இந்தியா உடனான 3-வது ஒருநாள் போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணி 315 ரன்கள் குவிப்பு


இந்தியா உடனான 3-வது ஒருநாள் போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணி 315 ரன்கள் குவிப்பு
x
தினத்தந்தி 22 Dec 2019 12:18 PM GMT (Updated: 22 Dec 2019 9:42 PM GMT)

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 3-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு 316 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கட்டாக்,

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 3 வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் உள்ள பராபதி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்று வருகிறது.

சென்னையில் நடந்த முதலாவது ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்திலும், விசாகப்பட்டினத்தில் நடந்த 2 வது ஆட்டத்தில் இந்தியா 107 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இந்நிலையில் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் நோக்கில் இரு அணிகளும் களமிறங்கியுள்ளன. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார். 

வெண்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய இவின் லீவிஸ் மற்றும் ஷாய் ஹோப் இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இவின் லீவிஸ் 50 பந்துகளில் 21 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து ஷாய் ஹோப் (42 ரன்கள் 50 பந்துகள்) ஷமி வீசிய பந்தில் போல்ட் ஆனார்.

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ரன் வேகம் சற்று குறைந்தது. அடுத்ததாக ஜோடி சேர்ந்த ரோஸ்டன் சேஸ் மற்றும் ஷிம்ரான் ஹெட்மெயர் அணியை சரிவிலிருந்து மீட்டெடுக்க முயற்சி செய்தனர்.

தனது பங்கிற்கு 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களை அடித்த ஷிம்ரான் ஹெட்மெயர் (37 ரன்கள் 33 பந்துகள்) நவ்தீப் சயினி வீசிய பந்தில் கேட்ச் ஆகி விக்கெட்டை இழந்தார். ரோஸ்டன் சேஸ் 38 ரன்களில் நவ்தீப் சயினியிடம் போல்ட் ஆனார்.

அடுத்ததாக களமிறங்கிய நிகோலஸ் பூரன் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பொல்லார்டு தீவிர ரன் வேட்டையில் ஈடுபட்டனர். இந்திய அணியின் பந்துவீச்சை நாலாபக்கமும் சிதறடித்த நிகோலஸ் பூரன் (10 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்) அணியின் ரன் வேகத்தை கணிசமாக உயர்த்தினார்.

இறுதியாக ஷர்துல் தாக்கூர் வீசிய பந்தில் இந்த ஜோடி பிரிந்தது. நிகோலஸ் பூரன் 64 பந்துகளில் 89 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜாவிடம் கேட்ச் ஆனார். 

மறுபுறம் கெய்ரான் பொல்லார்டு (7 சிக்ஸர்கள் 3 பவுண்டரிகள்) இறுதி ஓவர்களில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 

இறுதியாக 50 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 315 ரன்கள் குவித்தது. பொல்லார்டு (74 ரன்கள் 51 பந்துகள்) மற்றும் ஜேசன் ஹோல்டர் (7 ரன்கள்) ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இந்திய அணியில் நவ்தீப் சயினி அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதனைத் தொடர்ந்து இந்திய அணி 316 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடி வருகிறது.

Next Story