சையத் முஸ்தாக் அலி கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் 5 விக்கெட் வீழ்த்தி கர்நாடக வீரர் அபிமன்யு மிதுன் சாதனை


சையத் முஸ்தாக் அலி கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் 5 விக்கெட் வீழ்த்தி கர்நாடக வீரர் அபிமன்யு மிதுன் சாதனை
x
தினத்தந்தி 29 Nov 2019 11:29 PM GMT (Updated: 29 Nov 2019 11:29 PM GMT)

சையத் முஸ்தாக் அலி கோப்பை கிரிக்கெட் போட்டியில் கர்நாடக வேகப்பந்து வீச்சாளர் அபிமன்யு மிதுன் ஒரே ஓவரில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அமர்க்களப்படுத்தினார்.

சூரத்,

சையத் முஸ்தாக் அலி கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டித் தொடர் குஜராத் மாநிலம் சூரத்தில் நடந்து வருகிறது. நேற்று நடந்த அரைஇறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கர்நாடக அணி, அரியானாவை எதிர்கொண்டது. இதில் முதலில் பேட் செய்த அரியானா 8 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் சேர்த்தது. கர்நாடகா வேகப்பந்து வீச்சாளர் அபிமன்யு மிதுன் 39 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த 5 விக்கெட்டுகளையும் அவர் ஹாட்ரிக் உள்பட ஒரே ஓவரில் அறுவடை செய்தது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

இன்னிங்சின் 20-வது ஓவரில் அவர் முதல் 4 பந்துகளில் ஹிமன்சு ராணா (61 ரன்), ராகுல் திவேதியா (32 ரன்), சுமித் குமார் (0), அமித் மிஸ்ரா (0) ஆகியோரையும் கடைசி பந்தில் ஜெயந்த் யாதவையும் (0) காலி செய்தார்.

இதன் மூலம் உள்நாட்டில் நடக்கும் மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் அதாவது சையத் முஸ்தாக் அலி (20 ஓவர்), விஜய் ஹசாரே (50 ஓவர்), ரஞ்சி கோப்பை (4 நாள் முதல்தர போட்டி) ஆகிய போட்டிகளில் ‘ஹாட்ரிக்’ விக்கெட் வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை 30 வயதான அபிமன்யு மிதுன் படைத்தார்.

அடுத்து களம் இறங்கிய கர்நாடகா 15 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 195 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. தொடக்க ஆட்டக்காரர்கள் தேவ்தத் படிக்கல் 87 ரன்களும்(11 பவுண்டரி, 4 சிக்சர்), லோகேஷ் ராகுல் 66 ரன்களும் (4 பவுண்டரி, 6 சிக்சர்) நொறுக்கினர்.

மற்றொரு அரைஇறுதியில் தமிழ்நாடு - ராஜஸ்தான் அணிகள் சந்தித்தன. இதில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் 9 விக்கெட்டுக்கு 112 ரன்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டது. விஜய் சங்கர் 2 விக்கெட்டும், ஆர்.அஸ்வின், நடராஜன், வாஷிங்டன் சுந்தர், சித்தார்த், சாய் கிஷோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இந்த எளிய இலக்கை தமிழக அணி 17.5 ஓவர்களில் எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. வாஷிங்டன் சுந்தர் (54 ரன்) அரைசதம் அடித்தார்.

இதே மைதானத்தில் நாளை நடக்கும் இறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு-கர்நாடகா அணிகள் மோதுகின்றன.


Next Story