சையத் முஸ்தாக் அலி 20 ஓவர் கிரிக்கெட்டில் தமிழக அணி 2-வது வெற்றி


சையத் முஸ்தாக் அலி 20 ஓவர் கிரிக்கெட்டில் தமிழக அணி 2-வது வெற்றி
x
தினத்தந்தி 25 Nov 2019 11:08 PM GMT (Updated: 25 Nov 2019 11:08 PM GMT)

சையத் முஸ்தாக் அலி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் தமிழக அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது.

சூரத்,

சையத் முஸ்தாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சூப்பர் லீக் சுற்று ஆட்டம் குஜராத் மாநிலம் சூரத்தில் நடந்து வருகிறது. இதற்கு முன்னேறிய 10 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன. இதில் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழக அணி நேற்று நடந்த தனது 3-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியை எதிர்கொண்டது. ‘டாஸ்’ ஜெயித்த தமிழக அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் பீல்டிங்கை தேர்வு செய்தார்.

இதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, தமிழக வீரர்களின் மாயாஜால சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறியதுடன், விரைவில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. 20 ஓவர்களில் பஞ்சாப் அணி 8 விக்கெட் இழப்புக்கு 94 ரன்களே எடுத்தது. அதிகபட்சமாக மயங்க் மார்கண்டே 26 பந்துகளில் 3 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 33 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். குர்கீரத் சிங் 25 ரன்னில் ஆட்டம் இழந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். தமிழக அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் சாய் கிஷோர், சித்தார்த் தலா 3 விக்கெட்டும், பாபா அபராஜித் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர் 95 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் ஆடிய தமிழக அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஹரி நிஷாந்த் 16 ரன்னிலும், ஷாருக்கான் 7 ரன்னிலும், அடுத்து வந்த பாபா அபராஜித் ரன் எதுவும் எடுக்காமலும், கேப்டன் தினேஷ் கார்த்திக் 4 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தனர். இதனால் தமிழக அணி 48 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

3-வது வீரராக களம் கண்ட ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் நிலைத்து நின்று ஆடி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். விஜய் சங்கர் 20 ரன்னிலும், முகமது ரன் எதுவும் எடுக்காமலும் அவுட் ஆனார்கள். தமிழக அணி 19.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வாஷிங்டன் சுந்தர் 44 பந்துகளில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சருடன் 45 ரன்னும், சித்தார்த் 2 பந்துகளில் ஒரு ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். பஞ்சாப் அணி தரப்பில் ஹர்பிரீத் பிரார், மயங்க் மார்கண்டே, அபிஷேக் ஷர்மா தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.

Next Story