அறிமுக போட்டிகளில் சதம் அடித்து பாகிஸ்தான் வீரர் அபித் அலி வரலாறு படைத்தார்


அறிமுக போட்டிகளில் சதம் அடித்து பாகிஸ்தான் வீரர் அபித் அலி வரலாறு படைத்தார்
x
தினத்தந்தி 15 Dec 2019 11:14 PM GMT (Updated: 15 Dec 2019 11:14 PM GMT)

இலங்கைக்கு எதிரான டெஸ்டில் 109 ரன்கள் குவித்த பாகிஸ்தான் புதுமுக வீரர் அபித் அலி, இரண்டு வடிவிலான போட்டிகளில் அறிமுக ஆட்டத்திலேயே சதம் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார்.

ராவல்பிண்டி,

பாகிஸ்தான் - இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகடந்த 11-ந்தேதி ராவல்பிண்டியில் தொடங்கியது. பாகிஸ்தான் மண்ணில் 10 ஆண்டுக்கு பிறகு நடந்த முதல் டெஸ்ட் போட்டி இதுவாகும்.

‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த இலங்கை அணி 4-வது நாள் முடிவில் 91.5 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 282 ரன்கள் எடுத்திருந்தது. 4 நாட்களும் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. அதிலும் 4-வது நாளில் மழை மற்றும் ஆடுகளம் ஈரப்பதம் காரணமாக ஒரு பந்து கூட வீசப்படவில்லை.

இந்த நிலையில் 5-வது மற்றும் கடைசி நாளான நேற்று மட்டும் மழைபாதிப்பின்றி ஆட்டம் நடந்தது. 87 ரன்களுடன் களத்தில் இருந்த தனஞ்ஜெயா டி சில்வா தனது 6-வது சதத்தை கடந்ததும் (166 பந்தில் 102 ரன்) இன்னிங்சை இலங்கை முடித்துக் கொண்டது. இதன்படி இலங்கை அணி 6 விக்கெட்டுக்கு 306 ரன்களில் ‘டிக்ளேர்’ செய்தது.

பின்னர் விளையாடிய பாகிஸ்தான் அணியில் ஷான் மசூத் (0), கேப்டன் அசார் அலி (36 ரன்) சீக்கிரம் வெளியேறினாலும் 3-வது விக்கெட்டுக்கு கைகோர்த்த அறிமுக வீரர் அபித் அலியும், பாபர் அசாமும் அணியை சரிவில் இருந்து மீட்டனர். 7 பவுலர்களை பயன்படுத்தி பார்த்தும் இந்த ஜோடியை அசைக்க முடியவில்லை. அபித் அலி, பாபர் அசாம் இருவரும் சதம் அடித்து அசத்தினர்.

அபித் அலி ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் துபாயில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் அறிமுக வீரராக இறங்கி சதம் (112 ரன்) அடித்திருந்தார். இதன் மூலம் சர்வதேச ஒரு நாள் மற்றும் டெஸ்ட் இரண்டிலும் அறிமுக ஆட்டத்திலேயே சதம் அடித்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை 32 வயதான அபித் அலி படைத்தார்.

பாகிஸ்தான் அணி 70 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 252 ரன்கள் எடுத்திருந்த போது இந்த டெஸ்ட் ‘டிரா’வில் முடித்துக் கொள்ளப்பட்டது. அபித் அலி 109 ரன்களுடனும் (201 பந்து, 11 பவுண்டரி), தனது 3-வது சதத்தை எட்டிய பாபர் அசாம் 102 ரன்களுடனும் (128 பந்து, 14 பவுண்டரி) களத்தில் இருந்தனர்.

இந்த டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது. டிராவில் முடிந்ததால் இரு அணிகளும் தலா 20 புள்ளிகளை பெற்றன. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 19-ந்தேதி கராச்சியில் தொடங்குகிறது.

Next Story