கிரிக்கெட்

‘விராட்கோலி போல் கடினமாக உழைக்க வேண்டும்’ - வெஸ்ட்இண்டீஸ் வீரர்களுக்கு உதவி பயிற்சியாளர் அறிவுரை + "||" + Work hard like Virat kohli - Assistant Coach Advice for West Indies Players

‘விராட்கோலி போல் கடினமாக உழைக்க வேண்டும்’ - வெஸ்ட்இண்டீஸ் வீரர்களுக்கு உதவி பயிற்சியாளர் அறிவுரை

‘விராட்கோலி போல் கடினமாக உழைக்க வேண்டும்’ - வெஸ்ட்இண்டீஸ் வீரர்களுக்கு உதவி பயிற்சியாளர் அறிவுரை
விராட்கோலி போல் வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி வீரர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்று அந்த அணியின் உதவி பயிற்சியாளர் ரோட்டி எஸ்ட்விக் தெரிவித்தார்.
சென்னை,

இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 1.30 மணிக்கு நடக்கிறது.


இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் நேற்று முன்தினம் சென்னை வந்தனர். வெஸ்ட்இண்டீஸ் அணி வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று காலையில் பயிற்சியில் ஈடுபட்டனர். இந்திய அணியினர் பிற்பகலில் பயிற்சி மேற்கொண்டனர்.

பயிற்சிக்கு பிறகு வெஸ்ட்இண்டீஸ் அணியின் உதவி பயிற்சியாளர் ரோட்டி எஸ்ட்விக் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஹெட்மயர், பூரன், ஹோப் ஆகிய இளம் வீரர்கள் முன்னேற்றம் கண்டு வருகிறார்கள். இது எங்களுக்கு உற்சாகம் அளிக்கிறது. நீங்கள் எந்த அளவுக்கு கடினமாக உழைத்து போட்டிக்கு தயாராகிறீர்கள் என்பது தான் முக்கியமானதாகும். கடினமான உழைப்பின் மூலம் தான் விராட்கோலி உயர்ந்த நிலையை எட்டி இருக்கிறார். அவரிடம் இருந்து இதனை நிறைய வீரர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தாலும், கடினமாக உழைக்கவில்லை என்றால் சாதிக்க முடியாது. கடின உழைப்பு உங்களுக்கு சலிப்பை ஏற்படுத்தலாம். ஆனால் அது தான் உங்களுக்கு சிறந்த வெற்றியை தேடிக்கொடுக்கும்.

இந்த போட்டி தொடரில் எங்கள் அணி வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். உண்மையிலேயே எங்கள் வீரர்கள் கடினமாக உழைத்து வருகிறார்கள். இதனால் வெற்றியை ருசிக்க தொடங்கி உள்ளனர். 20 ஓவர் போட்டியில் ஹெட்மயர் ஆட்டம் அருமையாக இருந்தது. டெஸ்ட் போட்டி போன்ற நீண்ட நேர போட்டிகளை எடுத்து கொண்டால் அவர் இளம் வயது வீரர் என்பதை மக்கள் மறந்து விடுகிறார்கள். ஒருநாள் போட்டியில் அவர் 4 சதங்கள் அடித்து இருக்கிறார். அவரிடம் நிறைய திறமை இருக்கிறது. கிரிக்கெட்டை பொறுத்தமட்டில் ஒருபோதும் அஜாக்கிரதையாக இருக்கக்கூடாது.

இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டித் தொடரில் எங்கள் அணியினர் ஆடிய விதம் மகிழ்ச்சி அளிக்கிறது. கரீபியனில் நடந்த இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 20 ஓவர் தொடரில் இரு அணிகளுக்கும் இடையிலான செயல்பாட்டில் அதிக வித்தியாசம் இருந்தது. ஆனால் இந்த 20 ஓவர் தொடரில் இரு அணிகளுக்கும் இடையே சிறிய வித்தியாசம் தான் தெரிந்தது. இதேபோல் ஒருநாள் போட்டி தொடரிலும் நாங்கள் நன்றாக செயல்படுவோம் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருண் அளித்த பேட்டியில், ‘ஷிவம் துபே ஒவ்வொரு ஆட்டத்தில் இருந்தும் நம்பிக்கையை பெற்று வருகிறார். மும்பையில் நடந்த வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டியில் முதல் ஓவரில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த அவர் பின்னர் சரிவை சமாளித்து சிறப்பாக பந்து வீசினார். அவர் மீது கேப்டன் விராட்கோலி நம்பிக்கை வைத்து வாய்ப்பு அளித்தார். அதனை அவர் சரியாக பயன்படுத்தினார். அவரிடம் அபாரமான திறமை உள்ளது. அவர் நல்ல நம்பிக்கையை பெறும் போது சிறந்த ஆல்-ரவுண்டராக உருவெடுப்பார். வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் பந்து வீச்சில் எல்லா வகையிலும் சிறப்பாக செயல்படுகிறார். 

சிறந்த கலவை கொண்ட அணியை உருவாக்கும் வகையில் ஒவ்வொருவருக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. ரவீந்திர ஜடேஜாவுக்கு ஆல்-ரவுண்டராக வாய்ப்பு அளிக்கப்படுவது அணிக்கு உதவிகரமாக இருக்கிறது. அவர் பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் மூன்றிலும் அசத்துகிறார். சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவும், யுஸ்வேந்திர சாஹலும் மீண்டும் இணைந்து பந்து வீசுவார்களா? என்று கேட்கிறீர்கள். அதற்குரிய சூழ்நிலை அமைந்தால் இரண்டு பேருக்கும் வாய்ப்பு கிடைக்கலாம்.

ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் இந்திய அணியில் ஒவ்வொரு முறை வாய்ப்பு கிடைக்கும் போதும் அதை சரியாக பயன்படுத்தி கொள்கிறார். வருங்காலத்தில் அவருக்கு ஒருநாள் போட்டிக்கான அணியிலும் இடம் கிடைக்கும்’ என்றார்.

முதலாவது ஒரு நாள் போட்டிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இணை கமிஷனர் சுதாகர், துணை கமிஷனர் தர்மராஜன் ஆகியோர் சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நேற்று ஆய்வு செய்தனர். இன்றும், நாளையும் மோப்ப நாய் உதவியுடன் மைதானத்தில் சோதனை நடத்தப்படும் என்றும், பாதுகாப்பு பணியில் 3 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.