இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி: வங்காளதேச அணி திணறல்


இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி: வங்காளதேச அணி திணறல்
x
தினத்தந்தி 23 Nov 2019 12:07 PM GMT (Updated: 23 Nov 2019 12:07 PM GMT)

வங்காளதேச அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 347 ரன்கள் குவித்து தனது முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

கொல்கத்தா, 

இந்தியா- வங்காளதேசம் அணிகள் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் பகல் இரவு ஆட்டமாக நடைபெற்று வருகிறது. இந்திய அணி பங்கேற்கும் முதல் பகல் இரவு டெஸ்ட் போட்டி இது என்பதால், ரசிகர்கள் மத்தியில் சிறப்பு கவனத்தை ஈர்த்துள்ளது. 

இந்தப்போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட் செய்த வங்காளதேச அணி 30.3 ஓவர்களில் 106 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பந்து வீச்சில் இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக இஷாந்த் சர்மா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.  இதையடுத்து, தனது முதல் இன்னிங்சை துவங்கிய இந்திய அணி, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.  

கேப்டன் விராட் கோலியின் (136 ரன்கள்) அபார சதம் , புஜாரா (55 ரன்கள்),  ரகானே (51 ரன்கள்) ஆகியோரின் அரைசதம் ஆகியவற்றால், இந்திய அணி வலுவான நிலையை எட்டியது. இந்திய அணி 89.4 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 347 ரன்கள் குவித்திருந்த நிலையில் தனது முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.   இதையடுத்து, 246 ரன்கள் பின்னடைவுடன் இரண்டாவது இன்னிங்சை துவங்கிய வங்காளதேச அணி தடுமாறி வருகிறது.

Next Story