கிரிக்கெட்

கோலியின் ‘நோட்புக்’ கொண்டாட்டம் + "||" + Kohli's Notebook Celebration

கோலியின் ‘நோட்புக்’ கொண்டாட்டம்

கோலியின் ‘நோட்புக்’ கொண்டாட்டம்
2017-ல் ‘நோட்புக்’ கொண்டாட்டத்தில் ஈடுபட்ட கேஸ்ரிக் வில்லியம்ஸுக்கு, நேற்று முன்தினம் விராட் கோலி பதிலடி கொடுத்தார்.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் கேஸ்ரிக் வில்லியம்ஸ் 2017-ம் ஆண்டு ஜமைக்காவில் நடந்த 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலியின் விக்கெட்டை கைப்பற்றிய போது, அந்த மகிழ்ச்சியை வித்தியாசமான முறையில் கொண்டாடினார். அதாவது ஒரு நோட்புக்கில் கோலியின் பெயரை எழுதி, அதில் ‘டிக்’ செய்து காலி செய்தது போல் சைகை காட்டினார். இதை மனதில் வைத்திருந்த கோலி, நேற்று முன்தினம் ஐதராபாத்தில் நடந்த தொடக்க ஆட்டத்தில் அவரது பந்து வீச்சில் சிக்சர் விரட்டியதும், இது போன்று ‘நோட்புக்’ கொண்டாட்டத்தில் ஈடுபட்டு பழிதீர்த்துக் கொண்டார். இது குறித்து கோலியிடம் நிருபர்கள் கேட்ட போது, ‘2017-ம் ஆண்டு ஜமைக்கா ஆட்டத்தில் வில்லியம்ஸ் செய்த போது, நாமும் நோட்புக்கில் அவரது பெயரை சில முறை ‘டிக்’ செய்து கொண்டாட வேண்டும் என்று நினைத்தேன். அதை இந்த ஆட்டத்தில் நிறைவு செய்திருக்கிறேன். ஆனால் ஆட்டத்தின் இறுதியில் கைகுலுக்கி உற்சாகப்படுத்திக் கொண்டோம். அது தான் கிரிக்கெட். களத்தில் தீவிரமாக செயல்பட வேண்டும். அதே நேரத்தில் எதிரணி வீரர்களை மதிக்க வேண்டும்’ என்றார்.

94 ரன்கள் (50 பந்து, 6 பவுண்டரி, 6 சிக்சர்) குவித்து 12-வது முறையாக ஆட்டநாயகன் விருது பெற்ற கோலி மேலும் கூறுகையில், ‘போட்டியை பார்த்த இளம் பேட்ஸ்மேன்கள் எனது இன்னிங்சின் முதல் பாதியை பின்பற்ற வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். ஏனெனில் அந்த பகுதியில் எனது ஆட்டம் உண்மையிலேயே மோசமாக இருந்தது. பிறகு என்ன தவறு செய்கிறேன் என்பதை அலசி ஆராய்ந்த போது, நான் அதிரடியாக விளையாடும் ஆட்டக்காரர் அல்ல, டைமிங்கில் பந்தை கணித்து ஆடக்கூடியவர் என்பதை உணர்ந்தேன். அதன் பிறகு ஆட்டயுக்தியை மாற்றிக் கொண்டேன். 20 ஓவர் கிரிக்கெட்டில் ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் மைதானத்தின் நாலாபுறமும் பந்துகளை தூக்கியடித்து ஆடக்கூடியவன் நான் அல்ல. எனது பணி என்னவோ (வெற்றி தேடித்தருவது) அதில் கவனம் செலுத்துகிறேன்.

மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் விளையாடுவதால் எனது தொழில்நுட்பத்தை பெரிய அளவில் மாற்றம் செய்ய விரும்பவில்லை. குறிப்பிட்ட வடிவிலான போட்டியில் மட்டும் சிறந்தவர் என்று இல்லாமல், மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் ரன் குவிக்க விரும்புகிறேன்’ என்றார்.


தொடர்புடைய செய்திகள்

1. ‘கோலியை நான் ஏன் பாராட்டக்கூடாது?’ - அக்தர்
‘நான் ஏன் இந்திய வீரர்களையும், விராட் கோலியையும் பாராட்டக்கூடாது? என்று சோயிப் அக்தர் கேள்வி எழுப்பியுள்ளார்.
2. கோலியை விட ஸ்டீவன் சுமித் சிறந்தவர் - பிரெட்லீ சொல்கிறார்
விராட் கோலியை விட ஸ்டீவன் சுமித் தான் சிறந்தவர் என்று ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பிரெட்லீ தெரிவித்துள்ளார்.