நியூசிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: இந்திய அணியில் இருந்து காயத்தால் ஷிகர் தவான் விலகல்


நியூசிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: இந்திய அணியில் இருந்து காயத்தால் ஷிகர் தவான் விலகல்
x

நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடருக்கான இந்திய அணியில் இருந்து காயம் காரணமாக ஷிகர் தவான் விலகி உள்ளார்.

புதுடெல்லி,

பெங்களூருவில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 5-வது ஓவரில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் அடித்த பந்தை தடுக்க முயன்ற போது தரையில் விழுந்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் தோள்பட்டையில் காயம் அடைந்து வெளியேறினார். அவருக்கு தோள்பட்டை இணைப்பு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதால் கட்டு போடப்பட்டுள்ளது.

இந்திய அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து 20 ஓவர், 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இதில் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் நாளை மறுநாள் இந்திய நேரப்படி பகல் 12.30 மணிக்கு நடக்கிறது. நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடருக்கான இந்திய அணி நேற்று முன்தினம் பெங்களூருவில் இருந்து புறப்பட்டு சென்றது. இந்திய அணியில் இடம் பிடித்து இருந்த ஷிகர் தவான் அணியினருடன் செல்லவில்லை.

இந்த நிலையில் தோள்பட்டை காயம் காரணமாக தவான் நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணியில் இருந்து நேற்று விலகினார். அவருக்கு பதிலாக தற்போது நியூசிலாந்தில் இந்திய ‘ஏ’ அணிக்காக ஆடி வரும் சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட்டுள்ளார்.

டெல்லியில் நடந்து வரும் விதர்பா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் டெல்லி அணிக்காக விளையாடிய இந்திய டெஸ்ட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா நேற்று முன்தினம் பந்து வீசுகையில் கணுக்காலில் காயம் அடைந்து வலி தாங்க முடியாமல் வெளியேறினார்.

இஷாந்த் ஷர்மாவின் காயம் குறித்து டெல்லி கிரிக்கெட் சங்க பொதுச்செயலாளர் வினோத் திஹரா கருத்து தெரிவிக்கையில், ‘இஷாந்த் ஷர்மாவுக்கு நடத்தப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில் அவருக்கு கணுக்காலில் தசைநார் கவலைப்படும் வகையில் கிழிந்து இருப்பது தெரியவந்தது. 6 வாரம் ஓய்வு எடுக்கும்படி டாக்டர்கள் அவருக்கு அறிவுறுத்தி இருக்கிறார்கள். இது மிகப்பெரிய பின்னடைவாகும்’ என்றார். காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடருக்கான இந்திய அணியில் இஷாந்த் ஷர்மாவுக்கு இடம் கிடைக்காது என்று தெரிகிறது.


Next Story