தென்ஆப்பிரிக்கா-இங்கிலாந்து அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி: இன்று தொடக்கம்


தென்ஆப்பிரிக்கா-இங்கிலாந்து அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி: இன்று தொடக்கம்
x
தினத்தந்தி 25 Dec 2019 11:24 PM GMT (Updated: 25 Dec 2019 11:24 PM GMT)

தென்ஆப்பிரிக்கா-இங்கிலாந்து மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் இன்று தொடங்குகிறது.

செஞ்சூரியன்,

தென்ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது.

இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்ற வகையில் முக்கியத்துவம் பெறுகிறது. ஒவ்வொரு வெற்றிக்கு 30 புள்ளிகளும், டிராவுக்கு தலா 10 புள்ளிகளும் வழங்கப்படும். இந்தியாவுக்கு எதிரான மூன்று டெஸ்டுகளிலும் தோற்ற தென்ஆப்பிரிக்கா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இன்னும் புள்ளி கணக்கை தொடங்கவில்லை. இங்கிலாந்து அணி 56 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் உள்ளன.

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, புதிய தலைமை பயிற்சியாளர் மார்க் பவுச்சர், பேட்டிங் ஆலோசகர் காலிஸ் ஆகியோர் பொறுப்பேற்ற பிறகு சந்திக்கும் முதல் போட்டி இதுவாகும். உள்ளூர் சூழல் தென்ஆப்பிரிக்காவுக்கு சாதகமானது என்றாலும் டிவில்லியர்ஸ், அம்லா, ஸ்டெயின், மோர்னே மோர்கல் உள்ளிட்டோரின் ஓய்வுக்கு பிறகு இன்னும் தடுமாறி கொண்டு தான் இருக்கிறது. காயம் காரணமாக துணை கேப்டன் பவுமாவும் ஆடவில்லை.

கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ், குயின்டான் டி காக், டீன் எல்கர், மார்க்ராம் ஆகியோர் பேட்டிங்கில் பொறுப்புடன் ஆடுவதை பொறுத்து தான் அந்த அணியின் ஸ்கோர் அமையும். பந்து வீச்சில் தனது கடைசி தொடரில் ஆடும் வெரோன் பிலாண்டர், காஜிசோ ரபடா, சுழற்பந்து வீச்சாளர் கேஷவ் மகராஜ் மிரட்ட காத்திருக்கிறார்கள்.

இங்கிலாந்து அணியில் ஆல்-ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ், ஆலிவர் போப், சுழற்பந்து வீச்சாளர் ஜாக் லீச் ஆகியோர் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஜானி பேர்ஸ்டோ ஆடும் லெவன் அணியில் சேர்க்கப்படலாம் என்று தெரிகிறது.

முன்னணி ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்சின் தந்தை கெட் உடல்நலக்குறைவால் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். தீவிர சிகிச்சைக்கு பிறகு அவரது உடல்நிலை சீராக இருப்பதை தொடர்ந்து பென் ஸ்டோக்ஸ் நேற்று வலைபயிற்சியில் ஈடுபட்டார். ஸ்டோக்சின் வருகை இங்கிலாந்து அணிக்கு புத்துணர்ச்சி அளித்துள்ளது. வேகப்பந்து வீச்சுக்கு அனுகூலமான இந்த ஆடுகளத்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், ஜோப்ரா ஆர்ச்சர் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. 37 வயதான ஆண்டர்சனுக்கு இது 150-வது டெஸ்ட் ஆகும். இந்த மைல்கல்லை எட்டும் 9-வது வீரர் என்ற பெருமையை பெறுகிறார். சமீபத்தில் நியூசிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை 0-1 என்ற கணக்கில் இழந்த இங்கிலாந்து அணி, மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பும் முனைப்புடன் வியூகங்களை வகுத்துள்ளது. ஆண்டின் இறுதியை வெற்றியுடன் நிறைவு செய்ய இரு அணி வீரர்களும் வரிந்து கட்டுவதால் இந்த டெஸ்டில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.

இவ்விரு அணிகளும் இதுவரை 149 டெஸ்டுகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 61-ல் இங்கிலாந்தும், 33-ல் தென்ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றுள்ளன. 55 போட்டி டிராவில் முடிந்தது. இங்கிலாந்து அணி கடைசியாக 2015-16-ம் ஆண்டில் தென்ஆப்பிரிக்காவில் விளையாடிய போது டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது நினைவிருக்கலாம்.

செஞ்சூரியன் மைதானம் தென்ஆப்பிரிக்காவுக்கு ராசியானதாகும். இங்கு இதுவரை நடந்துள்ள 24 டெஸ்டுகளில் தென்ஆப்பிரிக்கா 19-ல் வெற்றியும், 2-ல் தோல்வியும் (ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக), 3-ல் டிராவும் சந்தித்துள்ளது.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

தென்ஆப்பிரிக்கா : டீன் எல்கர், எய்டன் மார்க்ராம், ஜூபைர் ஹம்சா, பாப் டு பிளிஸ்சிஸ் (கேப்டன்), வான்டெர் துஸ்சென், குயின்டான் டி காக், வெய்ன் பிரிட்டோரியஸ், பிலாண்டர், கேஷவ் மகராஜ், ரபடா, அன்ரிஜ் நார்ஜே.

இங்கிலாந்து : ரோரி பர்ன்ஸ், டாம் சிப்லி, ஜோ டென்லி, ஜோ ரூட் (இங்கிலாந்து), பென் ஸ்டோக்ஸ், ஆலிவர் போப் அல்லது ஜானி பேர்ஸ்டோ, ஜோஸ் பட்லர், சாம் கர்ரன், ஜோப்ரா ஆர்ச்சர், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட்.

இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை சோனி சிக்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.


Next Story