சையத் முஸ்தாக் அலி கிரிக்கெட்: தமிழ்நாடு, மும்பை அணிகள் வெற்றி


சையத் முஸ்தாக் அலி கிரிக்கெட்: தமிழ்நாடு, மும்பை அணிகள் வெற்றி
x
தினத்தந்தி 17 Nov 2019 11:53 PM GMT (Updated: 17 Nov 2019 11:53 PM GMT)

சையத் முஸ்தாக் அலி கிரிக்கெட் போட்டியில், தமிழ்நாடு, மும்பை அணிகள் வெற்றிபெற்றன.

திருவனந்தபுரம்,

சையத் முஸ்தாக் அலி கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு, மும்பை அணிகள் வெற்றி பெற்று சூப்பர் லீக் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. தடை முடிந்து மும்பை அணிக்கு திரும்பிய பிரித்வி ஷா அரைசதம் விளாசினார்.

38 அணிகள் இடையிலான 11-வது சையத் முஸ்தாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. திருவனந்தபுரத்தில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் (பி பிரிவு) தமிழக அணி, விதர்பாவை சந்தித்தது. இதில் முதலில் பேட் செய்த தமிழக அணி 8 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கேப்டன் தினேஷ் கார்த்திக் 58 ரன்களும் (32 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்), பாபா அபராஜித் 33 ரன்களும், விஜய் சங்கர் 26 ரன்களும் எடுத்தனர்.

அடுத்து களம் கண்ட விதர்பா அணி தமிழக பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 14.5 ஓவர்களில் வெறும் 55 ரன்னில் சுருண்டது. இதன் மூலம் தமிழக அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சாய் கிஷோர், விஜய் சங்கர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 6-வது லீக்கில் ஆடிய தமிழக அணிக்கு இது 5-வது வெற்றியாகும். ‘பி’ பிரிவில் லீக் சுற்று நிறைவடைந்து விட்ட நிலையில் முதல் 2 இடங்களை பிடித்த தமிழ்நாடு (20 புள்ளி), ராஜஸ்தான் (16 புள்ளி) ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு (சூப்பர் லீக்) முன்னேறியுள்ளது.

மும்பையில் நடந்த ஒரு ஆட்டத்தில் (டி பிரிவு) புதுச்சேரி அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் பெங்கால் அணியை வீழ்த்தியது. இதில் பெங்கால் அணி நிர்ணயித்த 133 ரன்கள் இலக்கை 2 பந்து மீதம் வைத்து எட்டிப்பிடித்த புதுச்சேரி அணிக்கு 4-வது வெற்றியாக பதிவானது.

மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த இன்னொரு ஆட்டத்தில் மும்பை அணி, அசாமை (டி பிரிவு) எதிர்கொண்டது. முதலில் பேட் செய்த மும்பை அணி 5 விக்கெட்டுக்கு 206 ரன்கள் குவித்தது. பிரித்வி ஷா (63 ரன், 39 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்), விக்கெட் கீப்பர் ஆதித்யதாரே (82 ரன், 48 பந்து, 12 பவுண்டரி, 1 சிக்சர்) அரைசதம் விளாசினர். தொடர்ந்து ஆடிய அசாம் அணி 8 விக்கெட்டுக்கு 123 ரன்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டது. இதன் மூலம் 83 ரன்கள் வித்தியாசத்தில் 6-வது வெற்றியை சுவைத்த மும்பை அணி புள்ளி பட்டியலில் தங்களது பிரிவில் முதலிடத்தை பிடித்து சூப்பர் லீக் சுற்றை உறுதி செய்தது.

அரைசதம் நொறுக்கிய 20 வயதான பிரித்வி ஷாவுக்கு ஊக்கமருந்து பயன்படுத்தியதால் 8 மாதம் தடை விதிக்கப்பட்டது. அந்த தடை முடிந்து களம் திரும்பிய முதல் ஆட்டத்திலேயே கவனத்தை ஈர்க்கும் வகையில் விளையாடி இருக்கிறார். அவர் கூறும் போது, ‘முடிந்த வரை அதிகமான ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு பங்களிப்பு அளிப்பதில் தான் இப்போது எனது முழு கவனமும் உள்ளது. தொடர்ந்து ரன் எடுப்பது எனது வேலை. மீண்டும் என்னை இந்திய அணிக்கு தேர்வு செய்வது, தேர்வாளர்களின் முடிவை பொறுத்தது.

எனது வாழ்க்கையில் இப்படியொரு சம்பவம் (ஊக்கமருந்து சர்ச்சையால் 8 மாதம் தடை) நடக்கும் என்று ஒரு போதும் நினைத்ததில்லை. இதனால் மிகவும் அதிர்ச்சிக்குள்ளானேன். முதல் 20-25 நாட்கள் இந்த தவறு எப்படி நடந்தது என்பதை புரிந்து கொள்ள முடியாமல் தவித்தேன். ஒவ்வொரு நாட்களும் கடினமாக அமைந்தன. இப்போது அவை எல்லாம் கடந்து விட்டன. இந்த அனுபவத்தில் இருந்து நிறைய கற்று இருக்கிறேன்’ என்றார்.

14 பந்தில் அரைசதம் அடித்த மேகாலயா வீரர்

மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் (டி பிரிவு) மிசோரம் அணிக்கு எதிராக மேகாலயா ஆல்-ரவுண்டர் அபாய் நெகி 14 பந்தில் 2 பவுண்டரி, 6 சிக்சருடன் அரைசதத்தை கடந்து பிரமிக்க வைத்தார். சையத் முஸ்தாக் அலி கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் ஒரு வீரரின் அதிவேக அரைசதம் இதுவாகும். இதற்கு முன்பு ராபின் உத்தப்பா 15 பந்துகளில் அரைசதத்தை எட்டியதே இந்த வகையில் சாதனையாக இருந்தது. 27 வயதான அபாய் நெகி 50 ரன்னுடன் அவுட் ஆகாமல் இருந்தார். அவரது அதிரடி ஜாலத்தின் உதவியுடன் மேகாலயா அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.




Next Story