கிரிக்கெட்

ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழகத்துக்கு எதிரான ஆட்டத்தில் கர்நாடக அணி 259 ரன்கள் சேர்ப்பு + "||" + Karnataka score 259 runs against Tamilnadu Team in Ranchi Cricket

ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழகத்துக்கு எதிரான ஆட்டத்தில் கர்நாடக அணி 259 ரன்கள் சேர்ப்பு

ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழகத்துக்கு எதிரான ஆட்டத்தில் கர்நாடக அணி 259 ரன்கள் சேர்ப்பு
ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் தமிழகத்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் கர்நாடக அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் எடுத்தது.
திண்டுக்கல்,

இந்த சீசனுக்கான 86-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி பல்வேறு இடங்களில் நேற்று தொடங்கியது. மார்ச் மாதம் வரை நடைபெறும் இந்த போட்டியில் பங்கேற்றுள்ள 38 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் அதிக புள்ளிகள் பெறும் 8 அணிகள் கால்இறுதிக்கு முன்னேறும்.


இதில் திண்டுக்கல்லில் நேற்று தொடங்கிய லீக் (4 நாள்) ஆட்டத்தில் விஜய் சங்கர் தலைமையிலான தமிழக அணி, கருண் நாயர் தலைமையிலான கர்நாடக அணியை (பி பிரிவு) எதிர்கொண்டது.

‘டாஸ்’ ஜெயித்த கர்நாடக அணி முதலில் பேட்டிங் செய்தது. கர்நாடக அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது. தொடக்க ஆட்டக்காரர் தேகா நிசால் (4 ரன்) விக்னேஷ் பந்து வீச்சில் போல்டு ஆனார். மயங்க் அகர்வால் (43 ரன்கள்) சித்தார்த் பந்து வீச்சில் பாபா அபராஜித்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். கேப்டன் கருண்நாயர் (8 ரன்) ரன்-அவுட் ஆனார். 34.2 ஓவர்களில் அந்த அணி 88 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

4-வது விக்கெட்டுக்கு பவன் தேஷ்பாண்டே, தேவ்துத் படிக்கலுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிலைத்து நின்று அரைசதம் அடித்ததுடன் அணியையும் சரிவில் இருந்து மீட்டனர். ஸ்கோர் 204 ரன்னாக உயர்ந்த போது தேவ்துத் படிக்கல் (78 ரன்கள்) பாபா அபராஜித் பந்து வீச்சில் மாற்று ஆட்டக்காரர் முகுந்திடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். 4-வது விக்கெட்டுக்கு பவன் தேஷ்பாண்டே, தேவ்துத் படிக்கல் ஜோடி 116 ரன்கள் சேர்த்தது. அடுத்து பவன் தேஷ்பாண்டே (65 ரன்கள்) ஆர்.அஸ்வின் பந்து வீச்சில் ஜெகதீசனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். ஷரத் 10 ரன்னில் அவுட் ஆனார்.

நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் கர்நாடக அணி முதல் இன்னிங்சில் 94 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் எடுத்தது. ஸ்ரேயாஸ் கோபால் 35 ரன்னுடனும், டேவிட் மத்யாஸ் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர். தமிழக அணி தரப்பில் சித்தார்த் 2 விக்கெட்டும், விக்னேஷ், ஆர்.அஸ்வின், பாபா அபராஜித் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

வதோதராவில் நடைபெறும் பரோடா அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் ஆடிய மும்பை அணி நேற்றைய ஆட்டம் முடிவில் முதல் இன்னிங்சில் 90 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 362 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரஹானே 79 ரன்னும், பிரித்வி ஷா 66 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். தும்பாவில் நடைபெறும் டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் ஆடிய கேரளா அணி நேற்றைய ஆட்டம் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 276 ரன்கள் எடுத்தது. ராபின் உத்தப்பா 102 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். முதல் தர போட்டியில் அவர் அடித்த 22-வது சதம் இதுவாகும்.

நடப்பு சாம்பியன் விதர்பா-ஆந்திரா அணிகள் இடையிலான (ஏ பிரிவு) லீக் ஆட்டம் விஜயவாடாவில் நேற்று காலை தொடங்கியது. ‘டாஸ்’ ஜெயித்த விதர்பா அணியின் கேப்டன் பைஸ் பாசல் பீல்டிங்கை தேர்வு செய்தார். இரு அணியினரும் களம் இறங்க முயன்ற போது மைதானத்தில் ஒரு பாம்பு ஊர்ந்து செல்வதை கவனித்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மைதான ஊழியர்கள் அந்த பாம்பை பாதுகாப்பாக அப்புறப்படுத்தினார்கள். அதன் பிறகு சற்று தாமதமாக போட்டி தொடங்கியது. முதலில் ஆடிய ஆந்திரா அணி முதல் இன்னிங்சில் 74 ஓவர்களில் 211 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. அதிகபட்சமாக ஹனுமா விஹாரி 83 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து முதல் இன்னிங்சை ஆடிய விதர்பா அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் விக்கெட் இழப்பின்றி 26 ரன்கள் எடுத்தது.

தொடர்புடைய செய்திகள்

1. ரஞ்சி கிரிக்கெட்டில் மும்பை வீரர் சர்ப்ராஸ் கான் முச்சதம் அடித்து அசத்தல்
ரஞ்சி கிரிக்கெட்டில் மும்பை வீரர் சர்ப்ராஸ் கான் முச்சதம் அடித்து அசத்தியுள்ளார்.
2. ரஞ்சி கிரிக்கெட்: தமிழக அணி அறிவிப்பு
ரஞ்சி கிரிக்கெட் போட்டிக்கான தமிழக அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
3. ரஞ்சி கிரிக்கெட்டில் ரெயில்வேயை வீழ்த்தி தமிழக அணி அபார வெற்றி
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரெயில்வே அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் தமிழக அணி இன்னிங்ஸ் மற்றும் 164 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
4. ரஞ்சி கிரிக்கெட்: ரெயில்வே அணியை 76 ரன்னில் சுருட்டியது தமிழகம்
ரஞ்சி கிரிக்கெட் போட்டியில், ரெயில்வே அணியை 76 ரன்னில் தமிழக அணி சுருட்டியது.
5. ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழ்நாடு-ரெயில்வே மோதும் ஆட்டம் சென்னையில் இன்று தொடக்கம்
ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழ்நாடு-ரெயில்வே மோதும் ஆட்டம் சென்னையில் இன்று தொடங்குகிறது.