கிரிக்கெட்

சையத் முஸ்தாக் அலி கோப்பை கிரிக்கெட்: ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய தீபக் சாஹர் + "||" + Syed Mustaf Ali Cup Cricket: Deepak Sahar took 4 wickets in one over

சையத் முஸ்தாக் அலி கோப்பை கிரிக்கெட்: ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய தீபக் சாஹர்

சையத் முஸ்தாக் அலி கோப்பை கிரிக்கெட்: ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய தீபக் சாஹர்
சையத் முஸ்தாக் அலி கோப்பை கிரிக்கெட் போட்டியில், தீபக் சாஹர் ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
திருவனந்தபுரம்,

சையத் முஸ்தாக் அலி கோப்பைக்கான கிரிக்கெட்டில் ராஜஸ்தான் அணிக்காக களம் இறங்கிய வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். ஆனால் அவரது பந்து வீச்சு வெற்றிக்கு உதவவில்லை.


சையத் முஸ்தாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

திருவனந்தபுரத்தில் நேற்று நடந்த ஒரு லீக் ஆட்டத்தில் (பி பிரிவு) விதர்பா அணி, ராஜஸ்தானுடன் மோதியது. இதில் ‘டாஸ்’ ஜெயித்த விதர்பா அணி முதலில் பேட்டிங் செய்த போது மழை குறுக்கிட்டு பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் 13 ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் விதர்பா அணி 9 விக்கெட்டுக்கு 99 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் கடைசி ஓவரில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி பிரமாதப்படுத்தினார். இதன் 4-வது பந்தில் தர்ஷன் நல்கண்டேவை (0) கேட்ச் முறையில் வெளியேற்றிய சாஹர் அடுத்த பந்தை வைடாக வீசினார். மீண்டும் வீசப்பட்ட 5-வது பந்தில் ஸ்ரீகாந்த் வாக் (13 ரன்), 6-வது பந்தில் அக்‌ஷய் வாட்கர் (0) ஆகியோரின் விக்கெட்டுகளை காலி செய்தார். இதனால் தீபக் சாஹர் ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்து விட்டதாக மகிழ்ச்சியில் திளைத்தனர். ஆனால் நடுவில் ஒரு வைடு வீசி எக்ஸ்டிரா வகையில் ஒரு ரன் விட்டுக்கொடுத்ததால் இதை அதிகாரபூர்வமாக ‘ஹாட்ரிக் விக்கெட்’ என்று சொல்ல முடியாது.

தீபக் சாஹர் சில தினங்களுக்கு முன்பு வங்காளதேசத்துக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ‘ஹாட்ரிக்’ சாதனையுடன் 6 விக்கெட்டுகளை சாய்த்து உலக சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்து வி.ஜே.டி. விதிமுறைப்படி ராஜஸ்தான் அணி 107 ரன்கள் எடுக்க வேண்டும் என்று இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. இதை நோக்கி ஆடிய ராஜஸ்தான் 4.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 60 ரன்கள் எடுத்து மிரட்டியது. அதன் பிறகு விக்கெட்டுகளை மளமளவென தாரைவார்த்த ராஜஸ்தான் அணி 13 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 105 ரன்கள் மட்டுமே எடுத்து ஒரு ரன்னில் தோல்வியை தழுவியது. விதர்பா அணி தொடர்ச்சியாக ருசித்த 4-வது வெற்றி இதுவாகும்.

மும்பையில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் (டி பிரிவு) மும்பை அணி, புதுச்சேரியை எதிர்கொண்டது. முதலில் பேட் செய்த மும்பை அணி 6 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்தது. கேப்டன் சூர்யகுமார் யாதவ் 37 பந்தில் 57 ரன்கள் (6 பவுண்டரி, 2 சிக்சர்) திரட்டினார். தொடர்ந்து ஆடிய புதுச்சேரி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 144 ரன்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டது. இதன் மூலம் 27 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி 4-வது வெற்றியை பெற்றது.

விசாகப்பட்டினத்தில் நடந்த இன்னொரு ஆட்டத்தில் (ஏ பிரிவு) நடப்பு சாம்பியன் கர்நாடகா, சர்வீசஸ் அணியை சந்தித்தது. இதில் முதலில் பேட் செய்த கர்நாடகா, எதிரணியின் பந்து வீச்சை துவம்சம் செய்து 3 விக்கெட்டுக்கு 250 ரன்கள் குவித்து மலைக்க வைத்தது. கேப்டன் மனிஷ் பாண்டே 129 ரன்கள் (54 பந்து, 12 பவுண்டரி, 10 சிக்சர்) விளாசினார். அடுத்து களம் கண்ட சர்வீசஸ் 7 விக்கெட்டுக்கு 170 ரன்கள் மட்டுமே எடுத்து 80 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.