டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை: ஸ்டீவன் சுமித்தை நெருங்கினார், கோலி - அகர்வால், இஷாந்த் ‌ஷர்மா முன்னேற்றம்


டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை: ஸ்டீவன் சுமித்தை நெருங்கினார், கோலி - அகர்வால், இஷாந்த் ‌ஷர்மா முன்னேற்றம்
x
தினத்தந்தி 26 Nov 2019 4:39 PM GMT (Updated: 26 Nov 2019 11:52 PM GMT)

டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி, ‘நம்பர் ஒன்’ இடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் சுமித்தை நெருங்கியுள்ளார்.

துபாய்,

கொல்கத்தாவில் நடந்த பகல்-இரவு பிங்க் பந்து டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை துவம்சம் செய்தது. பிரிஸ்பேன் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 5 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை புரட்டியெடுத்தது. மவுன்ட்மாங்கானுவில் நடந்த முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 65 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் பணிந்தது.

இந்த 3 போட்டிகளில் வீரர்களின் செயல்பாட்டின் அடிப்படையில் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.). நேற்று வெளியிட்டது.

இதன்படி பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவன் சுமித் 931 புள்ளிகளுடன் மாற்றமின்றி முதலிடத்தில் தொடருகிறார். ஆனால் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் 4 ரன்னில் ஆட்டம் இழந்ததன் மூலம் தரவரிசையில் 6 புள்ளிகளை இழந்துள்ளார். இந்திய கேப்டன் விராட் கோலி 2-வது இடத்தில் நீடித்தாலும், ஸ்டீவன் சுமித்தை வெகுவாக நெருங்கியுள்ளார். பிங்க் பந்து டெஸ்டில் 136 ரன்கள் விளாசி 16 புள்ளிகளை கூடுதலாக பெற்ற கோலி மொத்தம் 928 புள்ளிகளுடன் இருக்கிறார். சுமித்தை விட கோலி 3 புள்ளி மட்டுமே பின்தங்கி இருந்தாலும், இந்த ஆண்டில் இந்திய அணிக்கு இனி டெஸ்ட் போட்டிகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா 10-ல் இருந்து 13-வது இடத்திற்கு சரிந்துள்ளார். அதே சமயம் வங்காளதேசத்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இரட்டை சதம் அடித்த மற்றொரு தொடக்க வீரர் மயங்க் அகர்வால் ஒரு இடம் அதிகரித்து முதல்முறையாக டாப்-10 இடத்திற்குள் வந்து 10-வது இடத்தை பிடித்துள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் 91, 28 ரன்கள் வீதம் எடுத்த இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் 3 இடங்கள் முன்னேறி 9-வது இடத்தை பெற்று இருக்கிறார். ஸ்டோக்ஸ் முதல் 10 இடத்திற்குள் வருவது இதுவே முதல் முறையாகும். இதே டெஸ்டில் 205 ரன்கள் குவித்து நியூசிலாந்து அணிக்காக இரட்டை சதம் நொறுக்கிய முதல் விக்கெட் கீப்பர் என்ற சிறப்பை பெற்ற வாட்லிங் கிடுகிடுவென 12 இடங்கள் எகிறி 693 புள்ளிகளுடன் 12-வது இடத்தை கைப்பற்றி இருக்கிறார். பிரிஸ்பேன் டெஸ்டில் 185 ரன்கள் சேர்த்து மிரட்டிய ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுஸ்சேன் 684 புள்ளிகளுடன் 14-வது இடத்தில் (21 இடம் ஏற்றம்) உள்ளார். இதே போட்டியில் சதம் கண்ட மற்றொரு ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் 6 இடங்கள் உயர்வோடு 17-வது இடம் வகிக்கிறார்.

பேட்டிங்கில் தொடர்ந்து தடுமாறி வரும் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 2014-ம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக டாப்-10 இடத்தை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார். 7-வது இடத்தில் இருந்த அவர் தற்போது 11-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளார்.

பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் முதல் 2 இடங்களில் ஆஸ்திரேலியாவின் கம்மின்சும், தென்ஆப்பிரிக்காவின் காஜிசோ ரபடாவும் தொடருகிறார்கள். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் 8 விக்கெட்டுகளை சாய்த்த நியூசிலாந்து இடக்கை வேகப்பந்து வீச்சாளர் நீல் வாக்னெர் 5 இடங்கள் முன்னேறி தனது வாழ்க்கையில் சிறந்த நிலையாக 3-வது இடத்தை ஆக்கிரமித்துள்ளார்.



 



  வங்காளதேசத்துக்கு எதிரான பகல்-இரவு டெஸ்டில் இரு இன்னிங்சையும் சேர்த்து மொத்தம் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி ஹீரோவாக ஜொலித்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ‌ஷர்மா (716 புள்ளி) 3 இடங்கள் உயர்ந்து 17-வது இடத்தை பெற்றுள்ளார். இதே டெஸ்டில் 8 விக்கெட்டுகளை அள்ளிய இன்னொரு இந்திய பவுலர் உமேஷ் யாதவுக்கு (672 புள்ளி) ஒரு இடம் ஏற்றம் (21-வது இடம்) கிடைத்துள்ளது.

அதே சமயம் 7-வது இடத்தில் இருந்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ‌ஷமி 11-வது இடத்துக்கு சறுக்கியுள்ளார். ஜஸ்பிரித் பும்ரா 5-வது இடத்திலும் (ஒரு இடம் குறைவு), அஸ்வின் 9-வது இடத்திலும் (ஒரு இடம் உயர்வு) உள்ளனர்.


Next Story