கிரிக்கெட்

“திருமணத்திற்கு முன்பு வரை அனைத்து ஆண்களும் சிங்கம் தான்” - டோனி ருசிகர பேச்சு + "||" + All men are lions until married: MS Dhoni

“திருமணத்திற்கு முன்பு வரை அனைத்து ஆண்களும் சிங்கம் தான்” - டோனி ருசிகர பேச்சு

“திருமணத்திற்கு முன்பு வரை அனைத்து ஆண்களும் சிங்கம் தான்” - டோனி ருசிகர பேச்சு
திருமணத்திற்கு முன்பு வரை அனைத்து ஆண்களும் சிங்கம் தான் என்று டோனி தெரிவித்தார்.
சென்னை,

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் 38 வயதான டோனி திருமண தகவல் மையம் சார்பில் சென்னையில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திருமண வாழ்க்கை குறித்து பேசியதாவது:-

எனக்கும், சாக்‌ஷிக்கும் 2010-ம் ஆண்டில் திருமணம் நடந்தது. அன்று முதல் அவருக்கு ஏற்ற கணவராக நடந்து கொள்கிறேன். திருமணத்திற்கு பிறகு வீட்டின் நிர்வாகத்தை அவர் தான் கவனித்துக் கொள்கிறார். அவர் மகிழ்ச்சியாக இருந்தால் தான் நான் சந்தோஷமாக இருக்க முடியும் என்பதை அறிவேன். அவர் சொல்லும் எல்லா விஷயங்களுக்கும், அவரது செயல்களுக்கும் நான் சரி, ஆம் என்று சொன்னால் மட்டுமே மகிழ்ச்சியாக இருப்பார். அதனால் ஒரு போதும் எனது மனைவியின் செயலுக்கு இடையூறு செய்ததில்லை.


திருமணத்துக்கு முன்பு வரை அனைத்து ஆண்களும் சிங்கம் போன்று தான் இருப்பார்கள். ஆனால் திருமணத்திற்கு பிறகு எல்லாம் மாறி விடும். உண்மையான திருமண பந்தத்தை 50 வயது கடந்த பிறகே உணர முடியும். 55 வயதை தொடும் போது, அதை காதலின் உண்மையான வயது என்று சொல்வேன். உங்களது அன்றாட பணிகளில் இருந்து சற்று விலகிச் செல்வது அங்கிருந்து தான் தொடங்குகிறது. வயதாகும் போது கணவன்-மனைவி உறவு மேலும் வலுவடைகிறது. இவ்வாறு டோனி கூறினார்.

இதற்கிடையே நேற்று மும்பை வந்த டோனியிடம், கிரிக்கெட்டில் இருந்து தொடர்ந்து விலகி இருப்பது குறித்தும், வருங்கால திட்டம் குறித்தும் நிருபர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினார்கள். அதற்கு டோனி, ‘ஜனவரி மாதம் வரை என்னிடம் எதுவும் கேட்காதீர்கள்’ என்று கூறிவிட்டு நழுவினார்.


ஆசிரியரின் தேர்வுகள்...