எனது வாழ்க்கை நல்ல நிலையில் இல்லை; பாகிஸ்தானிடம் உதவி கேட்கும் டேனிஷ் கனேரியா


எனது வாழ்க்கை நல்ல நிலையில் இல்லை; பாகிஸ்தானிடம் உதவி கேட்கும் டேனிஷ் கனேரியா
x
தினத்தந்தி 27 Dec 2019 11:52 AM GMT (Updated: 27 Dec 2019 11:52 AM GMT)

எனது வாழ்க்கை நல்ல நிலையில் இல்லை. எனக்கு உதவுங்கள் என பாகிஸ்தானிடம் உதவி கேட்டு உள்ளார் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா.

புதுடெல்லி,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் இடம் பிடித்து விளையாடியவர் இந்து மதத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் டேனிஷ் கனேரியா. பாகிஸ்தான் அணிக்காக 61 டெஸ்டுகளில் விளையாடி 261 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். 39 வயதான கனேரியா இங்கிலாந்தில் உள்ளூர் கிரிக்கெட்டில் ஆடிய போது சூதாட்ட சர்ச்சையில் சிக்கி தடை நடவடிக்கைக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.

ஆனால் மதம் குறித்து பேசி வந்த சில வீரர்கள் அவரிடம் பாகுபாடு காட்டினர். அவர் இந்து என்பதால் அவருடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிட கூட தயங்கினர் என்று பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் பரபரப்பான குற்றச்சாட்டுகளை வெளியிட்டு இருந்தார். 

இதே இந்து வீரரால் தான் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் வெற்றி பெற்றோம். அவரது முயற்சி இல்லாவிட்டால் தொடரை வென்றிருக்க முடியாது. ஆனால் அதற்குரிய பாராட்டு அவருக்கு முழுமையாக கிடைக்கவில்லை என்றும் அக்தர் கூறி இருந்தார்.

அனில் தல்பத்துக்கு பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டாவது இந்து வீரர்  டேனிஷ் கனேரியா. 

அக்தர் கூறியதை தொடர்ந்து,  கனேரியா அளித்த பேட்டியில் 

சோயிப் அக்தர் எப்போதும் மிகவும் அப்பட்டமாக பேசக்கூடியவர். அதைப் பற்றி பேச எனக்கு தைரியம் இல்லை, ஆனால் சோயிப் பேசி உள்ளார்.  நான் பாகிஸ்தானுக்காக விளையாடியுள்ளேன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன், எல்லா முரண்பாடுகளுக்கும் நடுவில்  நான் சாதித்துள்ளேன்.

 இன்சமாம்-உல்-ஹக், முகமது யூசுப் (முன்னர் யூசுப் யூஹான்), யூனிஸ் கான் மற்றும் சோயிப் அக்தர் ஆகியோர் எனது கிரிக்கெட்   திறன்களுக்காக  என்னை எப்போதும் ஆதரித்து உள்ளார்கள்.

சோயிப்  ஏதாவது சொன்னால், அது உண்மையிலேயே மதிப்பிடப்படுகிறது, நம்பப்படுகிறது,  இதை வெளிப்படுத்தியதற்காக அவருக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். எனக்கு எதிராக பாகுபாடு காட்டிய பெயர்களை சோயிப் பாய் வெளிப்படுத்த முடிந்தால் அது நல்லது அல்லது எல்லாம் வெளிவரும் நேரம் வரும். எனக்கு கடவுள் மீது நம்பிக்கை இருக்கிறது, இவை எனக்கு ஒரு பொருட்டல்ல என்று கூறினார். 

கனேரியா சமீபத்தில்  ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில் தனக்கு உதவுமாறு பாகிஸ்தானிடம்  கோரிக்கை வைத்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

"எனது வாழ்க்கை நல்ல நிலையில் இல்லை, எனது பிரச்சினைகளைத் தீர்க்க பாகிஸ்தானிலும், உலகெங்கிலும் உள்ள பல நபர்களை அணுகினேன். ஆனாலும், எனக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. பாகிஸ்தானின் பல கிரிக்கெட் வீரர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளன. நான் ஒரு கிரிக்கெட் வீரராக பாகிஸ்தானுக்கு சாத்தியமான அனைத்தையும் கொடுத்தேன், அதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். தேவைப்படும் நேரத்தில், பாகிஸ்தான் மக்கள் உதவுவார்கள் என்று நான் நேர்மறையாக இருக்கிறேன்.

என்னை குழப்பத்திலிருந்து வெளியேற்ற பிரதமர் இம்ரான் கான், பாகிஸ்தான் மற்றும் பிற நாடுகளின் கிரிக்கெட் நிர்வாகிகள் உட்பட பாகிஸ்தானின் அனைத்து புகழ்பெற்ற வீரர்களின் ஆதரவும் எனக்கு தேவை. தயவுசெய்து முன் வந்து எனக்கு உதவுங்கள் என கேட்டு உள்ளார்.

Next Story