கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட் ஏலம்: மேக்ஸ்வெல் உள்பட 7 வீரர்களின் தொடக்க விலை ரூ.2 கோடி + "||" + IPL Cricket Auction: The starting price of 7 players, including Maxwell, is Rs 2 crore

ஐ.பி.எல். கிரிக்கெட் ஏலம்: மேக்ஸ்வெல் உள்பட 7 வீரர்களின் தொடக்க விலை ரூ.2 கோடி

ஐ.பி.எல். கிரிக்கெட் ஏலம்: மேக்ஸ்வெல் உள்பட 7 வீரர்களின் தொடக்க விலை ரூ.2 கோடி
ஐ.பி.எல். கிரிக்கெட் ஏலப்பட்டியலில் மேக்ஸ்வெல் உள்பட 7 வீரர்களின் தொடக்க விலை ரூ.2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா,

13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் வருகிற 19-ந்தேதி கொல்கத்தாவில் நடக்கிறது. 8 அணிகளில் மொத்தம் 73 இடங்களை நிரப்புவதற்கு நடக்கும் இந்த ஏலத்திற்கு 258 வெளிநாட்டவர் உள்பட 971 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். இதில் 55 ஆஸ்திரேலிய வீரர்களும் அடங்குவர்.


ஏலப்பட்டியலில் இருந்து தங்களுக்கு விருப்பமான வீரர்களின் விவரத்தை அணி உரிமையாளர்கள் வருகிற 9-ந்தேதி மாலை 5 மணிக்குள் ஐ.பி.எல். நிர்வாகத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும். அதன் பிறகு ஏலத்திற்கான இறுதிகட்ட வீரர்களின் பட்டியல் வெளியிடப்படும்.

இதில் இடம் பிடித்துள்ள வீரர்களில் அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ், ஹேசில்வுட், கிறிஸ் லின், மிட்செல் மார்ஷ், கிளைன் மேக்ஸ்வெல், தென்ஆப்பிரிக்காவின் ஸ்டெயின், இலங்கையின் மேத்யூஸ் ஆகியோரின் அடிப்படை விலை ரூ.2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது ஏலத்தில் இவர்களது விலை ரூ.2 கோடியில் இருந்து தொடங்கும்.

மனஅழுத்தம் காரணமாக சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தற்காலிகமாக விடைபெற்ற ஆஸ்திரேலிய அதிரடி ஆட்டக்காரர் மேக்ஸ்வெல் சமீபத்தில் கிளப் போட்டிகளில் விளையாடினார். இருப்பினும் ஆஸ்திரேலிய அணிக்கு திரும்புவது குறித்து எதுவும் வெளிப்படையாக சொல்லவில்லை. ஆனால் ஐ.பி.எல்.-ல் ஆடுவதற்கு ஆர்வமாக உள்ளார்.

இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் (27 விக்கெட்) வீழ்த்தியவரான 29 வயதான ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தொடர்ந்து 2-வது முறையாக ஐ.பி.எல்.-ல் இருந்து விலகி இருக்கிறார். இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டன் ஜோ ரூட்டும் விலகியவர்களில் முக்கியமானவர் ஆவார்.

இந்திய வீரர் ராபின் உத்தப்பா மற்றும் ஷான்மார்ஷ், கேன் ரிச்சர்ட்சன் (இருவரும் ஆஸ்திரேலியா), மோர்கன், ஜாசன் ராய், கிறிஸ் வோக்ஸ், டேவிட் வில்லி (4 பேரும் இங்கிலாந்து), கிறிஸ் மோரிஸ், கைல் அப்போட் (2 பேரும் தென்ஆப்பிரிக்கா) உள்ளிட்டோரின் அடிப்படை விலை ரூ.1½ கோடியாக குறிப்பிடப்பட்டுள்ளது.