2020-ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டியிலும் ‘மன்கட்’ அவுட் செய்வேன் - அஸ்வின் அதிரடி


2020-ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டியிலும் ‘மன்கட்’ அவுட் செய்வேன் - அஸ்வின் அதிரடி
x
தினத்தந்தி 31 Dec 2019 11:30 PM GMT (Updated: 2020-01-01T03:17:50+05:30)

வாய்ப்பு கிடைத்தால் 2020-ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டியிலும் ‘மன்கட்’ முறையில் ரன்-அவுட் செய்வேன் என்று சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் கூறியுள்ளார்.

புதுடெல்லி, 

கிரிக்கெட்டில் ‘மன்கட்’ வகையில் ரன்-அவுட் செய்யப்படுவது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகிறது.

1947-ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடியது. சிட்னியில் நடந்த 2-வது டெஸ்டின் போது, இந்திய பவுலர் வினோ மன்கட் பந்து வீச ஓடி வருகையில், பவுலிங் முனையில் நின்றிருந்த ஆஸ்திரேலிய வீரர் பில்லி பிரவுன் கிரீசை விட்டு வெளியே நகர்ந்தார். இதை கவனித்த மன்கட் பந்தை வீசாமல் ஸ்டம்பை தட்டிவிட்டு ரன்-அவுட் செய்தார். இதனால் அதிருப்தியுடன் பில்லி பிரவுன் வெளியேறினார். இது உண்மையான விளையாட்டு உத்வேகத்துக்கு அழகல்ல என்று கூறி ஆஸ்திரேலிய ஊடகங்கள் அவர் மீது சாடின. விதிமுறைப்படி இது அவுட் என்றாலும், கிரிக்கெட் தர்மம், மாண்புப்படி இவ்வாறு செய்வது தவறு என்ற வாதம் தற்போது வரைக்கும் நீடிக்கிறது. இந்த மாதிரி ரன்-அவுட் செய்யப்படுவதை தான் மன்கட் ரன்-அவுட் என்று அழைக்கிறார்கள்.

2019-ம் ஆண்டு மார்ச் மாதம் ஜெய்ப்பூரில் நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட்டில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அதிரடி வீரர் ஜோஸ் பட்லர் ‘மன்கட்’ முறையில் ரன் அவுட் செய்யப்பட்டார். கிங்ஸ் லெவன் அணியின் கேப்டனாக இருந்த சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின், பந்து வீசும் முன்பு கிரீசை விட்டு முன்னோக்கி சில அடி வெளியே சென்ற பட்லரை ரன்-அவுட் செய்தது பெரும் சர்ச்சையாக வெடித்தது. விதிமுறைப்படியே நடந்து கொண்டேன் என்று அஸ்வின் தன்னிலை விளக்கம் அளித்தார். ஐ.பி.எல்.-ல் நடந்த முதல் ‘மன்கட்’ அவுட் இது தான்.

இந்த நிலையில் இந்த ஆண்டு மார்ச் இறுதியில் தொடங்கும் 13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரிலும் ‘மன்கட்’ கைவரிசையை காட்டுவேன் என்று அஸ்வின் தைரியமாக கூறியிருக்கிறார். இந்த சீசனில் அஸ்வின் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாட உள்ளார்.

அவரிடம் ரசிகர் ஒருவர், டுவிட்டர் மூலம் 2020-ம் ஆண்டு ஐ.பி.எல்.-ல் சீசனில், நீங்கள் மன்கட் அவுட் செய்வதற்கு தகுதியான பேட்ஸ்மேனாக யாரை கருதுகிறீர்கள் என்று கேள்வி கேட்டார்.

அதற்கு அஸ்வின், ‘நான் பந்து வீசும்போது எந்த பேட்ஸ்மேன் கிரீசை விட்டு வெளியே சென்றாலும் அவரை மன்கட் அவுட் செய்வேன்’ என்று ஜாலியாக பதில் அளித்துள்ளார்.

Next Story