இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் பகல்-இரவு டெஸ்ட் போட்டியை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் - கங்குலி


இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் பகல்-இரவு டெஸ்ட் போட்டியை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் - கங்குலி
x
தினத்தந்தி 24 Nov 2019 11:08 PM GMT (Updated: 24 Nov 2019 11:08 PM GMT)

இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் பகல்-இரவு டெஸ்ட் போட்டியை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கங்குலி தெரிவித்தார்.


* இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி தொடரில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி)-எப்.சி.கோவா அணிகள் இடையிலான லீக் ஆட்டம் கவுகாத்தியில் கடந்த 1-ந் தேதி நடந்தது. இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இந்த போட்டியில் விதிமுறைக்கு புறம்பாக செயல்பட்டதாக எப்.சி.கோவா அணி வீரர்கள் செய்மின்லென் டான்ஜெல், ஹூகோ போமோஸ், கவுகாத்தி அணி வீரர் காய் ஹீரிங்ஸ் ஆகியோர் மீது நடுவர்கள் புகார் தெரிவித்தனர். இது குறித்து அகில இந்திய கால்பந்து சம்மேளன ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடத்தியது. இதில் செய்மின்லென் டான் ஜெலுக்கு 3 போட்டியிலும், ஹூகோ போமோஸ், காய் ஹீரிங்ஸ் ஆகியோருக்கு 2 போட்டியிலும் விளையாட தடை விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

* இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி அளித்த ஒரு பேட்டியில், ‘இந்திய பந்து வீச்சாளர்கள் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்து வருகிறார்கள். அவர்களுக்குள் உள்ள புரிதல் ஒரு அணியாக சிறப்பாக செயல்பட உதவுகிறது. தனிப்பட்ட ஆட்டத்தில் கவனம் செலுத்தினால் வெல்ல முடியாது என்பதை உணர்ந்து இருக்கிறார்கள். கடந்த 15 மாதங்களாக வெளிநாடுகளில் நிறைய போட்டியில் விளையாடியதன் மூலம் அவர்கள் சிறப்பாக செயல்படுவது எப்படி என்பதை நன்கு அறிந்து உள்ளனர். சூழ்நிலைக்கு தகுந்தபடி விரைவாக தங்களை மாற்றி கொள்கிறார்கள்’ என்று தெரிவித்தார்.

* இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி நேற்று அளித்த பேட்டியில், ‘கொல்கத்தா டெஸ்ட் போட்டியை காண ரசிகர்கள் அதிக அளவில் வந்தது நிம்மதி அளிக்கிறது. இந்த டெஸ்ட் போட்டியை பிரபலப்படுத்த நாங்கள் நிறைய பணிகளை செய்தோம். டிக்கெட் முழுவதும் விற்று தீர்ந்து விட்டன. இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் பகல்-இரவு டெஸ்ட் போட்டியை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்தார்.

* ஐதராபாத் கிரிக்கெட் சங்க நிர்வாகத்தில் தவறுகள் பல நடப்பதாகவும், சிபாரிசு அடிப்படையில் வீரர்கள் அணியில் இடம் பிடிக்கிறார்கள் என்று அந்த அணியின் முன்னாள் கேப்டன் அம்பத்தி ராயுடு குற்றம் சாட்டி இருந்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் ஐதராபாத் கிரிக்கெட் சங்க தலைவர் அசாருதீன் தனது டுவிட்டர் பதிவில், ‘அம்பத்தி ராயுடு விரக்தியான கிரிக்கெட் வீரர். ஐதராபாத் கிரிக்கெட் சங்க நிர்வாகத்தை சரிப்படுத்த எனக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. வரும் தலைமுறை வீரர்களின் நலன் காக்க சரியான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.


Next Story