தந்தையின் கடின உழைப்பால் ஜூனியர் அணியின் கேப்டன் ஆகியிருக்கிறேன் - பிரியம் கார்க் பேட்டி


தந்தையின் கடின உழைப்பால் ஜூனியர் அணியின் கேப்டன் ஆகியிருக்கிறேன் - பிரியம் கார்க் பேட்டி
x
தினத்தந்தி 3 Dec 2019 10:43 PM GMT (Updated: 3 Dec 2019 10:43 PM GMT)

இந்திய ஜூனியர் அணியின் கேப்டன் பதவி, தனது தந்தையின் கடின உழைப்புக்கு கிடைத்த பரிசு என்று பிரியம் கார்க் கூறினார்.


மும்பை,

19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (ஜனவரி) 17-ந்தேதி முதல் பிப்ரவரி 9-ந்தேதி வரை தென்ஆப்பிரிக்காவில் நடக்கிறது. இதில் 4 முறை சாம்பியனான இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்பட 16 அணிகள் கலந்து கொள்கின்றன.

இந்த போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக 19 வயதான பிரியம் கார்க் நியமிக்கப்பட்டு உள்ளார். உத்தரபிரதேச மாநிலம் மீரட் அருகே குயிலா பாரிக்‌ஷிட்கார் என்ற சிறிய கிராமத்தை சேர்ந்தவர். கேப்டன் ஆகி விட்டதால் இப்போது ரசிகர்களின் பார்வை பிரியம் கார்க் மீது திரும்பியுள்ளது. தனது வளர்ச்சி குறித்து பிரியம் கார்க் கூறியதாவது:-

எனது தந்தை நரேஷ் கார்க், பள்ளி வேன் டிரைவர். எனக்கு ஒரு சகோதரரும், மூன்று சகோதரிகளும் உள்ளனர். எங்கள் வீட்டில் நான் தான் கடைகுட்டி. எங்களது பெரிய குடும்பத்தை கவனிப்பதற்கும், எனது கிரிக்கெட் பயணத்தை தொடருவதற்கும் எனது தந்தையின் வருமானம் போதுமான அளவுக்கு இல்லை. ஆனாலும் விளையாட்டு மீதான எனது ஆர்வத்தையும், அர்ப்பணிப்பு உணர்வையும் கண்ட எனது தந்தை, தனது நண்பர்களிடம் கடன் வாங்கி கிரிக்கெட் உபகரணங்கள் வாங்கித் தந்தார். பயிற்சிக்கும் ஏற்பாடு செய்தார். அதைத் தொடர்ந்து முறைப்படி எனது கிரிக்கெட் பயிற்சியை தொடங்கினேன். தந்தையின் கடின உழைப்பால் தான் இன்று ஜூனியர் அணியின் கேப்டன் அந்தஸ்தை எட்டியிருக்கிறேன்.

2011-ம் ஆண்டில் எனது தாயார் இறந்து விட்டார். இந்திய அணிக்காக நான் விளையாட வேண்டும் என்பதே அவரது கனவு. இப்போது நான் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியின் கேப்டனாகி விட்டேன். ஆனால் அதை பார்க்க தாயார் இல்லையே என்பதை நினைக்கும் போது வேதனையாக இருக்கிறது.

தினமும் 7-8 மணிநேரம் பயிற்சி செய்வேன். அதே சமயம் படிப்பையும் தொடருகிறேன். மீரட்டில் பயிற்சியாளர் சஞ்சய் ரஸ்தோகி மிகவும் உதவிகரமாக இருந்தார். அவரது பயிற்சியும், இன்னொரு பக்கம் எனது தந்தையின் சீரிய முயற்சியின் பலனாக 2018-ம் ஆண்டில் ரஞ்சி அணிக்கு தேர்வானேன். ரஞ்சி கிரிக்கெட்டில் அறிமுக ஆட்டத்திலேயே சதம் (117 ரன்) அடித்தேன்.

ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரை சந்தித்து அவரிடம் ஆலோசனைகளை பெற வேண்டும், என்றாவது ஒரு நாள் இந்திய சீனியர் அணியில் இடம் பிடித்து விளையாட வேண்டும் என்பதே எனது ஆசை. இவ்வாறு பிரியம் கார்க் கூறினார்.

உத்தரபிரதேச கிரிக்கெட் சங்க இயக்குனர் யுத்வீர் சிங் கூறுகையில், ‘முகமது கைப், சுரேஷ் ரெய்னா, ஆர்.பி.சிங், பிரவீன்குமார், குல்தீப் யாதவ் போன்ற வீரர்களை உத்தரபிரதேச கிரிக்கெட் இந்திய அணிக்கு வழங்கியுள்ளது. இதில் குல்தீப் யாதவ் இந்திய அணியில் தற்போதும் இருக்கிறார். இந்த வரிசையில் வருங்காலத்தில் பிரியம் கார்க்கும் இடம் பிடிப்பார் என்று நம்புகிறேன்’ என்றார்.


Next Story