கிரிக்கெட்

முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி - வங்காளதேசத்தை 215 ரன்னில் சுருட்டியது + "||" + india vs Bangladesh 1st Test: India win by an innings and 130 runs; lead the two-match series by 1-0.

முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி - வங்காளதேசத்தை 215 ரன்னில் சுருட்டியது

முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி - வங்காளதேசத்தை 215 ரன்னில் சுருட்டியது
இந்தூரில் நடந்த முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் வங்காளதேசத்தை 3-வது நாளிலேயே சுருட்டிய இந்திய அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தூர்,

இந்தியா - வங்காளதேசம் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இந்தூரில் கடந்த 14-ந்தேதி தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் 150 ரன்னில் சுருண்டது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 2-வது நாள் முடிவில் 6 விக்கெட்டுக்கு 493 ரன்கள் குவித்தது. மயங்க் அகர்வால் (243 ரன்) இரட்டை சதம் விளாசினார். ரவீந்திர ஜடேஜா 60 ரன்களுடனும், உமேஷ் யாதவ் 25 ரன்களுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர்.


இந்த நிலையில் 3-வது நாளான நேற்று இந்திய அணி மேற்கொண்டு களம் இறங்காமல் முந்தைய நாள் ஸ்கோருடனேயே (493 ரன்) டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.

இதையடுத்து 343 ரன்கள் பின்தங்கிய நிலையில் வங்காளதேச அணி 2-வது இன்னிங்சை ஆடியது. மறுபடியும் இந்திய வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் வங்காளதேச பேட்ஸ்மேன்கள் திண்டாடினர். கேப்டன் விராட் கோலி இடைவிடாது 23 ஓவர்களுக்கு வேகப்பந்து வீச்சையே பயன்படுத்தினார். தொடக்க ஆட்டக்காரர் இம்ருல் கேயசுக்கு (6 ரன்) உமேஷ் யாதவ் மிரட்டலாக வீசிய பந்து லெக் ஸ்டம்பை பதம் பார்த்தது. மற்றொரு தொடக்க வீரர் ஷத்மன் இஸ்லாமை (6 ரன்) இஷாந்த் ஷர்மா காலி செய்தார். கேப்டன் மொமினுல் ஹக்குக்கும் (7 ரன்) இதே நிலைமை தான். முகமது ஷமியின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். முதலில் நடுவர் அவுட் கொடுக்காவிட்டாலும் இந்தியா டி.ஆர்.எஸ். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சாதகமான முடிவை பெற்றது.

கட்டவிழ்த்து விடப்பட்ட காளை போல் சீறிய ஷமி மேலும் 2 பேரை வெளியேற்ற, 72 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை தாரைவார்த்து ஊசலாடியது. இதனால் அந்த அணி 100 ரன்களை தொடுமா? என்ற கேள்வி எழுந்தது.

இந்த நெருக்கடிக்கு மத்தியில் அனுபவ வீரர் முஷ்பிகுர் ரஹிம் மட்டும் ஒருமுனையில் தாக்குப்பிடித்து ஆடினார். அவருடன் 6-வது விக்கெட்டுக்கு கைகோர்த்த விக்கெட் கீப்பர் லிட்டான் தாஸ் (35 ரன்), 7-வது விக்கெட்டுக்கு ஜோடி போட்ட மெஹிதி ஹசன் (38 ரன்) ஓரளவு ஒத்துழைப்பு தந்ததால் ஆட்டம் தேனீர் இடைவேளையை தாண்டி நகர்ந்தது. இந்தியாவின் வெற்றியை சற்று தாமதப்படுத்தியது மட்டுமே இவர்களுக்கு கிடைத்த ஒரே ஆறுதல் ஆகும்.

அரைசதத்தை கடந்து போராடிய முஷ்பிகுர் ரஹிம் (64 ரன், 150 பந்து, 7 பவுண்டரி) அஸ்வின் வீசிய பந்தை தூக்கியடித்த போது அதை புஜாரா கேட்ச் செய்தார். முன்னதாக முஷ்பிகுர் ரஹிம் 4 ரன்னில் இருந்த போது கொடுத்த லட்டு போன்ற சுலபமான கேட்ச் வாய்ப்பை ஸ்லிப்பில் நின்ற ரோகித் சர்மா கோட்டை விட்டார். அதை பிடித்திருந்தால், அந்த அணி மிக குறைந்த ஸ்கோரில் முடங்கி இருக்கும்.

முடிவில் வங்காளதேச அணி 2-வது இன்னிங்சில் 69.2 ஓவர்களில் 213 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் ‘மெகா’ வெற்றியை பெற்றது. இந்திய தரப்பில் முகமது ஷமி 4 விக்கெட்டுகளும், அஸ்வின் 3 விக்கெட்டுகளும் சாய்த்தனர். இரட்டை சத ஹீரோ மயங்க் அகர்வால் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பகல்-இரவு போட்டியாக வருகிற 22-ந்தேதி கொல்கத்தா ஈடன்கார்டனில் தொடங்குகிறது.

