தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிக்காக மீண்டும் விளையாட ஆர்வம் - டிவில்லியர்ஸ்


தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிக்காக மீண்டும் விளையாட ஆர்வம் - டிவில்லியர்ஸ்
x
தினத்தந்தி 14 Jan 2020 11:07 PM GMT (Updated: 14 Jan 2020 11:07 PM GMT)

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிக்காக மீண்டும் விளையாட ஆர்வமுடன் இருப்பதாக டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.


* டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை 5 நாட்களில் இருந்து 4 நாட்களாக குறைப்பது குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) பரிசீலித்து வருகிறது. இந்த திட்டத்துக்கு, கிரிக்கெட் விதிகளை வகுப்பதில் முன்னோடியான லண்டனைச் சேர்ந்த மெரில்போர்ன் கிரிக்கெட் கிளப் (எம்.சி.சி.) எதிர்ப்பு தெரிவித்துள்ளது. எம்.சி.சி. வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஐ.சி.சி.யின் கிரிக்கெட் கமிட்டியிடம் சமீபத்தில் இந்த விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தினோம். 4 நாட்களாக குறைப்பதன் மூலம் கிடைக்கும் சில ஆதாயங்கள் பற்றி எடுத்து கூறினர். இருப்பினும் டெஸ்ட் போட்டி வழக்கம் போல் 5 நாட்களாக தொடர வேண்டும் என்பதே இரு கமிட்டியின் விரும்பமாகும்’ என்று கூறப்பட்டுள்ளது.

* ஓய்வில் இருந்து விடுபட்டு தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிக்காக மீண்டும் விளையாட ஆர்வமுடன் இருப்பதாகவும், இது தொடர்பாக தலைமை பயிற்சியாளர் மார்க் பவுச்சரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அதிரடி வீரர் டிவில்லியர்ஸ் கூறியுள்ளார்.

* வங்காளதேச கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், ஒரு நாள் போட்டி ஒன்று மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக மூன்று முறை பாகிஸ்தானுக்கு சென்று விளையாட ஒப்புதல் அளித்துள்ளது. வருகிற 24-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை மூன்று 20 ஓவர் ஆட்டங்களும் லாகூரில் நடக்கிறது. பிறகு பிப்ரவரி 7-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை ராவல்பிண்டியில் முதலாவது டெஸ்டில் வங்காளதேசம் ஆடுகிறது. ஏப்ரல் மாதம் மற்றொரு டெஸ்டும், ஒரு நாள் ஆட்டமும் நடைபெறுகிறது.

* ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) தென்ஆப்பிரிக்காவில் வருகிற 17-ந்தேதி தொடங்குகிறது. இதையொட்டி நேற்று நடந்த பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை தோற்கடித்தது.

* ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு ஐதராபாத்தில் நடக்கும் 59-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் எப்.சி.-ஒடிசா எப்.சி. அணிகள் மோதுகின்றன.

* இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி ஜகர்தாவில் நேற்று தொடங்கியது. முதல் நாளில் நடந்த தகுதி சுற்று ஆட்டங்களில் இந்திய இளம் வீரர்கள் லக்‌ஷயா சென், சுபாங்கர் தேவ் இருவரும் தங்களது ஆட்டங்களில் தோற்று பிரதான சுற்றை எட்ட முடியாமல் வெளியேறினர்.


Next Story