கிரிக்கெட்

இந்திய வேகப்பந்து வீச்சாளர்களின் வெற்றி ரகசியம் என்ன? - ஷமி, உமேஷ், இஷாந்த் ருசிகர உரையாடல் + "||" + What is the secret of success of Indian fast bowlers? - Shami, Umesh, Ishant tasting conversation

இந்திய வேகப்பந்து வீச்சாளர்களின் வெற்றி ரகசியம் என்ன? - ஷமி, உமேஷ், இஷாந்த் ருசிகர உரையாடல்

இந்திய வேகப்பந்து வீச்சாளர்களின் வெற்றி ரகசியம் என்ன? - ஷமி, உமேஷ், இஷாந்த் ருசிகர உரையாடல்
இந்திய வேகப்பந்து வீச்சாளர்களின் வெற்றி ரகசியம் என்ன என்பது குறித்து ஷமி, உமேஷ், இஷாந்த் ஆகியோர் கலந்துரையாடினர்.
இந்தூர்,

இந்த ஆண்டில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் விக்கெட் எடுக்க சராசரியாக 15.82 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்துள்ளனர். 2019-ம் ஆண்டில் வேகப்பந்து வீச்சாளர்களின் மிகச்சிறந்த சராசரி இது தான். தங்களது வெற்றியின் ரகசியம் குறித்து இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ் ஆகியோர் ஜாலியாக கலந்துரையாடினர்.


அப்போது இஷாந்த் ஷர்மா கூறுகையில், ‘என்னை ஒரு மூத்த வீரராக பாவித்து நடந்து கொள்வதில்லை. எங்களுக்குள் சீனியர்-ஜூனியர் என்ற பாகுபாடு எதுவும் கிடையாது. மற்றவர்களின் வெற்றியை ஒவ்வொருவரும் அனுபவித்து கொண்டாடுகிறோம். திட்டங்களை பகிர்ந்து கொள்கிறோம். அணியில் எங்களுக்குள் ஆரோக்கியமான போட்டி நிலவுகிறது. அது எங்களது திறமையை மேம்படுத்துகிறது’ என்றார்.

முகமது ஷமி கூறுகையில், ‘களத்தில் சோர்ந்து போகும் போது, தமாஷ் செய்து உற்சாகமூட்டிக் கொள்கிறோம். இஷாந்த், உமேஷ் யாதவுடன் இணைந்து பந்து வீசும் போது எனது பணி எளிதாகி விடுகிறது. பந்தை துல்லியமாக வீசுவதில் கூடுதல் கவனம் செலுத்துகிறேன். எப்போதும் புதிய பந்தில் விக்கெட்டுகளை வீழ்த்தி சுழற்பந்து வீச்சாளர்களின் சுமையை குறைக்க முயற்சிக்கிறோம்’ என்றார்.

உமேஷ் யாதவ் கூறுகையில், ‘மணிக்கு 140-145 கிலோமீட்டர் வேகத்தில் தொடர்ந்து பந்து வீச முடிகிறதே என்று கேட்கிறீர்கள். இது என் மரபணுவில் உள்ளது. சிறு வயதில் எனது தந்தையிடம் இருந்து நிறைய கற்று இருக்கிறேன். அவர் என்னை அதிகமாக ஓட வைத்தார். அது தான் இப்போது என்னை இந்த நிலைக்கு உயர்த்தி இருக்கிறது. தொடர்ந்து இதே போல வேகமாக பந்து வீச முயற்சிக்கிறேன்’ என்றார்.

முகமது ஷமியிடம் இஷாந்த் ஷர்மா, ‘நீங்கள் வீசும் அதே இடத்தில் தான் நாங்களும் பந்தை பிட்ச் செய்து வீசுகிறோம். நாங்கள் வீசும் போது எதிரணி பேட்ஸ்மேனின் காலுறையில் பந்து பட்டால் ரீப்ளேயில் அது ஸ்டம்பை விட்டு விலகி செல்கிறது. அதுவே உங்களது பந்து வீச்சு என்றால் ஸ்டம்பை நோக்கி செல்கிறது. இது எப்படி’ என்று கேட்டார்.

இதற்கு பதில் அளித்த முகமது ஷமி, ‘பிரியாணி சாப்பிடுவதால் தான் என்று மக்கள் சொல்வார்கள். அது அப்படி அல்ல. கடவுளின் கருணை மற்றும் அதிர்ஷ்டத்தால் சாதிக்கிறேன். என்னை பொறுத்தவரை கச்சிதமாக சரியான அளவில் (லைன் அன்ட் லென்ந்த்) பந்தை வீசுவதில் கவனம் செலுத்துகிறேன். அதில் வெற்றி கிடைக்கும் போது அதையே திரும்ப திரும்ப முயற்சிக்கிறேன்’ என்றார்.