டெஸ்ட் கிரிக்கெட்: ஆப்கானிஸ்தானை எளிதில் வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்


டெஸ்ட் கிரிக்கெட்: ஆப்கானிஸ்தானை எளிதில் வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்
x
தினத்தந்தி 29 Nov 2019 11:21 PM GMT (Updated: 29 Nov 2019 11:21 PM GMT)

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி, ஆப்கானிஸ்தானை எளிதில் வீழ்த்தியது.

லக்னோ,

வெஸ்ட்இண்டீஸ் - ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் கடந்த 27-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே ஆப்கானிஸ்தான் 187 ரன்களும், வெஸ்ட் இண்டீஸ் 277 ரன்களும் எடுத்தன. 90 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆப்கானிஸ்தான் 2-வது நாள் முடிவில் 7 விக்கெட்டுக்கு 109 ரன்களுடன் ஊசலாடியது. இந்த நிலையில் 3-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய ஆப்கானிஸ்தான் 120 ரன்னில் சுருண்டது. எஞ்சிய 3 விக்கெட்டுகளையும் வேகப்பந்து வீச்சாளர் ஜாசன் ஹோல்டர் சாய்த்தார். இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 31 ரன்கள் இலக்கை வெஸ்ட் இண்டீஸ் அணி 6.2 ஓவர்களில் எட்டிப்பிடித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 1995-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணி டெஸ்டில் ருசித்த முதல் வெற்றி இதுவாகும். இரண்டு இன்னிங்சையும் சேர்த்து மொத்தம் 10 விக்கெட்டுகளை கைப்பற்றிய வெஸ்ட்இண்டீஸ் சுழற்பந்து வீச்சாளர் 140 கிலோ எடை கொண்ட ரகீம் கார்ன்வால் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

வெற்றிக்கு பிறகு வெஸ்ட்இண்டீஸ் கேப்டன் ஜாசன் ஹோல்டர் கூறுகையில், ‘அணிக்கு வந்துள்ள புதிய வீரர்கள் பொறுப்புடன் ஆடியதை பார்க்க திருப்தி அளிக்கிறது. அணியை வலுப்படுத்துவதிலும், மேம்படுத்துவதிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறோம். இதை சரியாக செய்து விட்டால், உலகின் எந்த அணிக்கு எதிராகவும் சவால் அளிக்க முடியும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 4 அல்லது 5-வது இடத்தை எங்களால் பிடிக்க முடியும் என்று நம்புகிறேன்’ என்றார்.


Next Story