ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: வெற்றியுடன் தொடங்கியது இந்தியா


ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: வெற்றியுடன் தொடங்கியது இந்தியா
x
தினத்தந்தி 19 Jan 2020 11:48 PM GMT (Updated: 19 Jan 2020 11:48 PM GMT)

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நடப்பு சாம்பியன் இந்திய அணி வெற்றியுடன் அமர்க்களமாக தொடங்கியுள்ளது.

புளோம் பாண்டீன்,

13-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. ‘ஏ’ பிரிவில் அங்கம் வகிக்கும் நடப்பு சாம்பியனான இந்திய அணி, இலங்கையுடன் நேற்று மோதியது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 297 ரன்கள் குவித்தது. களம் இறங்கிய 6 பேட்ஸ்மேன்களும் 20 ரன்களுக்கு மேல் எடுத்தனர். ஜெய்ஸ்வால் (59 ரன்), கேப்டன் பிரியம் கார்க் (56 ரன்), விக்கெட் கீப்பர் துருவ் ஜூரெல் (52 ரன்) அரைசதம் அடித்தனர்.

தொடர்ந்து ஆடிய இலங்கை அணி 45.2 ஓவர்களில் 207 ரன்களில் ஆட்டம் இழந்தது. இதன் மூலம் இந்தியா 90 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. இந்திய தரப்பில் ஆகாஷ் சிங், சித்தேஷ் வீர், ரவி பிஷ்னோய் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

மற்றொரு ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி (சி பிரிவு), ஸ்காட்லாந்தை சந்தித்தது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த ஸ்காட்லாந்து அணி 23.5 ஓவர்களில் வெறும் 75 ரன்னில் அடங்கியது. பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது வாசிம் 7.5 ஓவர்களில் 2 மெய்டனுடன் 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார்.

இந்த எளிய இலக்கை பாகிஸ்தான் அணி 11.4 ஓவர்களில் எட்டிப்பிடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இன்றைய லீக் ஆட்டங்களில் இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா-நைஜீரியா அணிகள் மோதுகின்றன.


Next Story