பாகிஸ்தானுக்கு எதிரான பகல்-இரவு டெஸ்டில் வார்னர், லபுஸ்சேன் சதம் - ஆஸ்திரேலிய அணி ரன் குவிப்பு


பாகிஸ்தானுக்கு எதிரான பகல்-இரவு டெஸ்டில் வார்னர், லபுஸ்சேன் சதம் - ஆஸ்திரேலிய அணி ரன் குவிப்பு
x
தினத்தந்தி 29 Nov 2019 11:58 PM GMT (Updated: 29 Nov 2019 11:58 PM GMT)

பாகிஸ்தானுக்கு எதிரான பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் வார்னர், லபுஸ்சேன் சதம் அடித்தனர்.

அடிலெய்டு,

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடிலெய்டில் நேற்று பகல்-இரவு மோதலாக தொடங்கியது. பாகிஸ்தான் அணியில் மூன்று மாற்றமாக இம்ரான் கான், நயீம் ஷா, ஹாரிஸ் சோகைல் ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக இமாம் உல்-ஹக், முகமது அப்பாஸ் மற்றும் அறிமுக வீரர் முகமது மூசா இடம் பிடித்தனர். ஆஸ்திரேலிய அணியில் மாற்றம் இல்லை.

‘டாஸ்’ ஜெயித்த ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதன்படி ஜோ பர்ன்சும், டேவிட் வார்னரும் ஆஸ்திரேலியாவின் இன்னிங்சை தொடங்கினர். பர்ன்ஸ் 4 ரன்னில் கேட்ச் ஆனார். இதன் பின்னர் வார்னருடன், மார்னஸ் லபுஸ்சேன் கைகோர்த்தார். ஆரம்பத்தில் நிதானம் காட்டிய இவர்கள் தங்களை வலுவாக நிலைநிறுத்திக் கொண்ட பிறகு வேகமாக ரன் திரட்டினர். ஆஸ்திரேலியா ஒரு விக்கெட்டுக்கு 70 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் 2 மணி நேரம் பாதிக்கப்பட்டது.

தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய வீரர்கள், பிங்க் நிற பந்தை அடித்து நொறுக்கினர். பாகிஸ்தான் பவுலர்களுக்கு ‘தண்ணி’ காட்டிய வார்னர் தனது 23-வது சதத்தை நிறைவு செய்தார். பாகிஸ்தானுக்கு எதிராக 5-வது சதமாகும். அதே சமயம் பகல்-இரவு டெஸ்டில் அவரது முதல் சதமாகவும் அமைந்தது. மறுமுனையில் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்திய லபுஸ்சேன் தனது 2-வது சதத்தை எட்டினார். இவர்கள் இருவரும் முந்தைய டெஸ்டிலும் இதே போல் சதம் அடித்தது நினைவு கூரத்தக்கது.

இறுதிகட்டத்தில் ஒரு நாள் போட்டி போன்று ஸ்கோர் துரிதமாக நகர்ந்தது. 6 பவுலர்களை பயன்படுத்தி பார்த்தும் இந்த கூட்டணியை உடைக்க முடியவில்லை.

ஆட்ட நேர இறுதியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 73 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 302 ரன்கள் குவித்துள்ளது.

டேவிட் வார்னர் 166 ரன்களுடனும் (228 பந்து, 19 பவுண்டரி), லபுஸ்சேன் 126 ரன்களுடனும் (205 பந்து, 17 பவுண்டரி) களத்தில் உள்ளனர்.



 


  வார்னர்-லபுஸ்சேன் ஜோடி இதுவரை 294 ரன்கள் சேகரித்துள்ளனர். பகல்-இரவு டெஸ்டில் பாட்னர்ஷிப்பாக ஒரு ஜோடி 250 ரன்களுக்கு மேல் எடுப்பது இதுவே முதல் நிகழ்வாகும்.

மேலும் பாகிஸ்தானுக்கு எதிராக 2-வது விக்கெட்டுக்கு ஆஸ்திரேலிய ஜோடி எடுத்த அதிகபட்சமாகவும் இது பதிவானது. இதற்கு முன்பு 1998-ம் ஆண்டு பெஷாவரில் நடந்த டெஸ்டில் ஜஸ்டின் லாங்கர்- மார்க் டெய்லர் 2-வது விக்கெட்டுக்கு 279 ரன்கள் எடுத்ததே சிறந்ததாக இருந்தது. அந்த 21 ஆண்டு கால சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெறும்.

அதிக சதம் அடித்த தொடக்க வீரர் யார்?

* ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் இதுவரை அடித்துள்ள அனைத்து சதங்களும் (81 டெஸ்டில் 23 சதம்) தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கி அடித்தவையாகும். இந்தியாவின் சுனில் கவாஸ்கர் (33 சதம்), இங்கிலாந்தின் அலஸ்டயர் குக் (31), ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஹைடன் (30), தென்ஆப்பிரிக்காவின் கிரேமி சுமித் (27) ஆகியோருக்கு அடுத்து டெஸ்டில் அதிக சதங்கள் விளாசிய தொடக்க வீரராக வார்னர் வலம் வருகிறார்.

* டெஸ்டில் இந்த ஆண்டில் அதிக ரன்கள் குவித்துள்ள வீரர்களின் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் லபுஸ்சேன் முதலிடத்திற்கு (9 டெஸ்டில் 793 ரன்) முன்னேறியுள்ளார். அடுத்த இடங்களில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் சுமித் (6 டெஸ்டில் 778 ரன்), இந்தியாவின் மயங்க் அகர்வால் (8 டெஸ்டில் 754 ரன்) உள்ளனர்.



Next Story