அதிக இன்னிங்ஸ் வெற்றி: டோனியின் சாதனையை முறியடித்தார், கோலி

* விராட் கோலியின் தலைமையில் 52-வது டெஸ்டில் ஆடிய இந்திய அணி அதில் ருசித்த 10-வது இன்னிங்ஸ் வெற்றி இதுவாகும். இதன் மூலம் அதிக இன்னிங்ஸ் வெற்றிகளை தேடித்தந்த இந்திய கேப்டன் என்ற பெருமையை கோலி பெற்றார். இதற்கு முன்பு டோனி தலைமையில் 9 இன்னிங்ஸ் வெற்றி கண்டதே அதிகபட்சமாக இருந்தது. அவரது சாதனையை கோலி முறியடித்துள்ளார். இந்த வரிசையில் முகமது அசாருதீன் 3-வது இடத்திலும் (8), சவுரவ் கங்குலி (7) 4-வது இடத்திலும் உள்ளனர். ஒட்டுமொத்தத்தில் அதிக இன்னிங்ஸ் வெற்றிகளை குவித்த கேப்டனாக தென்ஆப்பிரிக்காவின் கிரேமி சுமித் (22 வெற்றி) திகழ்கிறார்.

* இந்திய அணி தொடர்ச்சியாக 3 டெஸ்டுகளில் இன்னிங்ஸ் வெற்றியை பெற்றிருக்கிறது. ஏற்கனவே கடந்த மாதம் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த புனே (இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்), ராஞ்சி (இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்) டெஸ்டுகளிலும் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றிருந்தது. தொடர்ச்சியாக 3 டெஸ்டுகளில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி காண்பது இது 3-வது முறையாகும்.

* டெஸ்டில் இந்திய அணி தொடர்ச்சியாக பதிவு செய்த 6-வது வெற்றியாக இது அமைந்துள்ளது. ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் தொடரை 2-0 என்ற கணக்கிலும், தென்ஆப்பிரிக்க தொடரை 3-0 என்ற கணக்கிலும் இந்தியா முழுமையாக வசப்படுத்தி இருந்தது. இந்தியாவின் நீண்ட டெஸ்ட் வெற்றிப் பயணம் என்று பார்த்தால், 2013-ம் ஆண்டில் டோனியின் தலைமையில் தொடர்ந்து 6 டெஸ்டுகளில் வெற்றி கிடைத்திருந்தது. அச்சாதனை இப்போது சமன் செய்யப்பட்டுள்ளது.

* வெளிநாட்டு மண்ணில் வங்காளதேச அணி கடைசியாக விளையாடிய 14 டெஸ்டுகளில் 13-ல் தோல்வியே தழுவியிருக்கிறது

உலக சாம்பியன்ஷிப்: 300 புள்ளிகளை எட்டியது இந்தியா

இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது ஆகும். ஒரு தொடருக்கு அதிகபட்சமாக 120 புள்ளிகள் வழங்கப்படுகிறது. இது 2 டெஸ்ட் கொண்ட தொடர் என்பதால் ஒவ்வொரு வெற்றிக்கும் தலா 60 புள்ளிகளை பெற முடியும். இதன்படி இந்தூர் டெஸ்டில் வங்காளதேசத்தை ஊதித்தள்ளிய இந்திய அணி 60 புள்ளிகளை அள்ளியது.

உலக சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்தியா 300 புள்ளிகளுடன் (இதுவரை ஆடிய 6 டெஸ்டிலும் வெற்றி) மற்ற அணிகள் இப்போதைக்கு நெருங்க முடியாத அளவுக்கு உச்சத்தில் இருக்கிறது. நியூசிலாந்து, இலங்கை அணிகள் தலா 60 புள்ளிகளுடன் அடுத்த இடங்களில் உள்ளன. ஆஸ்திரேலியா (56 புள்ளி) 4-வது இடமும், இங்கிலாந்து 5-வது இடமும் (56 புள்ளி) வகிக்கிறது.

வங்காளதேச அணி தனது டெஸ்ட் சாம்பியன்ஷிப் பயணத்தை தோல்வியோடு தொடங்கி இருக்கிறது.
தொடர்புடைய செய்திகள்

1. இங்கிலாந்துடனான முதல் டெஸ்ட்: பாகிஸ்தான் வீரர் பாபர் அசாமுக்கு பாராட்டு
இங்கிலாந்துடனான முதல் டெஸ்ட்டில் சிறப்பாக விளையாடிய வீரர் பாகிஸ்தான் வபாபர் அசாமுக்கு பாராட்டு கிடைத்துள்ளது.
2. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றது.
3. அக்தர் பந்தை எதிர்கொள்ள தெண்டுல்கர் பயப்படுவார், ஆனால் அவர் அதை ஏற்க மாட்டார் - அப்ரிடி
சோயிப் அக்தர் பந்தை எதிர்கொள்ள சச்சின் தெண்டுல்கர் பயப்படுவார், ஆனால் அவர் அதை ஏற்க மாட்டார் என்று ஷாகித் அப்ரிடி கூறி உள்ளார்.
4. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் என் கழுத்தில் கத்தியை வைத்தார் முன்னாள் பயிற்சியாளர் அதிர்ச்சி தகவல்
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் யூனிஸ் கான் என் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினார் என பாகிஸ்தானின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் பிளவர் அதிர்ச்சியூட்டும் தகவலை தெரிவித்து உள்ளார்.
5. தோனி இல்லை என்றால் கோலியின் கிரிக்கெட் வாழ்க்கை அன்றே முடிந்திருக்கும்- கவுதம் காம்பீர் பரபரப்பு தகவல்
தோனி மட்டும் அன்று கோலியை பாதுகாக்காமல் இருந்திருந்தால், கோலியின் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்திருக்கும் என கவுதம் காம்பீர் தெரிவித்து உள்ளார்.