இந்தியா-நியூசிலாந்து மோதும் முதலாவது 20 ஓவர் போட்டி ஆக்லாந்தில் இன்று நடக்கிறது


இந்தியா-நியூசிலாந்து மோதும் முதலாவது 20 ஓவர் போட்டி ஆக்லாந்தில் இன்று நடக்கிறது
x
தினத்தந்தி 23 Jan 2020 11:08 PM GMT (Updated: 23 Jan 2020 11:08 PM GMT)

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் இன்று நடக்கிறது.

ஆக்லாந்து,

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஐந்து 20 ஓவர், மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.

முதலில் 20 ஓவர் தொடர் நடத்தப்படுகிறது. இதன்படி இந்தியா-நியூசிலாந்து இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி ஆக்லாந்தில் உள்ள ஈடன்பார்க் ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் 20 ஓவர் உலக கோப்பை போட்டி நடப்பதால், அதற்கு தயார்படுத்திக் கொள்வதற்கும், சரியான லெவன் அணியை அடையாளம் காண்பதற்கும் இந்த தொடர் இரு அணிகளுக்கும் உதவிகரமாக இருக்கும்.

சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை ஒரு நாள் தொடரில் வீழ்த்திய உற்சாகத்தோடு இந்திய அணி நியூசிலாந்தில் கால்பதித்துள்ளது. குறுகிய காலத்தில் அங்குள்ள சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப மாற்றிக்கொள்வது தான் இந்திய வீரர்களுக்கு உள்ள சவாலாகும். மற்றபடி இந்திய அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் வலுவாகவே தென்படுகிறது.

தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் காயத்தால் நியூசிலாந்து தொடரில் இருந்து விலகி விட்டதால் அவருக்கு பதிலாக லோகேஷ் ராகுல், ரோகித் சர்மாவுடன் இணைந்து தொடக்க ஆட்டக்காரராக ஆடுவார். இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் பந்து தாக்கி காயமடைந்த போது எஞ்சிய இரு ஆட்டங்களிலும் விக்கெட் கீப்பிங் பணியை லோகேஷ் ராகுல் கவனித்தார். இதனால் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனை சேர்க்க முடிந்தது. இன்றைய ஆட்டத்திலும் லோகேஷ் ராகுல் விக்கெட் கீப்பராக தொடருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு நடந்தால் ரிஷாப் பண்ட் வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டியது இருக்கும்.

இந்திய கேப்டன் விராட் கோலி முதல்முறையாக நியூசிலாந்து மண்ணில் 20 ஓவர் போட்டியில் விளையாட உள்ளார். இன்னும் 81 ரன் எடுத்தால் கேப்டனாக சர்வதேச 20 ஓவர் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த இந்தியர் என்ற பெருமையை டோனியிடம் இருந்து தட்டிப்பறிப்பார். கோலி, ரோகித், ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர் தான் இந்திய அணியின் பேட்டிங் தூண்களாக உள்ளனர். இவர்கள் நிலைத்து நின்று மட்டையை சுழட்டுவதை பொறுத்தே இந்தியாவின் ரன் குவிப்பு அமையும். பந்து வீச்சில் பும்ரா, ஜடேஜா, யுஸ்வேந்திர சாஹல், முகமது ஷமி வலு சேர்க்கிறார்கள்.

நியூசிலாந்து அணி சமீபத்தில் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை 0-3 என்ற கணக்கில் இழந்ததும், அதில் அந்த அணி வீரர்களின் மோசமான பேட்டிங்கும் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. அதற்கு முன்பாக சொந்த மண்ணில் 20 ஓவர் தொடரை இங்கிலாந்திடம் 2-3 என்ற கணக்கில் பறிகொடுத்தது.

மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்ப வேண்டிய நெருக்கடியில் தவிக்கும் நியூசிலாந்து அணிக்கு உள்ளூரில் ஆடுவது சாதகமான அம்சமாகும். முன்னணி பவுலர்கள் டிரென்ட் பவுல்ட், லோக்கி பெர்குசன், மேட் ஹென்றி ஆகியோர் காயத்தால் அவதிப்பட்டாலும், அதை சமாளிக்க அனுபவம் வாய்ந்த டிம் சவுதி, மிட்செல் சான்ட்னெர், சோதி உள்ளிட்டோர் உள்ளனர்.

பேட்டிங்கில் நியூசிலாந்து வலிமைமிக்கதாக திகழ்கிறது. மார்ட்டின் கப்தில், காலின் முன்ரோ, கேப்டன் வில்லியம்சன், முன்னாள் கேப்டன் ராஸ் டெய்லர், விக்கெட் கீப்பர் செய்பெர்ட் பேட்டிங்கில் மிரட்டக்கூடியவர்கள். மொத்தத்தில் பலமிக்க இரு அணிகள் மல்லுகட்டுவதால் களத்தில் அனல் பறக்கும் என்று நம்பலாம்.

பொதுவாக நியூசிலாந்து ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்கு உகந்த வகையிலேயே இருக்கும். ஆனால் கணித்து செயல்பட்டால் பேட்டிங்கிலும் அமர்க்களப்படுத்தலாம். ஆக்லாந்து மைதானத்தை எடுத்துக் கொண்டால், நேர்பகுதி பவுண்டரி தூரம் மிகவும் குறைவானது. அதாவது 55 மீட்டர் தூரம் மட்டுமே கொண்டது. அதனால் ரன் மழை பொழியலாம்.

இங்கு இதுவரை 19 இருபது ஓவர் போட்டிகள் நடந்துள்ளன. இதில் நியூசிலாந்து அணி 6-ல் வெற்றியும், 10-ல் தோல்வியும் கண்டுள்ளது. 3 ஆட்டம் சமனில் (டை) முடிந்தது. இந்திய அணி இங்கு ஒரே ஒரு ஆட்டத்தில் ஆடியுள்ளது. கடந்த ஆண்டு நடந்த அந்த ஆட்டத்தில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை தோற்கடித்து இருந்தது.

இந்த மைதானத்தில் 5 முறை 200 ரன்களுக்கு மேல் எடுக்கப்பட்டுள்ளன. 2018-ம் ஆண்டு நியூசிலாந்து அணி 243 ரன்கள் குவித்ததும், அந்த இலக்கை ஆஸ்திரேலியா 7 பந்துகள் மீதம் வைத்து எட்டிப்பிடித்து வரலாறு படைத்ததும் நினைவு கூரத்தக்கது.

இந்த ஆட்டத்தின் போது மழை குறுக்கிட வாய்ப்புள்ளது. பெரிய அளவில் இல்லை என்றாலும் ஓரளவு மழை பெய்யலாம் என்று அங்குள்ள வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், விராட் கோலி (கேப்டன்), ஸ்ரேயாஸ் அய்யர், மனிஷ் பாண்டே, ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர் அல்லது ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் அல்லது யுஸ்வேந்திர சாஹல், முகமது ஷமி, நவ்தீப் சைனி, ஜஸ்பிரித் பும்ரா.

நியூசிலாந்து: மார்ட்டின் கப்தில், காலின் முன்ரோ, டிம் செய்பெர்ட், வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், காலின் டி கிரான்ட்ஹோம் அல்லது டேரில் மிட்செல், மிட்செல் சான்ட்னெர், சோதி, டிம் சவுதி, ஸ்காட் குஜ்ஜெலின், ஹாமிஷ் பென்னட்.

இந்திய நேரப்படி பகல் 12.20 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Next Story