இந்திய கிரிக்கெட் வாரிய ஒப்பந்த வீரர்கள் பட்டியலில் இருந்து டோனி நீக்கம்


இந்திய கிரிக்கெட் வாரிய ஒப்பந்த வீரர்கள் பட்டியலில் இருந்து டோனி நீக்கம்
x
தினத்தந்தி 16 Jan 2020 10:06 AM GMT (Updated: 16 Jan 2020 7:20 PM GMT)

இந்திய கிரிக்கெட் வாரிய ஒப்பந்த வீரர்கள் பட்டியலில் இருந்து டோனி நீக்கப்பட்டுள்ளார்.

புதுடெல்லி, 

இந்திய கிரிக்கெட் வாரிய ஒப்பந்த வீரர்கள் பட்டியலில் இருந்து டோனி நீக்கப்பட்டுள்ளார்.

ஒப்பந்த வீரர்கள் பட்டியல்

இந்திய கிரிக்கெட் வாரியம் ஆண்டுதோறும் ஒப்பந்த வீரர்கள் பட்டியலை தேர்வு செய்து அவர்களது ஆட்ட திறமைக்கு தகுந்தபடி 4 பிரிவாக பிரித்து ஊதியம் வழங்கி வருகிறது. ‘ஏ பிளஸ்’ பிரிவில் இடம் பெறும் வீரர்களுக்கு ஆண்டுக்கு ரூ.7 கோடியும், ‘ஏ’ பிரிவில் இடம் பிடிக்கும் வீரர்களுக்கு ரூ.5 கோடியும், ‘பி’ பிரிவில் இடம் பெறுபவர்களுக்கு ரூ.3 கோடியும், ‘சி’ பிரிவில் இடம் பெறுபவர்களுக்கு ரூ.1 கோடியும் ஊதியமாக அளிக்கப்படும்.

இந்த ஆண்டுக்கான (2019 அக்டோபர் மாதம் முதல் 2020 செப்டம்பர் வரை) மத்திய ஒப்பந்த வீரர்கள் பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று வெளியிட்டது. ஒப்பந்த பட்டியலில் மொத்தம் 27 வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

டோனி நீக்கம்

கடந்த ஆண்டு ஒப்பந்த பட்டியலில் ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்து இருந்தவரும், இந்திய அணிக்கு 2007-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பையையும், 2011-ம் ஆண்டு ஒருநாள் போட்டி உலக கோப்பையையும் வென்று கொடுத்தவருமான முன்னாள் கேப்டன் டோனி இந்த ஆண்டுக்கான ஒப்பந்த வீரர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவரது நீக்கம் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

38 வயதான டோனி கடைசியாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் 9-ந் தேதி நடந்த உலக கோப்பை அரைஇறுதிப்போட்டியில் விளையாடினார். அதன் பிறகு அவர் எந்த போட்டியிலும் விளையாடவில்லை. அதேநேரத்தில் அவர் தனது ஓய்வு குறித்து எதுவும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வருகிறார். ஒருநாள் போட்டியில் இருந்து டோனி விரைவில் ஓய்வு பெறுவார் என்று இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி சமீபத்தில் தெரிவித்து இருந்தார். வருகிற மார்ச் மாதம் தொடங்கும் ஐ.பி.எல். போட்டியில் டோனியின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்பதை பொறுத்து 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைக்குமா? என்பது தெரியவரும் என்று சொல்லப்படுகிறது.

தினேஷ் கார்த்திக்கு இடமில்லை

இருப்பினும் டோனி மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவது சந்தேகம் என்றே சொல்லப்படுகிறது. இந்த நீக்கத்தின் மூலம் டோனியின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருவதாக சந்தேகம் எழுந்துள்ளது. புதிய ஒப்பந்த காலத்தில் டோனி ஒரு போட்டியில் கூட விளையாடாததால் முறைப்படி அவரிடம் தெரிவிக்கப்பட்டு தான் பட்டியலில் இருந்து அவரது பெயர் நீக்கம் செய்யப்பட்டதாக இந்திய கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த ஆண்டு ‘சி’ பிரிவில் இடம் பிடித்து இருந்த தமிழக வீரர் தினேஷ் கார்த்திக், அம்பத்தி ராயுடு, கலீல் அகமது ஆகியோரும் ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். லோகேஷ் ராகுல் ‘பி’ பிரிவில் இருந்து ‘ஏ’ கிரேடுக்கு முன்னேறி இருக்கிறார். மயங்க் அகர்வால் நேரடியாக ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ளார். ‘சி’ பிரிவில் நவ்தீப் சைனி, வாஷிங்டன் சுந்தர், தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் புதிதாக இடத்தை ஆக்கிரமித்துள்ளனர். மற்ற வீரர்கள் பட்டியலில் மாற்றமின்றி தொடருகின்றனர்.

வீரர்கள் விவரம்

இந்திய கிரிக்கெட் வாரிய ஒப்பந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள வீரர்கள் பிரிவு வாரியாக வருமாறு:-

‘ஏ’ பிளஸ்: விராட்கோலி, ரோகித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா.

கிரேடு ‘ஏ’: ஆர்.அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர்குமார், புஜாரா, ரஹானே, ஷிகர் தவான், முகமது ஷமி, இஷாந்த் ஷர்மா, குல்தீப் யாதவ், ரிஷாப் பண்ட், லோகேஷ் ராகுல்.

கிரேடு ‘பி’: உமேஷ் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், ஹர்திக் பாண்ட்யா, விருத்திமான் சஹா, மயங்க் அகர்வால்.

கிரேடு ‘சி’: கேதர் ஜாதவ், மனிஷ் பாண்டே, ஹனுமா விஹாரி, நவ்தீப் சைனி, தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், ஸ்ரேயாஸ் அய்யர், வாஷிங்டன் சுந்தர்.

Next Story