கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி: உத்தப்பா, மில்லர், வருண் உள்பட 71 வீரர்கள் விடுவிப்பு - சென்னை அணி 6 பேரை வெளியேற்றியது + "||" + IPL Cricket match: 71 players released including Uthappa, Miller and Varun - Chennai team dismissed 6 people

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி: உத்தப்பா, மில்லர், வருண் உள்பட 71 வீரர்கள் விடுவிப்பு - சென்னை அணி 6 பேரை வெளியேற்றியது

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி: உத்தப்பா, மில்லர், வருண் உள்பட 71 வீரர்கள் விடுவிப்பு - சென்னை அணி 6 பேரை வெளியேற்றியது
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான ஏலத்தையொட்டி மொத்தம் 71 வீரர்கள் அணிகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் 6 பேரை வெளியேற்றியதும் அடங்கும்.
மும்பை,

13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறுகிறது. இதற்கான வீரர்களின் ஏலம் அடுத்த மாதம் (டிசம்பர்) 19-ந்தேதி கொல்கத்தாவில் நடக்கிறது. இதையொட்டி ஒவ்வொரு அணி நிர்வாகமும் தங்களுக்கு தேவையில்லாத வீரர்களை நேற்று கழற்றி விட்டது. அந்த வகையில் மொத்தம் 71 வீரர்கள் விடுக்கப்பட்டு இருக்கிறார்கள். அதிகபட்சமாக விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் 12 வீரர்களை வெளியே தள்ளியுள்ளது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அதிரடி ஆட்டக்காரர் ஹெட்மயர், ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் மார்கஸ் ஸ்டோனிஸ், நியூசிலாந்து ஆல்-ரவுண்டர் கிரான்ட்ஹோம் ஆகியோரும் உண்டு. இவர்கள் இனி அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மீண்டும் ஏலப்பட்டியலில் இடம் பெறுவார்கள்.


சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் சாம் பில்லிங்ஸ், வேகப்பந்து வீச்சாளர் மொகித் ஷர்மா உள்பட 6 வீரர்களை வெளியேற்றியுள்ளது. ஏலத்தில் ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக ரூ.85 கோடி செலவிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தக்க வைத்துள்ள வீரர்களின் ஊதியம் ரூ.70.4 கோடி போக, ரூ.14.6 கோடியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் ஏலத்தில் பயன்படுத்த முடியும். 2 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 5 பேரை ஏலத்தில் எடுக்கலாம்.

கடந்த ஆண்டு யாரும் எதிர்பார்க்காத வகையில் ரூ.8.4 கோடிக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால் வாங்கப்பட்ட தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி விடுவிக்கப்பட்டு இருக்கிறார். கடந்த சீனில் ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டுமே ஆடிய அவர் தனது முதலாவது ஓவரிலேயே 25 ரன்களை வாரி வழங்கினார். அதன் பிறகு விரலில் எலும்பு முறிவு காரணமாக பாதியிலேயே விலக நேரிட்டது.

இதே போல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ரூ.8.4 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனட்கட் 11 ஆட்டத்தில் 10 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்ததோடு, அதிகமான ரன்களை விட்டுக்கொடுத்தார். அதனால் அந்த அணி நிர்வாகம் அவரை ஒதுக்கி விட்டது.

பஞ்சாப் அணிக்காக 8 ஆண்டுகள் விளையாடிய தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்த அதிரடி புயல் டேவிட் மில்லரை அந்த அணி நிர்வாகம் தக்க வைத்துக் கொள்ளவில்லை. இது குறித்து பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான நெஸ் வாடியா கூறுகையில், ‘டேவிட் மில்லர் எங்கள் அணியின் தனி அடையாளம் ஆவார். அவர் அணியை விட்டு விலக விரும்பியதால் அதற்கு மதிப்பு அளித்து இந்த முடிவை எடுத்துள்ளோம்.’ என்றார். இதே போல் ரூ.7.2 கோடிக்கு ஒப்பந்தம் ஆன இங்கிலாந்தை சேர்ந்த ஆல்-ரவுண்டர் சாம் குர்ரனுக்கும் அந்த அணி கதவை திறந்து விட்டுள்ளது. அதே சமயம் கடந்த ஏலத்தில் கடைசி நேரத்தில் ரூ.2 கோடிக்கு வாங்கிய 40 வயதான ‘சிக்சர் மன்னன்’ கிறிஸ் கெய்லை பஞ்சாப் அணி தக்க வைத்திருக்கிறது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் நட்சத்திர வீரர்களாக வலம் வந்த விக்கெட் கீப்பர் ராபின் உத்தப்பா, கிறிஸ் லின், பியூஸ் சாவ்லா உள்ளிட்டோரை அந்த அணி நிர்வாகம் விடுவித்துள்ளதால், அவர்கள் மறுபடியும் ஏலத்திற்கு வருகிறார்கள். ஐதராபாத் அணியில் தடை நடவடிக்கையில் சிக்கியுள்ள ஷகிப் அல்-ஹசன் மற்றும் யூசுப் பதான், மார்ட்டின் கப்தில் ஆகிய முன்னணி வீரர்கள் ஓரங்கட்டப்பட்டுள்ளனர். மும்பை இந்தியன்ஸ் வீரர் யுவராஜ்சிங் ஓய்வு பெற்று விட்டதால் அவருக்கு இடமில்லை.

விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியல்

ஒவ்வொரு அணியும் விடுவித்த வீரர்களையும், ஏலத்தில் அவர்கள் செலவழிக்க வைத்துள்ள இருப்புத் தொகை விவரங்களையும் பின்வருமாறு பார்க்கலாம்.

சென்னை சூப்பர் கிங்ஸ்: சாம் பில்லிங்ஸ், டேவிட் வில்லி, மொகித் ஷர்மா, துருவ் ஷோரே, சைதன்யா பிஷ்னோய், ஸ்காட் குஜ்ஜெலின் இருப்புத் தொகை: ரூ.14.6 கோடி.

ஐதராபாத் சன்ரைசர்ஸ்: ஷகிப் அல்-ஹசன், யூசுப் பதான், மார்ட்டின் கப்தில், தீபக் ஹூடா, ரிக்கி புய், இருப்புத்தொகை: ரூ.17 கோடி.

மும்பை இந்தியன்ஸ்: இவின் லீவிஸ், ஆடம் மில்னே, ஜாசன் பெரேன்டோர்ப், பீரன் ஹென்ரிக்ஸ், பென் கட்டிங், யுவராஜ்சிங், பரிந்தர் ஸ்ரன், ராசிக் சலாம், பங்கஜ் ஜெஸ்வால், அல்ஜாரி ஜோசப், இருப்புத்தொகை: ரூ.13.05 கோடி

கிங்ஸ் லெவன் பஞ்சாப்: டேவிட் மில்லர், சாம் குர்ரன், ஆன்ட்ரூ டை, மோசஸ் ஹென்ரிக்ஸ், அக்னிவேஷ் அயாச்சி, சிம்ரன்சிங், வருண் சக்ரவர்த்தி, இருப்புத் தொகை: ரூ.42.7 கோடி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: கிறிஸ் லின், ராபின் உத்தப்பா, அன்ரிச் நார்ஜே, கார்லஸ் பிராத்வெய்ட், ஜோ டென்லி, கே.சி.கரியப்பா, மேட் கெல்லி, நிகில் நாயக், பியூஷ் சாவ்லா, பிரித்வி ராஜ், ஸ்ரீகாந்த் முன்டே, இருப்புத் தொகை: ரூ.35.65 கோடி

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்: ஹெட்மயர், மார்கஸ் ஸ்டோனிஸ், நாதன் கவுல்டர்-நிலே, காலின் டி கிரான்ட்ஹோம், டிம் சவுதி, அக்‌ஷ்தீப் நாத், ஸ்டெயின், ஹென்ரிச் கிளாசென், ஹிமத்சிங், குல்வந்த் கெஜ்ரோலியா, மிலின்ட்குமார், பிரயாஸ் ராய் பர்மான், இருப்புத்தொகை: ரூ.27.9 கோடி

ராஜஸ்தான் ராயல்ஸ்: ஆஷ்டன் டர்னர், ஒஷானே தாமஸ், சுபம் ரஞ்ஜானே, பிரசாந்த் சோப்ரா, சோதி, ஆர்யமான் பிர்லா, ஜெய்தேவ் உனட்கட், ராகுல் திரிபாதி, ஸ்டூவர்ட் பின்னி, லியாம் லிவிங்ஸ்டோன், சுதேசன் மிதுன், இருப்புத்தொகை: ரூ.28.9 கோடி.

டெல்லி கேப்பிட்டல்ஸ்: ஹனுமா விஹாரி, ஜலஜ் சக்சேனா, மன்ஜோத் கல்ரா, அங்குஷ் பெய்ன்ஸ், நாது சிங், பண்டாரு அய்யப்பா, கிறிஸ் மோரிஸ், காலின் இங்ராம், காலின் முன்ரோ, இருப்புத்தொகை: ரூ.27.85 கோடி.

8 அணிகளின் ஒட்டுமொத்த இருப்புத் தொகை ரூ.207.65 கோடியாக உள்ளது. இதை வைத்து அணிக்கு தேவையாக உள்ள 29 வெளிநாட்டவர் உள்பட 73 வீரர்களின் இடங்களை ஏலத்தின் மூலம் நிரப்பலாம் என்றும், 35 வெளிநாட்டவர் உள்பட 127 வீரர்கள் அணிகளில் தக்க வைக்கப்பட்டு இருப்பதாகவும் ஐ.பி.எல். வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்த தயார்: ஐக்கிய அரபு அமீரகம் அறிவிப்பு
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்த தயாராக உள்ளதாக, ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது.
2. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை வெளிநாட்டில் நடத்த பரிசீலனை
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை வெளிநாட்டில் நடத்துவது குறித்தும் இந்திய கிரிக்கெட் வாரியம் பரிசீலிக்கிறது.
3. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடக்குமா? -கங்குலி
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடக்குமா? என்பது குறித்து சவுரவ் கங்குலி விளக்கமளித்துள்ளார்.
4. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்படுமா? - இந்திய கிரிக்கெட் வாரியம் நாளை மறுநாள் ஆலோசனை
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை ரத்து செய்யலாமா? என்பது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள், ஐ.பி.எல். அணியின் உரிமையாளர்களுடன் நாளை மறுநாள் ஆலோசனை நடத்துகிறார்கள்.
5. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடக்குமா? - 3 வாரங்கள் காத்திருக்க அணி உரிமையாளர் கூட்டத்தில் முடிவு
இந்த ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடக்குமா? இல்லையா? என்பதில் ஒரு முடிவுக்கு வர 3 வாரங்கள் காத்திருப்பது என்று அணி உரிமையாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.