ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழகம் ஆட்டம் ‘டிரா’


ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழகம் ஆட்டம் ‘டிரா’
x
தினத்தந்தி 6 Jan 2020 11:45 PM GMT (Updated: 6 Jan 2020 7:32 PM GMT)

ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு-உத்தபிரதேச அணிகள் இடையிலான ஆட்டம் ‘டிரா’வில் முடிந்தது.

கான்பூர், 

ரஞ்சி கிரிக்கெட் போட்டி தொடர் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இதில் தமிழ்நாடு-உத்தரபிரதேச அணிகள் இடையிலான லீக் ஆட்டம் (பி பிரிவு) கான்பூரில் நடந்தது. முதல் நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில் முதல் இன்னிங்சில் தமிழக அணி 180 ரன்கள் எடுத்தது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய உத்தரபிரதேச அணி 3-வது நாள் ஆட்டம் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்து இருந்தது.

நேற்று 4-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய உத்தரபிரதேச அணி முதல் இன்னிங்சில் 71.1 ஓவர்களில் 175 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. தமிழக அணி தரப்பில் டி.நடராஜன் 4 விக்கெட்டும், சாய் கிஷோர் 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள். 5 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய தமிழக அணி 54.5 ஓவர்களில் 154 ரன்னில் ஆட்டம் இழந்தது. அதிகபட்சமாக பாபா அபராஜித் 53 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். உத்தரபிரதேச அணி தரப்பில் சவுரப் குமார் 5 விக்கெட்டும், அங்கித் ராஜ்பூத் 3 விக்கெட்டும், ரிங்கு சிங் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

இதனை அடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்சை ஆடிய உத்தரபிரதேச அணி 7.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 42 ரன்கள் எடுத்து இருந்த போது ஆட்டம் டிராவில் முடித்து கொள்ளப்பட்டது. முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றதால் தமிழக அணிக்கு 3 புள்ளி கிடைத்தது. 4-வது ஆட்டத்தில் ஆடிய தமிழக அணி 2 டிரா, 2 தோல்வி கண்டுள்ளது.

ஜெய்ப்பூரில் நடந்த ராஜஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் (ஏ பிரிவு) ஆந்திர அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி நாளான நேற்று 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்சை ஆடிய ஆந்திர அணி 49.5 ஓவர் களில் 4 விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டிப்பிடித்து 2-வது வெற்றியை தனதாக்கியது.

ராஞ்சியில் நடந்த ஜார்கண்ட் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஜம்மு-காஷ்மீர் அணி இன்னிங்ஸ் மற்றும் 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 4-வது ஆட்டத்தில் ஆடிய அந்த அணி பெற்ற 3-வது வெற்றி இதுவாகும். ஒரு ஆட்டத்தில் டிரா கண்டுள்ளது. மொகாலியில் நடந்த பஞ்சாப்-டெல்லி அணிகள் இடையிலான லீக் ஆட்டம் டிராவில் முடிந்தது. மழை காரணமாக நேற்றைய கடைசி நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.

Next Story