‘மேலும் 2 ஆண்டுகள் விளையாட விருப்பம்’ - ஓய்வு முடிவில் இலங்கை வீரர் மலிங்கா பல்டி


‘மேலும் 2 ஆண்டுகள் விளையாட விருப்பம்’ - ஓய்வு முடிவில் இலங்கை வீரர் மலிங்கா பல்டி
x
தினத்தந்தி 20 Nov 2019 11:23 PM GMT (Updated: 20 Nov 2019 11:23 PM GMT)

மேலும் 2 ஆண்டுகள் விளையாட விருப்பம் உள்ளதாக, ஓய்வு முடிவு அறிவித்த இலங்கை வீரர் மலிங்கா தெரிவித்துள்ளார்.

கொழும்பு,

7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு (2020) அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடக்கிறது. இலங்கை 20 ஓவர் கிரிக்கெட் அணியின் கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான 36 வயது மலிங்கா 20 ஓவர் உலக கோப்பை போட்டியுடன் ஓய்வு பெறுவதாக கடந்த மார்ச் மாதம் தெரிவித்து இருந்தார். தற்போது அவர் தனது ஓய்வு முடிவில் பல்டி அடித்துள்ளார். மேலும் 2 ஆண்டுகள் தொடர்ந்து விளையாட விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து இணையதளத்துக்கு மலிங்கா அளித்த பேட்டியில் கூறியதாவது:-

20 ஓவர் போட்டியில் 4 ஓவர்கள் பந்து வீசினால் போதும். என்னுடைய திறமையை கொண்டு 20 ஓவர் போட்டியில் பந்து வீச்சாளராக என்னால் சமாளிக்க முடியும். உலகம் முழுவதும் நிறைய 20 ஓவர் போட்டிகளில் நான் விளையாடி இருக்கிறேன். இதனால் என்னால் கேப்டனாக மேலும் 2 ஆண்டுகள் விளையாட முடியும் என்று உணருகிறேன். 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு நான் கேப்டனாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். ஆனால் இலங்கை கிரிக்கெட்டில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். இலங்கை கிரிக்கெட் அணியில் திறமைமிக்க பந்து வீச்சாளர் இல்லை. அத்துடன் அணியில் நிலையற்ற தன்மையும் நிலவுகிறது. இதனை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சரி செய்து விட முடியாது. இதனை சரிக்கட்ட இரண்டு மூன்று ஆண்டுகள் கூட பிடிக்கலாம். நிலையாக சிறப்பாக செயல்பட வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். தேர்வாளர்கள் இதனை கவனத்தில் கொண்டு வீரர்களை தேர்வு செய்ய வேண்டும்.

களத்தில் இறங்கி விளையாடினால் தான் கற்றுக்கொள்ள முடியும். நான் இலங்கை இளம் வீரர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்றால் அணியில் இருப்பது தான் சரியானதாக இருக்கும். நான் அணியில் விளையாடினால் தான் வீரர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று வழிகாட்ட முடியும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story