பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி


பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி
x
தினத்தந்தி 24 Nov 2019 11:18 PM GMT (Updated: 24 Nov 2019 11:18 PM GMT)

பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 5 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

பிரிஸ்பேன்,

ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் நடந்தது. இதில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 240 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 580 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தது. அதிகபட்சமாக லபுஸ்சேன் 185 ரன்னும், டேவிட் வார்னர் 154 ரன்னும் எடுத்தனர்.

340 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் அணி 3-வது நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் எடுத்து இருந்தது. ஷான் மசூத் 27 ரன்னுடனும், பாபர் அசாம் 20 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

நேற்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. ஷான் மசூத், பாபர் அசாம் தொடர்ந்து ஆடினார்கள். ஷான் மசூத் (42 ரன்கள்) கம்மின்ஸ் வீசிய பவுன்சர் பந்தில் விக்கெட் கீப்பர் டிம் பெய்னிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த இப்திகர் அகமது ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார்.

இதனை அடுத்து விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான், பாபர் அசாமுடன் இணைந்தார். இருவரும் நிதானமாகவும், அதேநேரத்தில் நேர்த்தியாகவும் அடித்து ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்கள். பாபர் அசாம் 160 பந்துகளில் சதத்தை எட்டினார். அவர் அடித்த 2-வது சதம் இதுவாகும். சதம் அடித்த சிறிது நேரத்தில் பாபர் அசாம் (104 ரன்கள்) நாதன் லயன் பந்து வீச்சில் டிம் பெய்னிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். 6-வது விக்கெட்டுக்கு பாபர் அசாம்-முகமது ரிஸ்வான் இணை 132 ரன்கள் சேர்த்தது.

நிலைத்து நின்று ஆடிய முகமது ரிஸ்வான் 95 ரன்னிலும், யாசிர் ஷா 42 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். பாகிஸ்தான் அணி 2-வது இன்னிங்சில் 84.2 ஓவர்களில் 335 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. இதனால் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 5 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 1988-ம் ஆண்டுக்கு பிறகு பிரிஸ்பேன் மைதானத்தில் தொடர்ச்சியாக நடந்த 31 டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி தோல்வியை சந்தித்தது இல்லை என்ற பெருமையை தக்கவைத்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஹேசில்வுட் 4 விக்கெட்டும், மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டும், கம்மின்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். ஆஸ்திரேலிய வீரர் லபுஸ்சேன் ஆட்டநாயகன் விருது பெற்றார். பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலிய மண்ணில் தொடர்ச்சியாக சந்தித்த 13-வது தோல்வி இதுவாகும்.

இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிப்பதுடன், 60 புள்ளிகளை பெற்றது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் (பகல்-இரவு) போட்டி அடிலெய்டில் வருகிற 29-ந் தேதி தொடங்குகிறது.


Next Story