‘விமர்சனம் குறித்து கவலைப்படுவதில்லை’ - ரோகித் சர்மா சொல்கிறார்


‘விமர்சனம் குறித்து கவலைப்படுவதில்லை’ - ரோகித் சர்மா சொல்கிறார்
x
தினத்தந்தி 6 Jan 2020 11:15 PM GMT (Updated: 6 Jan 2020 7:32 PM GMT)

விமர்சனம் குறித்து கவலைப்படுவது கிடையாது என்று இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா தெரிவித்தார்.

புதுடெல்லி, 

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

நான் சிந்திப்பதில் வித்தியாசமான அணுகுமுறையை கொண்டவன். எனது வாழ்க்கையில் குடும்பத்துக்கு அதிக இடம் அளிப்பவன். மற்றவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பது குறித்து நான் கவலைப்படுவதில்லை. எனது மனைவியும், குழந்தையும் என்னை உற்சாகப்படுத்துகிறார்கள். எனவே அவர்களுடன் அதிக நேரத்தை செலவிட முயற்சிக்கிறேன். இது குறித்து மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை நான் சிந்திப்பது கிடையாது. என்னை பற்றி மற்றவர்கள் சொல்லும் நல்ல மற்றும் மோசமான கருத்துக்கு எதிராக பேசும் வயதை நான் கடந்து விட்டேன்.

நான் டெஸ்ட் போட்டி குறித்து சிந்திப்பதை நிறுத்தி நீண்டகாலம் ஆகிவிட்டது. முன்பெல்லாம் டெஸ்ட் போட்டி முடிந்ததும் எனது ஆட்டத்தில் ஏற்பட்ட தவறுகள் குறித்து வீடியோ காட்சிகளை பார்த்து அதிகம் சிந்திப்பேன். ஆட்ட நுணுக்கம் குறித்து அதிகம் சிந்தித்தால் ஆட்டத்தை அனுபவித்து விளையாட முடியாது. எந்தவொரு போட்டியிலும் எதிர்மறையான எண்ணத்துடன் விளையாடக்கூடாது. டெஸ்ட் போட்டியில் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்பதை நான் உணர்ந்து இருக்கிறேன்.

கிரிக்கெட் மட்டுமின்றி எந்த விளையாட்டாக இருந்தாலும் நமது கவனத்தை சிதறடிக்கக்கூடிய சத்தம் நம்மை சுற்றி கேட்க தான் செய்யும். இதனை சமாளிக்க நம்மை சுற்றி பாதுகாப்பு வளையம் அமைத்து கொள்ள வேண்டியது அவசியமானதாகும். நீங்கள் அனுமதிக்காத நிலையில் அந்த பாதுகாப்பு வளையத்துக்குள் மற்றவர்களின் யோசனைகள் வராதவகையில் பார்த்து கொள்ள வேண்டும். இளம் வீரர் ரிஷாப் பண்ட் குறித்து பலரும் விமர்சிக்கிறார்கள். அவரிடம் நான் சொன்னது உன்னை சுற்றி ஒரு சுவர் உருவாக்கி அதனை தாண்டி மற்றவர்கள் கருத்துகள் வராதபடி பார்த்து கொண்டு உனது வேலையில் மட்டும் கவனம் செலுத்து என்றேன். இது ரிஷாப் பண்டுக்கு உதவுமா? என்று யாருக்கு தெரியும். குறைந்தபட்சம் எனக்கு உதவியது.

எங்களுக்கு ஆதரவாக குடும்பத்தினர் உள்ளனர். நாங்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதை அவர்கள் உறுதி செய்கிறார்கள். உலக கோப்பை போட்டியின் போது சீனியர் வீரர்களுடன் குடும்பத்தினர் அதிக நாட்கள் தங்கியதாக வெளியான செய்தியை சில நண்பர்கள் என்னிடம் சொன்னார்கள். அதனை கேட்டு நான் சிரிக்க தான் செய்தேன். நீங்கள் என்னை பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள். ஆனால் எனது குடும்பத்தை இழுப்பது முறையாகாது. என்னை போல் குடும்பமே பிரதானமானது என்பதை விராட்கோலியும் நினைப்பார் என்று நான் நம்புகிறேன்.

இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.

Next Story