கேப்டன்ஷிப்பில் கோலி நாள்தோறும் முன்னேற்றம் காணுகிறார் - பயிற்சியாளர் ரவிசாஸ்திரி பெருமிதம்


கேப்டன்ஷிப்பில் கோலி நாள்தோறும் முன்னேற்றம் காணுகிறார் - பயிற்சியாளர் ரவிசாஸ்திரி பெருமிதம்
x
தினத்தந்தி 1 Jan 2020 11:00 PM GMT (Updated: 2020-01-02T02:06:05+05:30)

கேப்டன்ஷிப்பில் கோலி நாள்தோறும் முன்னேற்றம் காணுகிறார் என்று இந்திய பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

புதுடெல்லி, 

இந்திய கிரிக்கெட் அணிக்கு மட்டுமல்ல, உலகின் எந்த அணிக்கும் டெஸ்ட் கிரிக்கெட் தான் மிகப்பெரிய சவாலானதாகும். அதனால் தான் டெஸ்ட் கிரிக்கெட்டை இந்திய கேப்டன் விராட் கோலி மிகவும் நேசிக்கிறார். அதில் சிறந்த வீரராக ஜொலிக்க வேண்டும் என்ற நோக்குடன் உற்சாகமாக அனுபவித்து விளையாடுகிறார். தங்களது சூப்பர் ஸ்டார் டெஸ்ட் கிரிக்கெட்டை விரும்பும் போது, டெஸ்ட் போட்டியை பார்க்கும் இளம் வயதினருக்கும் அவர்களை போன்று சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.

இதுவரை 100 சதவீதம் மிகச்சிறந்த கேப்டனாக யாரையும் நான் பார்த்ததில்லை. ஒவ்வொரு கேப்டனுக்கும் வெவ்வேறு விதமான பலமும், பலவீனமும் உண்டு. இந்த நாள் வரைக்கும் சிறந்த கேப்டன் என்று யாரையும் பார்க்கவில்லை. ஒரு பகுதியில் பலமாக இருக்கும் கேப்டன், இன்னொரு விஷயத்தில் பலவீனமாக இருப்பார். ஆனால் அந்த விஷயத்தில் இன்னொரு கேப்டன் வலிமையுடன் தென்படுவார். எனவே ஆட்டத்தின் முடிவுகளை நீங்கள் பார்க்க வேண்டுமே தவிர, அவரது பலம் என்ன? அது எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது முக்கியம் அல்ல.

விராட் கோலியை பொறுத்தவரை நாளுக்கு நாள் கேப்டன்ஷிப்பில் மெருகேறி கொண்டே வருகிறார். களத்தில் அவர் வெளிப்படுத்தும் ஆக்ரோஷத்தையும், ஆர்வத்தையும் வேறு யாருடனும் ஒப்பிட முடியாது. களத்திற்குள் இந்த அளவுக்கு ஆர்வத்தை கொண்டு வரும் எந்த கேப்டனையும் பார்த்ததில்லை. வரும் காலங்களில் கேப்டனாக நிச்சயம் முன்னேற்றம் காணுவார்.

யார் கேப்டனாக வந்தாலும் கற்றுக்கொள்ளத்தான் வேண்டும். எல்லா தகுதியுடன் இருக்கிறார். முதல் நாளில் இருந்தே கற்றுக்கொள்ளத் தேவையில்லை என்ற நிலையில் எந்த கேப்டனும் கிடையாது. ஆட்டத்தின் சூழ்நிலைகளில் இருந்து கற்கிறோம். அந்த வகையில் கோலியின் பணி அபாரமாக உள்ளது.

ஒவ்வொரு போட்டிக்கு முன்பாக ஆலோசிக்கும் போது புதுப்புது யோசனைகளையும் சொல்வார்கள். இளம் வீரர்களும் தங்களது திட்டத்தை கூறுவார்கள். அவற்றில் எல்லாமே சரியாக இருக்கும் என்று சொல்ல முடியாது. இறுதியில் அணியின் நலனுக்கு எது சிறந்ததோ அதை எடுத்துக் கொள்வோம்.

இவ்வாறு ரவிசாஸ்திரி கூறினார்.

கோலியின் தலைமையில் இந்திய அணி இதுவரை 53 டெஸ்டுகளில் விளையாடி 33-ல் வெற்றியும், 10-ல் தோல்வியும், 10-ல் டிராவும் கண்டுள்ளது. ஒரு நாள் கிரிக்கெட்டில் 83 ஆட்டங்களுக்கு கேப்டனாக பணியாற்றியுள்ள கோலி அதில் 60 ஆட்டங்களில் வெற்றி தேடித்தந்திருக்கிறார்.

Next Story