ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் மோதும்: பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் - அடிலெய்டில் இன்று தொடக்கம்


ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் மோதும்: பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் - அடிலெய்டில் இன்று தொடக்கம்
x
தினத்தந்தி 28 Nov 2019 11:28 PM GMT (Updated: 28 Nov 2019 11:28 PM GMT)

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடிலெய்டில் இன்று தொடங்குகிறது.

அடிலெய்டு,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் பிரிஸ்பேனில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் மற்றும் 5 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடிலெய்டில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இது பகல்-இரவு மோதல் என்பது கூடுதல் சிறப்பம்சமாகும்.

பகல்-இரவாக அரங்கேறும் 13-வது டெஸ்ட் இதுவாகும். ஆஸ்திரேலிய அணி இதுவரை விளையாடிய 5 பகல்-இரவு டெஸ்டிலும் வாகை சூடியுள்ளது. இந்த போட்டியிலும் அவர்களின் ஆதிக்கம் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த டெஸ்டுக்கு என்று பிரத்யேகமாக பயன்படுத்தப்படும் பிங்க் நிற பந்து வேகப்பந்து வீச்சுக்கு சாதகமானது. உள்ளூர் ‘சூறாவளிகள்’ மிட்செல் ஸ்டார்க், ஹேசில்வுட், கம்மின்ஸ் உள்ளிட்டோர் மிரட்ட காத்திருக்கிறார்கள்.

முந்தைய டெஸ்டில் 4 ரன்னில் ஆட்டம் இழந்ததால் தன்னை தண்டிக்கும் விதமாக மைதானத்தில் இருந்து ஓட்டல் வரை 3 கிலோமீட்டர் தூரத்துக்கு ஓடிச்சென்ற ‘ரன்குவிக்கும் எந்திரம்’ என்று வர்ணிக்கப்படும் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் சுமித் இந்த டெஸ்டில் நிலைத்து நின்று ஆடுவதை எதிர்நோக்கி உள்ளார். அவர் 23 ரன் எடுத்தால் டெஸ்டில் 7 ஆயிரம் ரன் மைல்கல்லை எட்டுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் அணி பகல்-இரவு டெஸ்டில் கால்பதிப்பது இது 4-வது முறையாகும். முதல் மூன்று பிங்க் பந்து டெஸ்டில் அந்த அணி ஒன்றில் வெற்றியும், 2-ல் தோல்வியும் கண்டுள்ளது. முதலாவது டெஸ்டில் பாபர் அசாம், ஆசாத் ஷபிக், விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் ஆகியோர் பேட்டிங்கில் கணிசமான பங்களிப்பை அளித்தனர். ஆனால் பந்து வீச்சு தான் மெச்சும்படி இல்லை. இதனால் இந்த டெஸ்டில் பாகிஸ்தான் அணியில் சில மாற்றங்கள் இருக்கும். ஹாரிஸ் சோகைலுக்கு பதிலாக இமாம் உல்-ஹக்கும், இம்ரான் கானுக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் முகமது அப்பாசும் சேர்க்கப்படுவார்கள் என்று தெரிகிறது.

பகல்-இரவு டெஸ்டில் அதிக ரன் குவித்த வீரரும் (பாகிஸ்தானின் அசார் அலி 456 ரன்), அதிக விக்கெட் எடுத்த வீரரும் (ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் 26 விக்கெட்) இந்த டெஸ்டில் விளையாட இருப்பது சுவாரஸ்யமான விஷயமாகும்.

பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலிய மண்ணில் கடைசியாக ஆடிய 13 டெஸ்டுகளில் தோல்வியையே தழுவியுள்ளது. அங்கு கடைசியாக 1995-ம் ஆண்டில் வெற்றி பெற்றது. நீண்ட கால இந்த சோகத்துக்கு பாகிஸ்தான் முடிவு கட்டுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

போட்டி நடக்கும் எல்லா நாட்களும் மழை குறுக்கீடு இருக்க வாய்ப்புள்ளதாக அங்குள்ள வானிலை மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

போட்டிக்கான இரு அணி வீரர்கள் விவரம் வருமாறு:-

ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், ஜோ பர்ன்ஸ், லபுஸ்சேன், ஸ்டீவன் சுமித், டிராவிஸ் ஹெட், மேத்யூ வேட், டிம் பெய்ன் (கேப்டன்), கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், ஹேசில்வுட்.

பாகிஸ்தான் : ஷான் மசூத், இமாம் உல்-ஹக், அசார் அலி (கேப்டன்), பாபர் அசாம், ஆசாத் ஷபிக், இப்திகார் அகமது, முகமது ரிஸ்வான், யாசிர் ஷா, ஷகீன் அப்ரிடி, முகமது அப்பாஸ், நயீம் ஷா அல்லது முகமது முசா.

இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி சிக்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Next Story