இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட்: நியூசிலாந்து வீரர்கள் வில்லியம்சன், ராஸ் டெய்லர் சதம் - போட்டி ‘டிரா’ ஆனது + "||" + Last Test cricket against England: New Zealanders Williamson, Ross Taylor century - Match Draw
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட்: நியூசிலாந்து வீரர்கள் வில்லியம்சன், ராஸ் டெய்லர் சதம் - போட்டி ‘டிரா’ ஆனது
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன், ராஸ் டெய்லர் ஆகியோர் சதம் அடித்தனர். இந்த போட்டி டிராவில் முடிந்தது.
ஹாமில்டன்,
இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் கடந்த 29-ந் தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே நியூசிலாந்து 375 ரன்களும், இங்கிலாந்து 476 ரன்களும் குவித்தன. 101 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து அணி 4-வது நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 96 ரன்கள் எடுத்து இருந்தது. கேப்டன் கேன் வில்லியம்சன் 37 ரன்னுடனும், ராஸ் டெய்லர் 31 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நேற்று நடந்தது. தொடர்ந்து நிலைத்து ஆடிய வில்லியம்சனும், ராஸ் டெய்லரும் விக்கெட்டுகள் சரியாமல் தடுத்தனர். வில்லியம்சனுக்கு அதிர்ஷ்டமும் கைகொடுத்தது. 2 முறை எளிய கேட்ச் வாய்ப்பில் இருந்தும், ஒருமுறை ‘ரன்-அவுட்’ வாய்ப்பில் இருந்தும் தப்பிய வில்லியம்சன் தனது 21-வது சதத்தை எட்டினார்.
மழை பெய்ய இருப்பதை உணர்ந்த ராஸ் டெய்லர், ஜோரூட் வீசிய ஒரு ஓவரில் ஒரு பவுண்டரி, 2 சிக்சர்கள் தொடர்ச்சியாக விளாசி தனது 19-வது சதத்தை பூர்த்தி செய்தார். டெஸ்ட் போட்டியில் அதிக சதம் அடித்த நியூசிலாந்து வீரர்களில் முதல் 2 இடங்களில் வில்லியம்சன், ராஸ் டெய்லர் இருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த ஓவரிலேயே மழையும் குறுக்கிட்டதால் மேற்கொண்டு ஆட்டத்தை தொடர இயலவில்லை.
நியூசிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 75 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் சேர்த்த நிலையில், இந்த டெஸ்ட் டிராவில் முடித்துக் கொள்ளப்பட்டது. வில்லியம்சன் 234 பந்துகளில் 11 பவுண்டரியுடன் 104 ரன்னும், ராஸ் டெய்லர் 186 பந்துகளில் 11 பவுண்டரி, 2 சிக்சருடன் 105 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இதன் மூலம் 2 ஆட்டங்கள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரை நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது, மவுன்ட்மாங்கானுவில் நடந்த முதலாவது டெஸ்டில் நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. இரட்டை சதம் நொறுக்கிய இங்கிலாந்து கேப்டன் ஜோரூட் ஆட்டநாயகன் விருதையும், தொடரில் மொத்தம் 13 விக்கெட்டுகள் வீழ்த்திய நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் நீல் வாக்னெர் தொடர்நாயகன் விருதையும் பெற்றனர்.
முன்னதாக நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர் 83 ரன்னை எட்டிய போது, டெஸ்டில் 7,000 ரன்களை கடந்த 2-வது நியூசிலாந்து வீரர் என்ற சிறப்பை பெற்றார். அவர் 96 டெஸ்ட் போட்டியில் ஆடி 7,022 ரன்கள் எடுத்துள்ளார். நியூசிலாந்து முன்னாள் கேப்டன் ஸ்டீபன் பிளமிங் 111 டெஸ்ட் போட்டியில் விளையாடி 7,172 ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார்.
போட்டி முடிந்த பிறகு நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் கூறுகையில், ‘இரண்டு டெஸ்ட் போட்டியிலும் ‘டாஸ்சை’ இழந்த நிலையிலும் நாங்கள் கடைசி வரை போராடிய விதம் திருப்தி அளிக்கிறது. எங்கள் அணியின் ஒட்டு மொத்த செயல்பாடு நன்றாக இருந்தது. அடுத்து நாங்கள் ஆஸ்திரேலியா சென்று அந்த நாட்டு அணியுடன் டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கிறோம். சிறந்த அணியான ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் சவாலானதாக இருக்கும். அங்குள்ள சீதோஷ்ண நிலைக்கு தக்கபடி நாங்கள் விரைவாக மாற வேண்டியது முக்கியமானதாகும்’ என்றார்.
தொடர் யாருக்கு என்பதை முடிவு செய்யும் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் இன்று (புதன்கிழமை) இரவு 7 மணிக்கு நடக்கிறது.