இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணிக்கு 208 ரன்கள் இலக்கு


இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணிக்கு 208 ரன்கள் இலக்கு
x
தினத்தந்தி 6 Dec 2019 3:27 PM GMT (Updated: 6 Dec 2019 3:45 PM GMT)

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு 208 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஐதராபாத்,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இதன்படி இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் இன்று நடந்து வருகிறது.

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க  ஆட்டக்காரர்களாக லெண்டில் சிமோன்ஸ் மற்றும் இவின் லீவிஸ் ஆகியோர் களம் இறங்கினர்.

தொடக்கத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி லெண்டில் சிமோன்சின் விக்கெட்டை இழந்தாலும் அடுத்து வந்த வீரர்கள் இந்திய அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடிதனர். இந்த நிலையில் 9.5 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி 100 ரன்களை எட்டியது. இதற்கிடையே இந்திய அணி வீரர்களுக்கு கிடைத்த அற்புதமான கேட்ச் வாய்ப்புகளை நழுவவிட்டனர்.

இந்த நிலையில் இவின் லீவிஸ் 40 ரன்கள், பிரண்டன் கிங் 31 ரன்களில்  நடையைக் கட்டினர்.

பின்னர் ஜோடி சேர்ந்த ஷிம்ரன் ஹெட்மயர் (41 பந்துகளில் 56 ரன்கள்), பொல்லார்டு (37 ரன்கள் 19 பந்துகள்) சிக்ஸர் மழை பொழிந்தனர். இறுதியாக 20 ஓவர் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்தது.

களத்தில் தினேஷ் ராம்டின் (11) மற்றும் ஜேசன் ஹோல்டர் (24) ஆகியோர் இருந்தனர். இந்திய அணி தரப்பில் யுஸ்வேந்திரா சாஹல் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

208 ரன்கள் என்ற கடின இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது.

Next Story