மத்திய பிரதேசத்துக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட்: தமிழக அணி 149 ரன்னில் ஆல்-அவுட்


மத்திய பிரதேசத்துக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட்: தமிழக அணி 149 ரன்னில் ஆல்-அவுட்
x
தினத்தந்தி 25 Dec 2019 11:36 PM GMT (Updated: 25 Dec 2019 11:36 PM GMT)

ரஞ்சி கிரிக்கெட்டில் மத்திய பிரதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக அணி முதல் இன்னிங்சில் 149 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.

இந்தூர்,

ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழ்நாடு-மத்திய பிரதேசம் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் (பி பிரிவு) இந்தூர் ஹோல்கர் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. ‘டாஸ்’ ஜெயித்த மத்திய பிரதேச கேப்டன் ரஜத் படிதர் முதலில் தமிழக அணியை பேட் செய்ய பணித்தார்.

இதையடுத்து களம் கண்ட தமிழக பேட்ஸ்மேன்கள், வேகப்பந்து வீச்சுக்கு ஏற்ற வகையில் புற்களுடன் காணப்பட்ட இந்த ஆடுகளத்தில் திணறினார்கள். கங்கா ஸ்ரீதர் ராஜூ (43 ரன்), ஹரி நிஷாந்த் (22 ரன்), கேப்டன் பாபா அபராஜித் (61 ரன், நாட்-அவுட்) தவிர மற்ற 8 பேரும் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை. இதில் கவுசிக் காந்தி (0), விக்கெட் கீப்பர் ஜெகதீசன் (3 ரன்) ஆகியோரும் அடங்குவர். தேனீர் இடைவேளைக்கு முன்பாக தமிழக அணி முதல் இன்னிங்சில் 59 ஓவர்களில் 149 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. வேகப்பந்து வீச்சாளர் ஈஷ்வர் பாண்டே 20 ஓவர்களில் 8 மெய்டனுடன் 26 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை அள்ளினார்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய மத்திய பிரதேச அணி ஆட்ட நேர முடிவில் 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 56 ரன்கள் எடுத்துள்ளது.

டெல்லியில் தொடங்கிய ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் (ஏ பிரிவு) முதலில் பேட் செய்த டெல்லி அணி 66 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 269 ரன்கள் சேர்த்துள்ளது. போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் முன்கூட்டியே முடித்துக் கொள்ளப்பட்டது. டெல்லி கேப்டன் ஷிகர் தவான் சதம் (137 ரன், 198 பந்து, 19 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி களத்தில் நிற்கிறார். முதல்தர கிரிக்கெட்டில் அவரது 25-வது சதம் இதுவாகும். கால் முட்டி காயத்தில் இருந்து மீண்ட பிறகு தவான் விளையாடிய முதல் போட்டி இதுவாகும். உடல்தகுதியை நிரூபித்து விட்ட தவான் இனி இலங்கை 20 ஓவர் தொடரில் புத்துணர்ச்சியோடு விளையாடுவார்.

மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் ரெயில்வே அணிக்கு எதிராக களம் புகுந்த (பி பிரிவு) 41 முறை சாம்பியனான மும்பை அணி முதல் இன்னிங்சில் 28.3 ஓவர்களில் 114 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக கேப்டன் சூர்யகுமார் யாதவ் 39 ரன்கள் எடுத்தார். அஜிங்யா ரஹானே (5 ரன்), பிரித்வி ஷா (12 ரன்) ஏமாற்றம் அளித்தனர். ரெயில்வே தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் டி.பிரதீப் 6 விக்கெட்டுகளும், அமித் மிஷ்ரா 3 விக்கெட்டுகளும் சாய்த்தனர். அடுத்து தனது முதல் இன்னிங்சை ஆடிய ரெயில்வே அணி முதல் நாள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 116 ரன்கள் எடுத்துள்ளது.

மைசூரில் நடக்கும் இமாச்சலபிரதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் (பி பிரிவு) முதலில் பேட் செய்த முன்னாள் சாம்பியனான கர்நாடகா 67.2 ஓவர்களில் 166 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. கேப்டன் கருண்நாயர் 81 ரன்கள் (165 பந்து, 8 பவுண்டரி) எடுத்தார். மயங்க் அகர்வால், தேவ்தத் படிக்கல் டக்-அவுட் ஆனார்கள். பின்னர் தனது முதல் இன்னிங்சை விளையாடிய இமாச்சலபிரதேச அணி 3 விக்கெட்டுக்கு 29 ரன்களுடன் தடுமாறிக் கொண்டிருந்தது.

சூரத்தில் நடக்கும் கேரளா- குஜராத் அணிகள் (ஏ பிரிவு) இடையிலான ஆட்டத்தில் ஒரே நாளில் 20 விக்கெட்டுகள் சரிந்தன. முதல் இன்னிங்சில் குஜராத் 127 ரன்களும், கேரளா 70 ரன்களும் எடுத்தன.

குஜராத் அணிக்காக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா பங்கேற்பதாக இருந்தது. முதுகுவலி காயத்தால் 4 மாதங்கள் எந்த போட்டியிலும் ஆடாத அவர் உடல்தகுதியை நிரூபிப்பதற்காக இந்த போட்டியில் களம் காண இருந்தார். ஆனால் அவர் போட்டியின் போது 4 முதல் 8 ஓவர்கள் மட்டுமே பந்து வீசுவார், அதற்கு மேல் அவருக்கு வேலைப்பளு கொடுக்கக்கூடாது என்று தேர்வாளர்கள் தரப்பில் குஜராத் அணி நிர்வாகத்துக்கு தெரிவிக்கப்பட்டது. இது குஜராத் அணி நிர்வாகத்துக்கு அதிருப்தி அளித்தது. இறுதியில் அவர் இந்த போட்டியில் விளையாட வேண்டாம், தொடர்ந்து ஓய்வில் இருக்கட்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி அறிவுறுத்தினார். இதையடுத்து கடைசி நேரத்தில் பும்ரா, ரஞ்சி போட்டியில் ஆடுவதில் இருந்து பின்வாங்கினார். பும்ரா பயிற்சி ஆட்டம் இன்றி நேரடியாக இலங்கை 20 ஓவர் தொடரில் விளையாட உள்ளார்.

சூரியகிரகணத்தால் தாமதம்

சூரியகிரணம் காரணமாக ராஜ்கோட்டில் நடக்கும் சவுராஷ்டிரா-உத்தரபிரதேசம், மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடக்கும் மும்பை-ரெயில்வே அணிகள் இடையிலான ரஞ்சி கிரிக்கெட்டில் இன்றைய 2-வது நாள் ஆட்டம் காலை 9.30 மணிக்கு பதிலாக தாமதமாக பகல் 11.30 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story