வானம், பூமி, காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்களின் இயல்புகளை கொண்ட 5 பேர்களின் கதை படம் பஞ்சராக்‌ஷரம் - விமர்சனம்


வானம், பூமி, காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்களின் இயல்புகளை கொண்ட 5 பேர்களின் கதை படம் பஞ்சராக்‌ஷரம் - விமர்சனம்
x
தினத்தந்தி 11 Jan 2020 12:43 AM GMT (Updated: 11 Jan 2020 5:00 AM GMT)

அந்த ஐந்து பேர்களில் இரண்டு பேர் பெண்கள். மூன்று பேர் ஆண்கள். ஐந்து பேர்களும் ஒரு நிகழ்ச்சியில் சந்தித்து, நண்பர்கள் ஆகிறார்கள். 5 பேரும் சேர்ந்து ஒரு ஜாலி டூர் போகிறார்கள்.

அங்கே அவர்கள் கையில் பழைய பஞ்சாங்கம் போல் ஒரு புத்தகம் கிடைக்கிறது. அவர்கள் வாழ்க்கையில் நடந்து முடிந்து போன விஷயங்களும், இனிமேல் நடக்கப் போவதும் அந்த புத்தகத்தில் எழுதப்பட்டு இருக்கிறது.

அதைப்பார்த்து அதிர்ச்சி அடைகிறார்கள். அவர்களை பயம் பற்றிக் கொள்கிறது. புத்தகத்தை தூர வீசிவிட்டு, ஊர் திரும்புகிறார்கள். மர்ம புத்தகத்தில் எழுதப்பட்டிருந்த நிகழ்வுகள் ஒவ்வொன்றாக நண்பர்கள் வாழ்க்கையில் நடக்கிறது. ஒரு பெண்ணும், ஆணும் ‘சைக்கோ’ ஆசாமியால் கடத்தப்படுகிறார்கள். இரண்டு பேரையும் ஒரு பாழடைந்த வீட்டில் கட்டி வைத்து, ‘சைக்கோ’ ஆசாமி துன்புறுத்துகிறான்.

நண்பனையும், சினேகிதியையும் மீட்க மற்ற மூன்று நண்பர்களும் முயற்சிக்கிறார்கள். அவர்களின் முயற்சி வெற்றி பெற்றதா, இல்லையா? என்பது ‘கிளைமாக்ஸ்.’

சந்தோஷ் பிரதாப், கோகுல், அஸ்வின் ஜெரோமி, மதுஷாலினி, சனா அல்டாப் ஆகிய 5 பேர்களும் நண்பர்களாக நடித்துள்ளனர். மர்மங்கள் அடங்கிய திகில் படம் என்பதால் ஐந்து பேருக்கும் நடிக்க சந்தர்ப்பம் இருக்கிறது. காட்சிக்கு காட்சி அவர்களும் பயந்து, படம் பார்ப்பவர்களையும் பயப்பட வைக்கிறார்கள்.

யுவாவின் ஒளிப்பதிவும், இசையமைப்பாளர் சுந்தரமூர்த்தியின் பின்னணி இசையும் சேர்ந்து மேலும் பயமுறுத்துகின்றன. பாலாஜி வைரமுத்து டைரக்டு செய்து இருக்கிறார். திகில் படங்கள் ரசிகர்களுக்கு புதுசு அல்ல. பஞ்சபூதங்களை திரைக்கதையில் கொண்டு வந்திருப்பது, புதுசு. படத்தின் நீளம்தான் ஒரே பின்னடைவு. இடைவேளை வரை மெதுவாக பயணித்த திரைக்கதை அப்புறம் வேகம் பிடிக்கிறது. உச்சக்கட்ட காட்சி, மிரள வைக்கிறது.

Next Story