பகுதியில் பவுண்டரி எல்லை மிகவும் தூரமாகும். எனவே அந்த திசையில் பேட்ஸ்மேன்கள் பந்தை அடிக்கும் வகையில் பந்து வீச முடிவு செய்தேன். பந்து வீசும் வேகத்திலும் வித்தியாசம் காட்டினேன். அதற்கு நல்ல பலன் கிடைத்தது.

போட்டி முடிவில் தான் ‘ஹாட்ரிக்’ விக்கெட் வீழ்த்தியது எனக்கு தெரியும். ஏனெனில் முந்தைய ஓவரில் கடைசி பந்தில் ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தேன். வீட்டில் அமர்ந்து கனவு கண்டால் கூட 3.2 ஓவர்களில் 7 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட் வீழ்த்துவது என்பதை நினைத்து பார்க்க முடியாது. நான் கடினமாக உழைத்து வருகிறேன். கடவுளின் உதவியால் இந்த நிலைக்கு வந்து இருக்கிறேன். முக்கியமான தருணத்தில் பந்து வீச வாய்ப்பு அளிக்கப்படும் என்று எனக்கு தெரிவிக்கப்பட்டு இருந்தது. எனக்கு இந்த பொறுப்பை அளித்த அணி நிர்வாகத்தை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வாறு தீபக் சாஹர் கூறினார்.

6 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் தீபக் சாஹர் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) 20 ஓவர் போட்டி பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் 88-வது இடத்தில் இருந்து 42-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் முதலிடத்தில் இருக்கிறார்.

தீபக் சாஹரின் சாதனை குறித்து அவரது தந்தை லோகேந்திர சிங் சாஹர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், ‘நாங்கள் இருவரும் வளர்த்தெடுத்த கனவு தற்போது நனவாகி இருப்பதாக நான் உணர்கிறேன். 12 வயதில் எனது மகன் விளையாடுகையில் அவனிடம் இயற்கையாகவே திறமை இருப்பதை அறிந்தேன். நான் கிரிக்கெட் வீரராக வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் எனது பெற்றோர் விளையாட அனுமதிக்கவில்லை. எனது மகனை கிரிக்கெட் வீரராக உருவாக்க வேண்டும் என்று விரும்பினேன். நான் முறையான பயிற்சி படிப்பை படிக்காவிட்டாலும் தீபக் சாஹருக்கு வழிகாட்டுவதற்காக பயிற்சி முறைகளை கற்றுக்கொண்டேன். தீபக் சாஹர் பயிற்சிக்காக நான் 2 பிட்ச்களை உருவாக்கினேன். அதிக நேரம் பயிற்சிக்கு செலவிட்டதால் பள்ளிக்கூடம் சரியாக செல்லமாட்டான். எனக்கு பிடித்தமான மார்ஷல், ஸ்டெயின் ஆகியோரின் பந்து வீச்சு வீடியோக்களை பார்த்து சொல்லி கொடுப்பேன். இதுவரை தீபக் சாஹர் பயிற்சியின் போது குறைந்தபட்சம் ஒரு லட்சம் முறைக்கு மேல் பந்து வீசி இருப்பார். டெஸ்ட் போட்டியில் எனது மகன் ஆடுவதை பார்க்க ஆவலுடன் இருக்கிறேன்’ என்று தெரிவித்தார்.


தொடர்புடைய செய்திகள்

1. வேதாரண்யத்தில், முல்லைப்பூ விளைச்சல் பனியால் பாதிப்பு - விவசாயிகள் கவலை
வேதாரண்யத்தில் முல்லைப்பூ விளைச்சல் பனியால் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.