கிரிக்கெட்

‘பாராட்டுகள்தான் வாழ்க்கையை உற்சாகப்படுத்துகிறது’ -விருத்திமான் சஹா + "||" + Appreciation is what makes life exciting

‘பாராட்டுகள்தான் வாழ்க்கையை உற்சாகப்படுத்துகிறது’ -விருத்திமான் சஹா

‘பாராட்டுகள்தான் வாழ்க்கையை உற்சாகப்படுத்துகிறது’ -விருத்திமான் சஹா
பாராட்டுகள்தான் வாழ்க்கையை உற்சாகப்படுத்துகிறது என்று இந்திய கிரிக்கெட் அணி விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் என்றால், மகேந்திரசிங் டோனிதான் நினைவுக்கு வருவார். ஆனால் டோனியின் ‘ஆப்சென்ட்’ இந்திய கிரிக்கெட் அணிக்கு புதுப்புது விக்கெட் கீப்பர்களை பழக்கப்படுத்தி வருகிறது. அதில் டெஸ்ட் போட்டிகளுக்கான விக்கெட் கீப்பர் தேர்வில், ‘பாஸ்’ மார்க் வாங்கியிருப்பவர், விருத்திமான் சஹா.

இந்திய கிரிக்கெட் அணியில் பேட்ஸ்மேன் பட்டியலில் இணைந்து, இன்று டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பான விக்கெட் கீப்பராக பட்டைய கிளப்பி வருகிறார். குறிப்பாக தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் போட்டி களிலும், வங்காள தேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் தாவி பறந்து ‘சூப்பர்மேன் கேட்ச்’ இரண்டு மூன்று பிடித்து, ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். அதனால் சமூக வலைத்தளங்களில் ‘சூப்பர்மேன்’ என புகழப்பட்ட சஹா, தன் மவுனம் கலைந்து பேசியிருக்கிறார்.

2019-ம் வருடம், உங்களுக்கு நன்றாக அமைந்திருக்கிறது அல்லவா?

என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில், 2019-ம் வருடத்தை அதிர்ஷ்டத்தின் ஆண்டாகவே கருதுகிறேன். ஏனெனில் ஐ.பி.எல்.போட்டியிலும் நன்றாக விளையாடினேன். அதேபோல இந்தியாவில் நடந்த டெஸ்ட் போட்டிகளிலும் குறிப்பிட தகுந்த முறையில் விளையாடியிருக்கிறேன்.

விக்கெட் கீப்பிங், பேட்டிங் இவ்விரண்டில் எது உங்களுடைய பலம்? எது பலவீனம்?

இரண்டையும் சமநிலையில் வைத்திருக்க முயற்சிக்கிறேன். ஆனால் சமநிலை தவறிவிடுகிறது. பேட்டிங் சிறப்பாக இருக்கும்போது, விக்கெட் கீப்பிங் பணிக்கு கூடுதல் கவனம் செலுத்துவேன். விக்கெட் கீப்பிங் பணியில் தேர்ச்சியடையும் போது, பேட்டிங் சொதப்பிவிடுகிறது. அதனால் விக்கெட் கீப்பிங்கை விட, பேட்டிங்கிற்கு அதிக கவனம் செலுத்த வேண்டிவருகிறது. இப்படியே வருடங்கள் கழிகின்றன. இரண்டையும் சமநிலையில் வைக்கும் போராட்டத்தின் போதுதான், டோனி மற்றும் இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் ஆகியோர் ‘லெஜெண்ட்’டாக தெரிகிறார்கள். நான் குழந்தையாக தெரிகிறேன்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக விக்கெட் கீப்பிங் செய்தீர்கள். அதற்கு பலனாக பல ஜாம்பவான்களின் பாராட்டு கிடைத்தது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியிடமிருந்து பாராட்டு கிடைத்தது, என்னை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அவர் யாரையும் அவ்வளவு சுலபமாக பாராட்டுவதில்லை. அதே சமயம் முன்னாள் வீரர்களின் பாராட்டுகளும் என்னை குதூகலப்படுத்தியது. பாராட்டுகள்தான் நம்மை உற்சாகமாக பயணிக்க வைக்கிறது. அந்தவகையில் நான் அதிர்ஷ்டசாலி.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சிறந்த விக்கெட் கீப்பர் என புகழப்படுகிறீர்கள். சிறந்த பேட்ஸ்மேனாக மாற இருப்பது எப்போது?

இந்திய கிரிக்கெட் அணியில் ஏராளமான விக்கெட் கீப்பர்கள் இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் தாண்டி, எனக்கு வாய்ப்பு கிடைத்ததை பெரிய அதிசயமாக பார்க்கிறேன். இன்று நானும் விக்கெட் கீப்பராக பணியாற்றுகிறேன். காலம்தான் என்னை விக்கெட் கீப்பராக மாற்றியது. அதேபோல நான் திறமைகளை வளர்த்து கொண்டே இருப்பேன். காலம்தான் என்னை சிறந்த பேட்ஸ்மேனாக மாற்றவேண்டும். நிச்சயம் மாற்றும் என்ற நம்பிக்கை இருக்கிறது.