நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்: இந்திய ‘ஏ’ அணி வெற்றி


நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்: இந்திய ‘ஏ’ அணி வெற்றி
x
தினத்தந்தி 23 Jan 2020 12:56 AM GMT (Updated: 23 Jan 2020 12:56 AM GMT)

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய ‘ஏ’ அணி வெற்றிபெற்றது.

லிங்கான்,

இந்தியா- நியூசிலாந்து ‘ஏ’ அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட அதிகாரபூர்வமற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் முதலாவது ஆட்டம் லிங்கானில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து ‘ஏ’ அணி, இந்திய வீரர்களின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 48.3 ஓவர்களில் 230 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. அதிகபட்சமாக ராசின் ரவீந்திரா 49 ரன்னும், கேப்டன் டாம் புருஸ் 47 ரன்னும் எடுத்தனர். இந்திய தரப்பில் முகமது சிராஜ் 3 விக்கெட்டும், கலீல் அகமது, அக்‌ஷர் பட்டேல் தலா 2 விக்கெட்டும், விஜய் சங்கர், ராகுல் சாஹர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

அடுத்து களம் இறங்கிய இந்திய ‘ஏ’ அணி 29.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்த உத்வேகத்துடன் ஆடிய பிரித்வி ஷா 48 ரன்னும் (35 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்), சஞ்சு சாம்சன் 39 ரன்னும் (21 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினர். மயங்க் அகர்வால் (29 ரன்), கேப்டன் சுப்மான் கில் (30 ரன்), சூர்யகுமார் யாதவ் (35 ரன்), விஜய் சங்கர் (20 ரன், நாட்-அவுட்) ஆகியோரும் கணிசமான பங்களிப்பை அளித்து வெற்றிக்கு வழிவகுத்தனர். இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் நாளை நடக்கிறது.


Next Story