முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்: இங்கிலாந்தை வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா


முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்: இங்கிலாந்தை வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா
x
தினத்தந்தி 29 Dec 2019 11:44 PM GMT (Updated: 29 Dec 2019 11:44 PM GMT)

செஞ்சூரியனில் நடந்த முதலாவது டெஸ்டில் தென்ஆப்பிரிக்க அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை தோற்கடித்தது.

செஞ்சூரியன்,

தென்ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் கடந்த 26-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே தென்ஆப்பிரிக்கா 284 ரன்களும், இங்கிலாந்து 181 ரன்களும் எடுத்தன. 103 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய தென்ஆப்பிரிக்கா 272 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தது.

இதன் மூலம் இங்கிலாந்துக்கு 376 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. கடின இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து 3-வது நாள் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 121 ரன்கள் எடுத்திருந்தது. ரோரி பர்ன்ஸ் 77 ரன்னுடனும், ஜோ டென்லி 10 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் 4-வது நாளான நேற்று இங்கிலாந்து வீரர்கள் தொடர்ந்து பேட்டிங் செய்தனர். சிறிது நேரத்தில் ரோரி பர்ன்ஸ் (84 ரன்), வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நார்ஜேவின் பந்து வீச்சில் கேட்ச் ஆனார். ஜோ டென்லி 31 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.

கேப்டன் ஜோ ரூட், ஆல்- ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஆகியோரைத் தான் அந்த அணி மலைபோல் நம்பி இருந்தது. ஸ்டோக்ஸ் (14 ரன், 55 பந்து), கேஷவ் மகராஜியின் சுழலில் போல்டு ஆக, அவர்களின் நம்பிக்கை தகர்ந்தது. தாக்குப்பிடித்து ஓரளவு போராடிய ஜோ ரூட் (48 ரன், 101 பந்து, 8 பவுண்டரி) நார்ஜேவின் பந்தில் விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக்கிடம் சிக்கினார். இதன் பின்னர் மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் காஜிசோ ரபடா கைவரிசையை காட்ட, தேனீர் இடைவேளைக்கு முன்பாக இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 93 ஓவர்களில் 268 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் தென்ஆப்பிரிக்கா 107 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ரபடா 4 விக்கெட்டுகளும், நார்ஜே 3 விக்கெட்டுகளும், கேஷவ் மகராஜ் 2 விக்கெட்டும் சாய்த்தனர். இந்த மைதானத்தில் தென்ஆப்பிரிக்கா தொடர்ச்சியாக பதிவு செய்த 6-வது வெற்றி இதுவாகும்.

இந்த ஆண்டில் தோல்விகளால் துவண்டு போயிருந்த தென்ஆப்பிரிக்காவுக்கு புத்துயிர் ஊட்டுவதற்காக புதிதாக தலைமை பயிற்சியாளர் மார்க் பவுச்சர், பேட்டிங் ஆலோசகர் காலிஸ், கிரிக்கெட் வாரிய இயக்குனர் கிரேமி சுமித் ஆகியோர் நியமிக்கப்பட்ட பிறகு அந்த அணிக்கு கிடைத்த முதல் வெற்றி இதுவாகும். இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கீட்டில் வருவதால், இந்த வெற்றிக்கு தென்ஆப்பிரிக்கா 30 புள்ளிகளை பெற்று புள்ளி கணக்கை தொடங்கியது.

தோல்விக்கு பிறகு இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் கூறுகையில், ‘கடந்த ஒரு வாரம் எங்களுக்கு மிகவும் கடினமாக அமைந்தது. 10 வீரர்கள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டனர். இப்படிப்பட்ட சூழலிலும் எங்களது வீரர்கள் களம் கண்டு முடிந்தவரை சிறப்பாக விளையாட முயற்சித்தது பாராட்டுக்குரியது. நானும், பென் ஸ்டோக்சும் களத்தில் நின்ற போது வெற்றி வாய்ப்பு தென்பட்டது. ஹெட்டிங்லே டெஸ்டிலும் (ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 359 ரன்கள் இலக்கை விரட்டிப்பிடித்தது) இதே போன்று நிலைமையில் இருந்து தான் வெற்றி பெற்றோம். அதனால் நம்பிக்கையோடு இருந்தோம். ஆனால் வலுவான பார்ட்னர்ஷிப் தேவைப்பட்டது. அது நடக்காமல் போய் விட்டது. முதல் இன்னிங்சில் பேட்டிங்கில் சொதப்பியதே தோல்விக்கு காரணம். 2-வது இன்னிங்சில் போராடிய விதம் திருப்தியே’ என்றார்.

இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி வருகிற 3-ந்தேதி கேப்டவுனில் தொடங்குகிறது.


Next Story