பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணி 416 ரன்கள் குவிப்பு - நியூசிலாந்து அணி திணறல்


பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணி 416 ரன்கள் குவிப்பு - நியூசிலாந்து அணி திணறல்
x
தினத்தந்தி 13 Dec 2019 11:50 PM GMT (Updated: 13 Dec 2019 11:50 PM GMT)

பெர்த்தில் நடந்து வரும் பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணி 416 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து திணறுகிறது.

பெர்த்,

ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பகல்-இரவு ஆட்டமாக பெர்த்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுக்கு 248 ரன்கள் எடுத்திருந்தது. மார்னஸ் லபுஸ்சேன் 110 ரன்களுடனும், டிராவிஸ் ஹெட் 20 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 2-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. தொடர்ந்து ஆடிய லபுஸ்சேன் 143 ரன்களில் (240 பந்து, 18 பவுண்டரி, ஒரு சிக்சர்), வாக்னெரின் பந்து வீச்சில் போல்டு ஆனார். லபுஸ்சேன் இன்னும் 7 ரன் எடுத்திருந்தால் தொடர்ந்து 3 டெஸ்டுகளில் 150 ரன்களுக்கு மேல் எடுத்த முதல் ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை பெற்றிருப்பார். மயிரிழையில் அச்சாதனை வாய்ப்பு நழுவிப் போனது. இதன் பின்னர் டிராவிஸ் ஹெட் (56 ரன்), கம்மின்ஸ் (20 ரன்), மிட்செல் ஸ்டார்க் (30 ரன்) சீரான இடைவெளியில் பெவிலியன் திரும்பினர். கடைசி விக்கெட்டாக கேப்டன் டிம் பெய்ன் (39 ரன்) ஆட்டம் இழந்தார்.

முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 146.2 ஓவர்களில் 416 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் டிம் சவுதி, நீல் வாக்னெர் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர். பின்னங்காலில் தசைப்பிடிப்பால் முதல் நாளில் பாதியில் வெளியேறிய நியூசிலாந்து புதுமுக வேகப்பந்து வீச்சாளர் லோக்கி பெர்குசன் எஞ்சிய நாட்களிலும் பந்து வீசமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்துக்கு ஆரம்பத்திலேயே பேரிடி விழுந்தது. டாம் லாதம் (0), ஜீத் ரவல் (1 ரன்) ஆஸ்திரேலியாவின் புயல் வேக தாக்குதலில் வீழ்ந்தனர். இதைத் தொடர்ந்து அனுபவ வீரர்களான கேப்டன் கேன் வில்லியம்சனும், முன்னாள் கேப்டன் ராஸ் டெய்லரும் இணைந்து அணியை சரிவில் இருந்து ஓரளவு மீட்டனர்.

அணியின் ஸ்கோர் 77 ரன்களை எட்டிய போது இந்த ஜோடி பிரிந்தது. மிட்செல் ஸ்டார்க் ஷாட்பிட்ச்சாக வீசிய பந்தை வில்லியம்சன் (34 ரன்) தட்டி விட்ட போது, அதை ஸ்லிப்பில் நின்ற ஸ்டீவன் சுமித் பாய்ந்து விழுந்து அற்புதமாக கேட்ச் செய்தார். அடுத்து வந்த ஹென்றி நிகோல்ஸ் (7 ரன்), வாக்னர் (0) ஆகியோர் வந்த வேகத்தில் வெளியேற்றப்பட, நியூசிலாந்து அணி மறுபடியும் நிலைகுலைந்தது. ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 32 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 109 ரன்களுடன் தடுமாறிக் கொண்டிருந்தது. ராஸ் டெய்லர் 66 ரன்களுடனும் (86 பந்து, 8 பவுண்டரி), விக்கெட் கீப்பர் வாட்லிங் ரன் ஏதுமின்றியும் அவுட் ஆகாமல் உள்ளனர். ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெறும்.

Next Story